Wednesday, November 27, 2019

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு *மூன்று ஆண்டு சிறை * என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது அது குறித்து பெரியார் என்ன எழுதினார்?

“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.

அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.

No comments: