Saturday, November 26, 2022

சனாதனக் கதை

 சனாதனம்.. சனாதனம் என்று சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான சுபமுகூர்த்த வேளையிலே.. சனாதனம் பற்றி நாமும் அறிந்து கொள்ள சனாதனத்தின் மிக முக்கியமான இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து கதைகள் சிலவற்றை அறிந்து கொண்டு சனாதனத்தின் சிறப்பை உணர்வோமாக!

சனாதனக் கதை - 1

யயாதியின் மகள் மாதவி

மஹாபாரதம் உத்தியோக பருவத்தில் இந்தக் கதை வருகிறது.

விசுவாமித்திரர் என்னும் அந்த மஹாமுனியிடம் சீடனாக இருந்து பொறுமை என்பதைக் கற்றுக் கொண்ட கலவன் என்னும் பிராமணன், விசுவாமித்திரரிடம், "நான் உங்களுக்கு ஏதாவது குருதட்சணை தர வேண்டும். தயவு செய்து என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றானாம். விசுவாமித்திரர் "எனக்கு எதுவும் தேவை இல்லை" என மறுக்க, மீண்டும் மீண்டும் கலவன் அவரைத் தொல்லை செய்து கொண்டே இருந்தானாம். விசுவாமித்திரர் கொஞ்சம் எரிச்சலாகி, "எனக்குக் கருப்பு நிறக் காதுகள் உடைய வெள்ளை நிறக் குதிரைகள் எண்ணூறு வேண்டும்" என்றாராம்.

"இப்படிப்பட்ட தரமான எண்ணூறு குதிரைகள் வாங்கிப் பரிசளிக்கும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே என்ன செய்வேன்? விஷ்ணுவிடம் சரணடைந்து கேட்கலாமா? என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கருடன் அவன் முன் தோன்றி, "வா நான் உனக்கு வழிகாட்டுகிறேன்" என்று தன் மீது அமர்ந்து கொள்ளச் சொல்லிப் பறந்தான்.

"உலகத்தில் பிராமணர்களுக்கு வேண்டிய செல்வத்தைத் தரவே அரசர்கள் இருக்கிறார்கள். வா உன்னை காசியை ஆளும் யயாதி என்னும் அரசனிடம் அழைத்துச் செல்கிறேன்" என்று யயாதியிடம் சென்றார்கள். யயாதியிடம் குதிரைகள் வேண்டும் என்று கேட்க, யயாதியோ "எண்ணூறு உயர்தரக் குதிரைகள் தரும் அளவுக்கு செல்வம் இல்லை. யாசகம் கேட்டு வந்த பிராமணர்களைத் திருப்பி அனுப்பினால் என்னுடைய குலமே அழிந்து விடும். செல்வம் இல்லாவிட்டாலும், என்னிடம் மாதவி என்னும் மகள் இருக்கிறாள். அவள் உலகமே வியக்கும் பேரழகி, அரசர்கள் முதல் அசுரர்கள் வரை அவள் கரம் பிடிக்கப் போட்டி போடுகிறார்கள். எண்ணூறு குதிரைகள் என்ன? இவளை எந்த அரசனுக்குக் கொடுத்தாலும் அவன் உலகத்தையே உங்களுக்குக் கொடுத்து விடுவான்" என்று கூறினார். கருடனும் "நான் உனக்கு வழி காட்டிவிட்டேன். இனி உன் திறமை" என்று கூறிவிட்டு பறந்துவிட்டார்.

அந்த கன்னிகையை அழைத்துக் கொண்டு கலவன் அயோத்தியை ஆண்ட ஹர்யாஸ்வா என்னும் இஷ்வாகு (ராமன் பிறந்ததாகக் கூறப்படும் வம்சம்) அரசனிடம் அழைத்துச் சென்று, "இவளை நீ மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உனக்கு நான்கு நல்ல மகன்களைப் பெற்றுத் தருவாள். ஆனால், அதற்குப் பதிலாக ஸ்த்ரீதனமாக  எனக்கு வெள்ளைநிறமும் கருப்புநிறக் காதுகளும் உடைய எண்ணூறு குதிரைகள் தர வேண்டும்" என்றார்.

அந்த மன்னன் "ஆஹா!இவள் பேரழகி தான். எனக்கு நன்மக்களைப் பெற்றும் தருவாள். ஆனால் என்னிடம் இருநூறு குதிரைகள் தான் இருக்கின்றன. நான் ஒரே ஒரு மகனை மட்டும் இவள் மூலம் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னானாம்.

இதைக் கேட்ட மாதவி கலவனிடம், "ஐயா.. பரவாயில்லை. எனக்கு உறவு கொண்டு குழந்தை பெற்றாலும் மீண்டும் கன்னித்திரை உருவாகி விடுகிற வரம் இருக்கிறது. அதனால், நீங்கள் நான்கு மன்னர்களிடம் என்னை அழைத்துப் போய் குழந்தை பெற வைத்து எண்ணூறு குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாளாம்.

அது போலவே செய்து அந்த மன்னனுக்குக் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை விட்டுவிட்டு மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் என்னும் அந்த பிராமணர் அடுத்த மன்னனைப் போய்ப் பார்த்தார். அவன் பீமஸேனனின் மகனாகிய திவோதசன். திவோதசனும் "நானும் இதை ஏற்கனவே கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகப்பெரிய மரியாதை" என்று கூறி மாதவியை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளைக் கொடுத்தானாம்,

அடுத்ததாக மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் போஜ அரசனாகிய உசீநரனிடம் சென்றார். அவனும் முன்னவர்களைப் போலவே ஒரே ஒரு குழந்தையை மட்டும் மாதவி மூலம் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளை மட்டும் கொடுத்துவிட்டானாம்.

கலவன் அறுநூறு குதிரைகளையும், மாதவியையும் வைத்துக் கொண்டு அடுத்து யாரிடம் போகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கருடன் அவரிடம் வந்து, மீதமிருக்கும் இருநூறு குதிரைகளுக்கு பதிலாக விசுவாமித்திரருக்கு இந்த மாதவியைக் கொடுத்து ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்று யோசனை கூற, அது போலவே விசுவாமித்திரரிடம் சென்று கலவன் கூறினான். விசுவாமித்திரரோ, "இதை நீ முன்பே சிந்தித்து இருந்தால், இவ்வளவு பேரிடம் போக வேண்டிய தேவை இல்லை. நானே, மாதவியுடன் கூடி நான்கு மகன்களைப் பெற்றிருப்பேனே?" என்று கேட்டு, மாதவியையம் அறுநூறு குதிரைகளையும் பெற்றுக் கொண்டு கலவனை அனுப்பிவிட்டாராம்.

மாதவியுடன் கூடி விசுவாமித்திரர் அஷ்டகன் என்னும் மகனைப் பெற்றெடுத்து அவனிடம் அறுநூறு குதிரைகளை விட்டுவிட்டு, மாதவியை மறுபடியும் கலவனிடம் கொடுத்துவிட்டாராம்.

கலவனும் மாதவியிடம் "பெண்ணே! நீ என்னையும் உன் தந்தையையும் நான்கு மன்னர்களையும் உன் மகன்களைப் பெரும் சக்தியால் காப்பாற்றிவிட்டாய். சென்று வா!" என்று கூறி தந்தை யயாதியிடம் கொடுத்து விட்டான்.

இதற்கு மேலும் தனக்கு மணவாழ்க்கை வேண்டாம் என்று எண்ணிய மாதவி துறவறம் பூண்டு காடுகளில் வாழ்ந்து மடிந்தாள்.

---------------------------------------------------------------------

இது ஒரு கதை தான். உண்மையான நிகழ்வு என்று நாம் கூறவில்லை. ஆனால், இப்படி ஒரு கதை எழுதப்பட்டதும் அது மிகப்பெரும் இதிகாசத்தில் பகுதியாக இன்றும் இருப்பதும் உண்மை.

இந்தக் கதையை எழுதியவர் வேதங்களைத் தொகுத்த, பிரம்மசூத்திரம் என்னும் வேதாந்தத்தின் அடிப்படை நூலை எழுதிய, பல புராணங்களை எழுதிய ரிஷி என்று சனாதனிகள் நம்புகிற வேதவியாசர்.

இந்தக் கதை மூலம் மக்களுக்கு அவர் சொல்ல விரும்பியது என்ன?

1.பிராமணர்கள் தானம் என்று கேட்டால் மறுத்தால் வம்சமே அழிந்து விடும்.

2. அவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தே ஆக வேண்டும்.

3. தந்தை தன்னைத் தானமாக எவனோ ஒருத்தனுக்குக் கொடுத்தாலும் எந்த எதிர்ப்பும் இன்றி சென்றுவிட வேண்டும்.

4. தானம் வாங்கியவர் தன்னை எப்படி பயன்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

5. பிள்ளை பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய கடமையை எவன் செய்யச் சொன்னாலும் பெண் செய்ய வேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி தன்னுடையதும் தான் சார்ந்த கூட்டத்தின் நலத்தையும் மற்றவர்கள் எப்பாடுபட்டாவது எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்தாவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். இந்த சனாதனம் நாட்டை அல்ல; ஒரு சிறு கூட்டத்தை மட்டுமே கட்டிக் காக்கிறது என்பதே உண்மை.✍🏼🌹

No comments: