கலைஞர் ஒரு சகாப்தம்...
கலைஞர் பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது...
ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் *தலைவர் யு.கிருஷ்ணாராவ்.
எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆக ஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது.
முதல் நாள்!
முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்?
17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா,கலைஞர், அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை,ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.
என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?”என்று கேட்கிறார் நெடுஞ்செழியன்.நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி" என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கலைஞர். கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார் ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். இல்லைண்ணா என்று நெளிந்தார் கலைஞர். வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கலைஞர்.
கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். "நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்" என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.
சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும்* *ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கலைஞர். அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கலைஞர் ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கலைஞர். கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கலைஞர் பாணி.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி" என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, "இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கலைஞரை பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கலைஞர்.
அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கலைஞர் பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”
அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கலைஞரை கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.
தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கலைஞர், "தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கலைஞருக்கு கைவந்த கலை.
அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கலைஞர் பேசும்போது, ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனை சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரை போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கலைஞர் அவர்கள் ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் *மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால்,கலைஞருக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.
சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது.அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கலைஞர் பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கலைஞர். இந்தப் பேச்சுக்கு பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள* அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு சென்றுள்ளார் கலைஞர்.
தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கலைஞர் வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டு பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமை பிரச்னை கொண்டு வந்தார். "இது எனக்குத் தெரியாமல்* *நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கலைஞர்". "தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கலைஞர் மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?
கலைஞர் நிரந்தரம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கலைஞர் தலைவர் அல்ல, கலைஞர் தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன., இருக்கின்றன.கலைஞர் என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கலைஞரால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால்,முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல். அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கலைஞர் என்ற பிம்பம். சிலருக்கு அவரை பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கலைஞர் என்ற பிம்பம்.
கலைஞர் ஒரு சகாப்தம்...
அவர் புகழ் ஓங்குக...
Tuesday, June 29, 2021
கலைஞர் ஒரு சகாப்தம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment