Friday, January 04, 2019

சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபடுவதற்கான உரிமைப் போராட்டத்தை கிண்டலடித்து

சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபடுவதற்கான உரிமைப் போராட்டத்தை கிண்டலடித்து ஒரு பதிவு பல இடங்களில் கண்ணில் பட்டது. சபரிமலைக்கு செல்வதற்கான உரிமையைக் கேட்கின்ற பெண்கள் ஜல்லிக்கட்டிலும் கலந்து கொள்வார்களா என்கின்ற பொருளில் அந்தக் கிண்டல் பதிவு இருந்தது.
இதே பொருளில் எமது ஈழத்தை சேர்ந்த சிலரும் பதிவிட்டிருந்தார்கள் என்பதுதான் இதில் அதிர்ச்சியான விடயம். அந்தப் பதிவுகளுக்கு பல ஈழத் தமிழர்கள் விருப்புககுறியும் சிரிப்புக்குறியும் இட்டிருந்தார்கள். பெண்களை கலாய்த்து விட்டார்களாம். அப்படியே 'மாடு குத்தும்' என்பது போன்ற கொச்சைத்தனமான கேலிக் கருத்துக்களும், சிரிப்புக்குறிகளுமாக அந்தப் பதிவுகள் கிடக்கின்றன.
பெண்கள் டாங்கிகளை புரட்டியதையும், இராணுவ முகாம்களை தகர்த்ததையும், சிங்கள ஆண் சிப்பாய்களுடன் கைகலப்பு புரிந்து அடித்து வீழ்த்தியதையும் தங்கள் கண்களால் நேரடியாகப் பார்த்தவர்கள் இவர்கள். ஆனால் மாடு பிடிக்கச் சொல்லி வெட்கமே இல்லாமல் பெண்களை கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். தலைவர் பிரபாகரன் இல்லையென்றதும், எல்லா விடயங்களிலும் அவருக்கு முன்னதான காலப் பகுதிக்குள் சென்று விட்டார்கள்.
மாலதி படையணியின் போராளிகள் அலங்காநல்லூர் மைதானத்தில் இறங்கினால் காளைகளை அடக்கிவிட மாட்டார்கள் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? மனச்சாட்சி என்கின்ற ஒன்று இருந்தால் இந்தப் பதிவுகளை அழித்து விடுங்கள். அது தலைவர் பிரபாகரனுக்கு தருகின்ற மரியாதையாக இருக்கும்.

- வி. சபேசன்

No comments: