Tuesday, June 19, 2018

பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடுமா

கேள்வி: பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடும் என்கிறார்களே? இன்னும் சிலர் சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடலாம் என்கிறார்களே?
பதில்:
சாதியை அழித்தொழிக்கும் வழி என்று அண்ணல் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியுள்ளார். அவர் கூட இப்படி எல்லாம் சாதியை ஒழிக்கலாம் என்று கூறவில்லை.
எப்படி ஏழை மக்களுக்குப் பயன்படக்கூடிய சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதை ஒரு பெரிய புரட்சி போல பரப்பினார்களோ, அதே போல் இதையும் விசமத்தனமாக ஒரு சாதனை போன்று பரப்புகிறார்கள்.
பெரும்பான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய சரியான அறிமுகம் இல்லா நிலையில், எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் பயன்படுமோ, அவர்கள் தான் இதை நம்பிப் பலியாவார்கள்.
இட ஒதுக்கீடு என்பது பல தலைமுறைகள் போராடிப் பெற்ற அரசியல் சாசன உரிமை. அது உங்கள் முன்னோர் உங்கள் குழந்தைகள் பெயரில் விட்டுச் சென்ற சொத்து. அதை விற்றுத் திங்க உங்களுக்கு உரிமை கிடையாது. இட ஒதுக்கீடு தனக்கு தேவையா இல்லையா என்று உங்கள் குழந்தை தான் முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் உயிரின வகையில் மனிதன். இனத்தால் திராவிடர். மொழியால் தமிழர். நாட்டால் இந்தியர். எனக்கு மதமே இல்லை என்று நீங்கள் எழுதிக் கொடுத்தாலும் அரசியச் சாசன வரையறைப் படி நீங்கள் கிறித்தவம், இசுலாம் போன்ற பிற நாட்டுச் சமயங்களைப் பின்பற்றாவிட்டால் தானாகவே இந்து என்று கணக்கில் கொள்ளப்படுவீர்கள். அந்த இந்து சமய நூல்கள் உங்களைச் சூத்திரன் (வேசி மகன்) என்றும் பஞ்சமன் (அதனினும் இழிவான தீண்டத்தகாதவன்) என்றும் தான் எழுதி வைத்திருக்கின்றன.
எனவே, சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடும் அப்துல்கலாம் தனமான பம்மாத்துகளை ஒழித்து விட்டு சாதிச் சான்றிதழில் உங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் சாசன உரிமையைப் பேணுங்கள்.

No comments: