Sunday, May 21, 2017

திமுகவும்......புலிகளும்,.....

1989 ல் துவங்கி 1991 வரையிலான காலகட்டத்தில் புலிகளால் திமுக அடைந்த அவப்பெயரும், ஆட்சி இழப்பும் மிக மோசமானது.
.
13.05.1985ல் கலைஞர், வீரமணி, நெடுமாறன் மூவராலும் துவங்கபட்ட டெசோ அமைப்பின் சார்பாக 1986 ல் சென்னை மெரீனா சீரணி அரங்கில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அனைத்து போராளி குழுக்களுக்கும் கலைஞரால் நிதி உதவி வழங்கப்படவிருந்த நிலையில் L.T.T.E சார்பில் அதை ஏற்காமலும் நிகழ்ச்சிக்கே வராமலும் தவிர்த்தவர் பிரபாகரன். அதற்கு காரணம் இந்த கூட்டத்துக்கு சில நாட்கள் முன்புதான் 1986 மே மாதம் ஈழத்தில் TELO இயக்கத்தை சேர்ந்த போராளிகளை நூற்றுக்கணக்கில் கொன்று குற்றுயிரும், குலையுயிருமாக வீதிகளில் வீசி டயர்களை போட்டு எரித்து கொன்றதையும், அந்த இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்திடம் சமரசம் பேசுகிறோம் என்ற பெயரில் கண்களில் துப்பாக்கியை வைத்து சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு குரூரமாக சுட்டுக்கொன்றதையும் மிகக்கடுமையாக சாடி சகோதர யுத்தம் வேண்டாம் என்று கலைஞர் விட்டிருந்த அறிக்கை. அதை விட தீவுத்திடலில் நடந்த அந்த டெசோ கூட்டத்தில் மிகப்பிரமாண்டமாக சபாரத்தினத்தின் கட்டவுட் ஒன்று வைக்கப்படிருந்ததும் சபாரத்தினத்துக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்திருந்ததும் புலிகளுக்கு பிடிக்காமல் போனதுதான்.(1983 இலங்கை கலவரத்தில் வெளிக்கடை சிறையில் கொடூரமாக கொல்லப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்றவர்கள் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). எம்.ஜி.ஆர் இருந்த வரை இந்த புலிகளுக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்ற இறுமாப்புடன் அலட்சியமாக இருந்தனர்.
.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த போது இலங்கைக்கு சென்ற அமைதிப்படையோடு புலிகள் போராட துவங்கியிருந்தனர். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு 1989 ல் தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது...தொடர்ந்து மத்தியில் வி.பி சிங் அரசு இருந்தது. அதிமுகவும் ஜா. அணி, ஜெ. அணி என இரு அணிகளாக பிரிந்திருந்தன. இந்தியாவிலும், தமிழகத்திலும் மாறியிருந்த அரசியல் சூழலில் புதிதாக ஆட்சியமைத்த மத்திய மாநில ஆட்சியாளர்களிடம் நெருங்க புலிகளுக்கு ஒரு தரகர் தேவைப்பட்டார். அதற்கு அவர் அன்றைய திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். அதனை தொடர்ந்து 1989 ல் முதல்வர் கலைஞரிடம் சொல்லாமல், கொள்ளாமல் சட்டத்துக்கு புறம்பாக மிக ரகசியமாக ஈழத்துக்கு கள்ளத்தோணியில் பயணப்பட்டார் அந்த மாநிலங்களவை உறுப்பினர். இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்துக்கு எதிராக இலங்கையில் போர் புரிந்து வந்த விடுதலைப்புலிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் திமுகவின் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் சென்று வந்தது திமுகவுக்கும், தலைமைக்கும் பெரும் சங்கடங்களை உருவாக்கியது. அதுவரை அனைத்து இயக்கங்கள் மீதும் பரிவுடன் அணுகிய திமுகவில் அவர் இலங்கை சென்று திரும்பி வந்த பிறகே அனைத்து போராளி அமைப்புகளுக்கும், அப்பாவி ஈழ தமிழர்களுக்குமான திமுகவின் ஆதரவு குரலை, விடுதலை புலிகளுக்கான ஆதரவு குரலாக மட்டுமே உருவாக்க இங்கே அரசியல் கட்சிகள் பயன்படுத்த துவங்கின.கள்ளத்தோணியில் சென்று திரும்பியவரும் தலைமையை முழுமையாக விடுதலைபுலிகளை நோக்கி மட்டுமே திருப்ப தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
.
இதற்கிடையே திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து ஒன்று பட்ட அதிமுகவாக இரட்டை இலையை மீட்டிருந்தது. அந்த நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக வாழப்பாடி நியமிக்கப்பட்டார். ஒன்று பட்ட அதிமுகவுக்கு ராஜீவ் ஆதரவு கொடுத்தார். அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்தி பழியை சுமத்தி திமுக ஆட்சியை கலைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் கோடம்பாக்கத்தில், ஜக்கிரியா காலனியில் மற்றொரு போராளி குழுவான E.P.R.L.F தலைவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர் ஒரே நாள் இரவில் சுட்டுகொல்லப்பட்டனர். இதர போராளிகுழுக்களை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக செயல்பட்டுக்கொண்டிருந்த முதியவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்களையும் கொன்றனர் புலிகள். தங்களை தவிர்த்து வேறு எந்த அமைப்பையும் செயல்பட விடாமல் முழுமையாக அழித்தொழித்தனர் புலிகள்.
.
இதனிடையே திமுகவின் கோரிக்கையால் இலங்கையிலிருந்து அமைதிப்படையை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அமைதிப்படை சென்னை வந்த போது அதை வரவேற்க போகப்போவதில்லை என்று கலைஞர் தெரிவித்தார்.
.
இதனிடையே வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் ஒன்று பட்ட அதிமுகவுக்கு பொது செயலாளராக உருவாகியிருந்த ஜெ, சோ, சுப்ரமணிய சாமி எல்லோரும் சேர்ந்து விடுதலைபுலிகளுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர் பிரச்சாரங்களை செய்து வந்தனர். இதற்கிடையில் மத்தியிலும் வி.பி சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் அந்த ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து சந்திரசேகர் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்து கொண்டார். சுப்ரமணிய சாமி அமைச்சரானார். சுபோத் காந்த் சகாய் என்ற மத்திய உள்துறை இணைஅமைச்சரை சென்னைக்கு அனுப்பி சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதாக மீடிவிடம் சொல்ல வைத்தார்கள். தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக அறிக்கை அனுப்பும்படி அன்றைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களிடம் மத்திய அரசு நிர்பந்தம் செய்தது. அவர் அறிக்கை கொடுக்க மறுக்கவும், ஆளுநர் பரிந்துரையில்லாமலேயே மத்திய அரசின் பரிந்துரையோடு அன்றைய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் திமுக ஆட்சியை கவிழ்த்தார். அதன் பிறகு சில நாட்களில் மத்தியிலிருந்த சந்திரசேகர் அரசும் ராஜீவ் வீட்டை உளவு பார்த்ததாக காங்கிரசால் குற்றம்சாட்டப்பட்டு கவிழ்க்கப்பட்டது. மக்களவை கலைக்கப்பட்டது.
.
அதனை தொடர்ந்து 1991 மே மாதம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் விடுதலை புலிகளின் தற்கொலை படையை சேர்ந்த மனித வெடிகுண்டான தணு என்ற பெண்ணால் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப்பழியும் திமுக மீது விழுந்தது. அதனால் பொது தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மத்திய உளவுப்பிரிவு மாநில அரசுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் வை.கோபாலசாமியின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைபுலிகள் கருணாநிதியை கொல்ல சதி என்று ஒரு தகவலை தெரிவித்திருப்பதாக கலைஞர் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். இந்த செய்தி அரசிடமிருந்து தனக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களால் புலிப்பிரியர்கள் பெரும்பாலானோர் திமுகவிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டனர். இப்படி பல காலகட்டங்களில் விடுதலை புலிகளால் திமுக அனுபவித்த பழிகளும், சங்கடங்களும் ஏராளம்.
.
அதனாலதானோ என்னவோ பழைய சம்பவங்களை தெரிந்த திமுக ஆளுங்க இப்பெல்லாம் 2009 இறுதி போர் குறித்து கலைஞரை சாடும் போதெல்லாம் பதிலுக்கு புலிகளையும், பிரபாகரனையும் கடுமையா சாடுறாங்க.

No comments: