Tuesday, October 17, 2017

சாமானிய மக்கள் & தீபாவளி

அன்புள்ள பால குமாரன் அவர்களே,
முன்னெல்லாம் தீபாவளிக்கு மூன்று நாளுக்கு முன் இருந்து வெடி வெடிக்கும் சத்தம் கேட்கும், தீபாவளி கழித்து இரண்டு நாள் கேட்கும், தற்போது அந்த நிலையில்லை, சமீப வருடமாகவே இல்லை. சமூகத்தின் கேளிக்கைகள் மாறிக்கொண்டு வருகிறது, வெடி வெடிப்பது மிக பெரிய உற்சாகத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை, தொலைக்காட்சி, மொபைல், கேம்ஸ் என்று கேளிக்கைகள் விரிவடைந்து விட்டது, தற்போது தீபாவளி என்பது சம்பிரதாயமாகவே கொண்டாடப்படுகிறது.
அது மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட காலத்திலே கூட, அது ஒரு ஹிந்து பண்டிகை என்றோ, நரகாசூரன் கொல்லப்பட்டான் என்று வெஞ்சன்ஸோடு மக்கள் கொண்டாடவும் இல்லை. அதை ஒரு பழம் கதையாக காதில் கேட்டு ஓரம் போட்டு, வருடம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு இயல்பாக இருக்கும் கொண்டாட்டத்தின் தேவை காரணமாக தான் வெடி வெடிப்பதும், இனிப்புகளை பரிமாறி கொள்வதுமாக இருக்கிறது.
அதிலும், பார்ப்பனிய வழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள் அதிகாலை ஆட்டுக்கறிகடையில் நிற்பவர்கள்.
நீங்கள் ஆத்திக சாயம் பூசி என்ன கதைகளை கற்பித்தாலும் கொண்டாட்ட முறைகளை பொறுத்து தான் அந்த பண்டிகை எப்படி பிரசித்தி பெறுகிறது என்பதை வரையறுக்க முடியும்.
அந்த வரிசையில் தீபாவளி ஆகட்டும், ஹோலி ஆகட்டும், ஏன் ஸ்பெயினில் நடக்கும் la tomatino என்கிற தக்காளி அடித்து கொள்ளும் விழாவே இங்கு வந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கும். இது விழாக்களுக்கே உள்ள இயல்பு.
ஆத்திகர்கள் நீங்கள் போய் இதன் அடிப்படையை விளக்கினாலும், நாத்திகர்கள் விளக்கினாலும், சாமானிய மக்கள் இதையெல்லாம் கேட்பதாயில்லை.
ஏனினில் அவர்கள் பெரும்பாலான விழாக்களை அதன் வரலாறு, ஆதி மூலம் அறிந்து, அதற்காக கொண்டாடுவதில்லை.
வண்ண பட்டாசுகளை ரசிக்கவும், தின்பண்டங்களை வாங்கவும்; ருசிக்கவும்; அடிப்படை புலன்கள் போதுமானது. நீங்கள் பெருமை பீற்றி கொள்ளுமளவு இதை ஆத்திகத்தின் வெற்றியாக பார்க்கும் அளவு பார்ப்பனியத்தின் புல்லுருவித்தனங்களை அறியாதவர்கள் தான் பெரும்பான்மையான மக்கள்.
மக்கள் இனிப்புகளை வாங்கி செல்வதெல்லாம் நாத்திகத்தின் தோல்வியாக நினைப்பதின் மூலம் உங்கள் மனம் நிம்மதியடையுமென்றால், அதை நான் ஏன் கெடுப்பானேன்.
சர்க்கரை நோய் அதிகமாகியிருப்பதும், டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகியிருப்பதும் கூட ஆத்திகத்தின் வெற்றியாக இருந்துவிட்டு போகட்டுமே!

No comments: