Sunday, June 06, 2021

மத்திய அரசு.. ஹிந்து மதம்.. இரண்டுமே மாயாபஜார்தான்..

 மத்திய அரசு.. ஹிந்து மதம்..
இரண்டுமே மாயாபஜார்தான்..

பல தடவை சொல்லி விட்டோம், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம். அரசியல் சாசன சட்டப்படி அதன்பெயர் யூனியன் ஆப் இந்தியா.

இந்த பாரத் மாதா கி ஜே என்பதெல்லாம், பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்திய போது அவனை எதிர்த்து போராட ஆரம்பித்தபோது வந்தவைதான்.

மன்னர்கள் ஆண்டபோது பாரதமாதா கான்செப்ட் எல்லாம் இல்லை..

பல்வேறு தேசங்களாக சமஸ்தானங்களாய் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடிமைப்படுத்தினான் வியாபாரி வடிவில் வந்த பிரிட்டிஷ்காரன்.  

அவன் நம்மை காலில் போட்டு மிதித்த போது வலி எடுக்கவே எல்லோரும் ஒன்று சேர்ந்து கதறினோம். அவனுக்கு எதிராக போராட ஆரம்பித்தோம். ஜெய் ஹிந்த் பாரத் மாதா இன்குலாப் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் எல்லாம் முளைத்தன.

இப்படி சுதந்திரப் போராட்டம் தேசபக்தி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து  சுதந்திரம் பெற்று இந்தியா என ஒரு அரசை பெற்றிருக்கிறோம்.

மத்திய அரசு என்பது பல தேசிய இனங்கள் கொண்ட மாநிலங்கள் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு ஏற்பாடு.. அவ்வளவுதான்..

இங்கே மாநிலங்கள் உண்டு. யூனியன் பிரதேசங்கள் உண்டு. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் உண்டு. ஆனால் மத்திய அரசுக்கு என எங்குமே ஒரு அடி நிலம் கூட சொந்தம் கிடையாது.

ராணுவம் விண்வெளி ஆராய்ச்சி  ரயில்வே என எந்த வகையிலாட்டும், அதன் அடிமனை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு சொந்தமாக தான் இருக்கும்.  உள்ளாட்சி அமைப்புக்கு கீழ்தான் வரும்.

மாநில அரசுகளிடம் இருந்து வரி வருவாய் வாங்கி அதில் தன் செலவுக்கு கொஞ்சம் போக மீதியைக் பகிர்ந்து கொடுப்பது தான் மத்திய அரசின் வேலை.

ராணுவம், ரிசர்வ் வங்கி, வெளியுறவுத்துறை விண்வெளி ஆராய்ச்சி ரயில்வே போன்றவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலக அளவில் இந்தியா என்ற தேசத்தின் தன் பிரதிநிதியாக செயல்படுவது மட்டுமே  மத்திய அரசின் வேலை. அதற்கான அடையாளமும் அவ்வளவுதான்.

இந்த இந்துமதமும் அப்படித்தான். மற்ற மதங்களைப் போல் இந்து மதம் எனப்படுவதற்கு ஒற்றைத் தலைமையோ இதுதான் பிறப்பிடம் என்றோ என்பதெல்லாம் கிடையாது.

பல்வேறு தேசிய இனங்களின் மத நம்பிக்கை அடிப்படையில் ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்ட ஒரு கற்பனைதான் இந்துமதம்.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற வேற்று மதங்களை சாராதவர்களை ஒரு குடையின் கீழ் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பெயர் வைத்தான், அதுதான் இந்து மதம்

தமிழனும் ஹிந்துதான். பீகார் காரன் ராஜஸ்தான்காரன் மலையாளி தெலுங்கன் ஆகியோரும் ஹிந்து தான்.

ஆனால் எல்லோருடைய இந்து மத நம்பிக்கையும் 100% ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?

நம்ம சிவனுக்கு அழகான முருகன் என்ற கடவுள் உண்டு. வடநாட்டான் சிவனுக்கு முருகன் என்ற கான்செப்ட்டே கிடையாது.

தமிழனுக்கு இந்தப் புராணம் இதிகாசம் எல்லாம் கிடையாது. அதிகபட்சம் பக்தி இலக்கியங்கள்தான்..

வடநாட்டு ஹிந்துவுக்கு திருக்குறள் தேவாரம் திருவாசகம் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் தெரியுமா?

இல்லை நமக்குத்தான் அவருடைய பக்தி இலக்கியங்கள் கலாச்சாரம் பண்பாடு போன்றவை பொருந்துமா?

பத்து நாட்கள் ரொட்டி சாப்பிடவில்லை என்றால் அவன் நாக்கு காலி. 10 நாட்கள் அரிசி சோறு சாப்பிடவில்லை என்றால் நம்முடைய நாக்கு காலி.

இந்தியனோ இந்துவோ, ஒரு கூட்டமைப்பின் அடிப்படையில் பன்முகத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தி தேசிய மொழி இல்லாவிட்டாலும் இங்கிலீஷ்  தெரியாத மற்றவர்களுக்கு தொடர்பு மொழியாக பயன்படுவதால் அதனை அனுமதித்து கொண்டிருக்கிறோம்.

வெளி உலக சூழலில் அவசியம் வரும்போது இந்தியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தேசத்தின் குடிமகனாக திகழ்கிறோம்.  தவிர மற்ற நேரங்களில் கூட்டாட்சித் தத்துவத்தின் அவரவர் மாநிலத்தின் தனித்தன்மையோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

No comments: