Sunday, June 02, 2019

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார்

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “இந்தியாவின் மிகக் கொடூரமான பிரச்சனை என்னவெனில், அதீத பிரக்ஞையுடனும், ஆழ்ந்த கவனத்
துடனும் உள்ள ஒரு சிறுபான்மைச் சமூகம் (பார்ப்பனர்கள்), உருவமற்ற, அறியாமைக்குரிய பெரும்பான்மைச் சமூகத்தை எப்பொழுதுமே
தங்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளை விதித்தபடியே வைத்துள்ளது என்கிறார். இது பார்ப்பனர்கள் வடிவமைத்த சாதியின் குணாம்சங்களில் செயல்படுத்தப்படுகிறது. சாதி ஏற்றத்தாழ்வு என்பது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான நோய். இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்களினாலேயே சாதி கண்டுபிடிக்கப்பட்டது, இறக்குமதி
செய்யப்பட்டது, செயல்படுத்தப்பட்டது.” ரோமிலா தாப்பரின் ஆரியர்கள் படையெடுக்கவில்லை, அலை, அலையாக வந்தனர் என்ற வாதத்தினை மறுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நவீன மரபணுச் சோதனைகளை விரிவாக ஆய்ந்த ஆந்திரப்பல்கலைக்கழகம், ஆரியர்கள் படையெடுத்தே வந்தனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் மீண்டும் எழுதுகிறார். பார்ப்பனியத்தின்
வர்ண, சாதி அமைப்பின் ஆறு முக்கிய கொள்கைகளாக...
1. பல்வேறு வர்க்கங்களிடையே படிநிலை சமநிலையின்மையை உருவாக்குவது.
2. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள், ஆகியோர்களை எப்போதும் முற்றிலும் நிராயுதபாணிகளாக வைத்திருப்பது.
3. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களை எப்பொழுதும் கல்வி கிடைக்காதபடி முற்றிலும் தடை விதிப்பது.
4. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் அதிகாரமும், தலைமையும் வகிக்கும் இடங்களை முற்றிலும் தடை செய்வது.
5. சொத்துகளின் மீதான உரிமைகளை முற்றிலும் தடை செய்வது.
6. பெண்களை முற்றிலும் அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பது.
இந்த ஆறு கொள்கைகளையும் உள்ளடக்கி அம்பேத்கர் இறுதியாகச் சொல்வது என்னவெனில்.
சமநிலையற்றதன்மை (Inequality) என்பதே பார்ப்பனியத்தின் (இன்று, இந்துமதத்தின்) அதிகாரபூர்வமான கொள்கை என்கிறார். எனவே இந்துமதத்தினை விட்டு அனைவரும் வெளியேறவேண்டும் என்றார்.

இந்தியாவின் நோய்க்கூறுகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் புத்தர். அதை ஒரு சித்தாந்தமாக மாற்றி செயல்திட்டத்தை வரைத்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. இவர்கள் இருவரையும் இணைத்து செரித்து சமநிலையின்மைக்கு எதிரான அதிகார பூர்வமான கோட்பாடுகளை உருவாக்கி செயல்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர். சமூக மாற்றம் (social change) மட்டுமே தீர்வைக் கொண்டு வரும் என்று நம்பினார். எனவேதான் நல்ல
இந்துவாகவும், தீண்டாமையை ஒழிப்பவராகவும் காட்டிக் கொண்ட காந்தியை விமர்சித்தார். அப்படி ஒருநிலைப்பாடு,
சமூகசீர்த்திருத்தம் (social tranformation) என்பதை பொய்யென்றார். இந்து மதத்திலிருந்து என்ற நிலையினை கவனத்தில் கொள்ளாத, மேலோட்டமான
வர்க்கப் போராட்டம் என்பதையும், அது சாதிய இந்தியாவில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று கேள்விக்குள்ளாகுகிறார்.

No comments: