Friday, September 21, 2018

புரியும் வரை நீ ஆடு

அருமை இளைஞனே..
உன் தலையில் ஒரு காவி ரிப்பன் கட்டியிருந்தாய்.
புதிய டி ஷர்ட் அணிந்திருந்தாய்... அதில் வீரசிவாஜி படம் இருந்தது. உன் நெற்றியில் காவி செந்தூரம் இருந்தது...அந்த புதிய டி ஷர்ட் கிழே உன் பழைய டிரவுசர் அல்லது தூக்கி கட்டிய கைலி இருந்தது. கால்கள் எல்லாம் பழுப்பேறி இருந்தது.
உன்னை போலவே உங்களை சேர்ந்த ஒருவர் உங்களுக்கு தொகைகளை பிரித்துகொண்டிருந்தான். உங்களை போலவே ஆடையணிந்த சிலர் பறை அடிக்க நீங்கள் நகர்ந்தீர்கள்..
நாக்கை துறுத்திய படி நீ ஆட.. உன் சக தோழர்களும் அப்படியே ஆட....ங்கொத்த டே நல்லா குத்துடா... என நீ பறை தோழர்களை நோக்கி விசிலடித்து ஆடினாய்.... தன் கையில் இருப்பது ஆதிதமிழனின் பறை என்பது அறியாது , அது ஆலயங்களில் இருந்து தூக்கி எறியபட்டது அறியாது அவனும் அடித்தான்... மேற்கு தொடர்சி மலை அடிவாரம் தொட்டு அது எதிரொளித்தது..
உன் பின்னால் சிலர்.... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார்கள்... பாவம் அவர்களுக்கு வீரசிவாஜி டி ஷர்ட் கிடைக்கவில்லை. நெற்றியில் காவி செந்தூரம் இல்லை. வேர்வை கூட வராமல் நடந்து வருகிறார்கள்.
முன்னாடி உங்களில் ஒருவன் கணபதி பப்பா மோரியா என கத்துகிறான்.தொடர்ந்து ஏதோ கத்துகிறான். சாலையின் ஓரத்தில் நிற்கும் பெரும்பாலான கைகள் பிள்ளையாரை வழிபடவே இல்லை. ஏதோ ஒரு மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை கூட கும்பிட்டபடி வாகனத்தில் செல்பவர்கள் தான் அவர்கள்... ஆனால் உங்களை ஏதோ ஒரு பூச்சியை போலவே பார்த்தார்கள்.
உங்களை கடந்து சென்றேன்... நேற்றைய பயணம் முழுவதும். பிறகு மாலை கலவரம் கைது என்றதும் பார்த்தேன்... அந்த வெள்ளை வேட்டியோ சட்டைகள் இல்லை. அவர்களுக்கு பின்னால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் ஏசி காரில் வந்தவர்களோ ஒருவர் கூட இல்லை... அந்த கைதில்.... ஒரு ஸ்டேஷன் வாசலில்.. அந்த பிளாஸ்டிக் பறைகள் புடுங்கி வைக்கப்பட்டு இருந்தன... சிலர் அமர்ந்திருந்தார்கள்...
தாத்தா ரெட்டமலையில் தொடங்கி அம்பேத்கர் வழியாக பெரியார் சொன்ன எதுவும் உனக்கு வந்து சேரவில்லை என புரிந்தது... எப்படியும் இந்நேரம் உன்னை வெளியே எடுத்திருப்பார்கள் கூடுதலாக ஒரு இருநூறு கிடைத்திருக்கும். இனி அடுத்த ஆண்டு நீ தேவைப்படுவாய்.... காத்திரு இளைஞனே.
சாதீய கொடுவாள்கள் கொத்தாது இருந்தால்.. அடுத்தாண்டும் நீ ஆடு... உன்னை முன்னால் விட்டு அவர்கள் பின்னால் ஆடுவார்கள்... அது புரியும் வரை நீ ஆடு...

No comments: