இந்தியர் என்ற இனம் வரலாற்றில் இதுவரை இருந்ததுமில்லை; இப்போதும் இல்லை; எதிர்காலத்தில் அப்படி ஓர் இனம் உருவாக வாய்ப்பும் இல்லை! இந்தியா என்ற இந்த பரந்து விரிந்த துணைக்கண்டத்தில் வாழும் மக்களை, பொதுவாக, இந்தியர் என்று உலகில் அடையாளப்படுத்துகிறார்கள். இந்தியா என்ற நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியர்கள். அது ஒரு சட்டபூர்வ தகுதிநிலை. இந்தியர் என்று ஒரு தேசியஇனமும் இல்லை. பார்ப்பனீயத்தில் தோய்ந்த ஆசிரியர்கள் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது "நேஷனாலிடி" என்ற இடத்தில் இந்தியன் என்று குறித்து, ஒரு உளவியல் உருவாக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாகச் செய்தார்கள். அவர்களிடம் பயின்ற, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மற்றவர்களும் அதையே செய்தார்கள். இப்படித்தான் விண்ணப்பங்களில் நேஷனலிடி என்ற இடத்தில் இந்தியர் என்று அனைவருமே குறிப்பிட்டு வருகிறார்கள். அப்படி குறிப்பிடாவிட்டால் அந்த இடத்தில் வேறு என்ன போடுவது என்பது எவருக்கும் புரியாத ஒன்று. முழுமையடையாத விண்ணப்பத்தை அலுவலகங்கள் பெற்று பெற்றுக் கொள்வதும் இல்லை. அப்படி இந்தியர் என்று குறிப்பிடாவிட்டால், அது தேசதுரோகமாகவும் கருதப்படுகிறது. ஆகவே பிரச்சனை இல்லாமல் "இந்தியர்" என்று அனைவரும் போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இந்தியர் என்று ஓர் இனம் இல்லை. இந்தியர் என்பது குடியுரிமை (citizenship) தான்; இனம் (nationality) இல்லை. 1947 வரை இந்தியராக இருந்தவர்கள், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு திடீரென்று பாகிஸ்தானியர் ஆனார்கள். இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த இந்தியாவினுடைய வடமேற்கு பகுதியும், கிழக்குப் பகுதியில் வங்கத்தின் ஒரு பாதியும், பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானிய பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்கு இந்துக்கள் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் கலவரச் சூழலுக்கு அஞ்சி பாகிஸ்தானியப் பகுதிக்கும் கிழக்கு வங்காளப் பகுதிக்கும் இடம்பெயர்ந்தார்கள். அப்படி இடம்பெயர்ந்தவர்கள் ஒரே நாளில் பாகிஸ்தானியர் ஆகிவிட்டார்கள். கிழக்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து இன்றைய மேற்குவங்கம் நோக்கி வந்தவர்கள் இந்தியர் ஆகிவிட்டார்கள். மேற்கு வங்கப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி சென்ற இஸ்லாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானியர் ஆளானார்கள். அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து, 1971-இல் திடீரென்று வங்காளதேசிகள் ஆகிவிட்டார்கள். ஒரு மக்களின் இனம் ஒரே நாளில் இப்படி மாறுமா? மேற்கு வங்கத்தில் இருந்தாலும், கிழக்கு வங்காளத்தில் (வங்கதேசம்) இருந்தாலும் அவர்கள் வங்காளிகளே. அதுதான் அவர்களுடைய இனம். இந்தியா- பாகிஸ்தான் என்று பஞ்சாப் பிளக்கப்பட்டபோது, பஞ்சாபில் பாதி பாகிஸ்தானிலும், மறு பாதி இந்தியாவிலும் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பஞ்சாபியர்கள் இந்தியர்கள்! பாகிஸ்தானியப் பகுதியில் இருக்கக்கூடிய பஞ்சாபியர்கள் பாகிஸ்தானியர்கள்! இருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகள். ஆனால், இங்குள்ளவர்கள் இந்தியர்களாம்! அங்குள்ளவர்கள் பாகிஸ்தானியர்களாம்! இனம் வெவ்வேறாக ஆகிவிட்டதாம்! 1947இல் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்ட நிலையில், பாகிஸ்தானியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்களில் ஒருவர் பா.ஜ.க மூத்தத் தலைவராகிய எல்.கே. அத்வானி. இன்று அவர் இந்தியர்! இங்கே வந்ததால் அவர் இந்தியர்! அவ்வாறின்றி, பாகிஸ்தானியப் பகுதியிலேயே அவர் தொடர்ந்து தங்கி இருந்திருந்தால், அவர் ஒரு பாகிஸ்தானியர். 1947 ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டை வரைந்த ஆங்கிலேய அதிகாரி ராட்கிளிஃப். அவர் வரைந்த ஒரு பென்சில் கோடு இந்த மக்களின் இனத்தை நிர்ணயிக்கிறது. வியப்பாக இல்லையா? அப்படி நிலப்பரப்பை பிரிக்கும் ஒரு கோடு மக்களின் இனத்தை நிர்ணயிக்க முடியுமா? இனம் என்பது நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக் கூடியதா? இந்தியராக 1947 வரை இருந்தவர்கள் திடீரென்று நள்ளிரவில் பாகிஸ்தானியராகவும், பிற இனத்தவராகவும் மாற இயலும் என்றால், ஓரினம் நினைத்த மாத்திரத்தில் மாற்றப்படக் கூடியதா? நினைத்த மாத்திரத்தில் இனம் அப்படி மாறுமா? 17 ஆகஸ்ட் 1947 - அன்று வரையப்பட்ட ராட்கிளிப் கோடு என்ன மந்திரக் கோடா? சிக்கிம் என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது. இமயமலைத் தொடரில் உள்ள இந்திய மாநிலம் அது. 1975 இல் ஒரே நாள் இரவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1975மே 16-க்கு முதல்நாள்வரை அது ஒரு தனி நாடாக விளங்கியது. அதுவரை அவர்கள் இந்தியர்கள் இல்லை. நேபாள மொழிதான் சிக்கிம் என்ற நாட்டிற்கான அதிகாரபூர்வ மொழி. சிக்கிம்காரர்களாக இருந்தவர்கள், 16 மே 1975 இரவுக்குள் திடீரென்று இந்தியர்கள் ஆனார்கள். மொழி யடிப்படையில் அவர்கள் நேப்பாளிகள். சிக்கிமுக்கு அருகாமையில் வடக்கே சீனாவும், கிழக்கே பூட்டனும் இருக்கின்றன. சீனா அதைக் கைப்பற்றி இருந்தால், இன்றைய சிக்கிம் இந்தியர்கள் சீனர்களாக இருந்திருப்பார்கள். பூட்டான் கைப்பற்றி இருந்தால் பூட்டானியராகி இருந்திருப்பார்கள். சிக்கிமைப் பொறுத்தவரை, துப்பாக்கியின் வலிமைதான் ஒரு மக்களினுடைய இனத்தையே நிர்ணயித்திருக்க்கிறது. 1947 இந்திய விடுதலைப் போரின்போது சிக்கிம் தனியரசு; அதுவும் விடுதலை அடைந்தது. அப்போதும்கூட சிக்கிம் மக்கள் இந்தியர்கள் இல்லை. அங்கே முடியாட்சி நிலவியது. இந்திரா காந்தியின் அதிரடி நடவடிக்கையால் ஒட்டுமொத்த சிக்கிம் மக்களுக்கும் இந்தியர் என்று பச்சை குத்தப்பட்டு விட்டது. இந்தியா என்பது இன்று இருக்கிறது. இந்தியா என்ற பெயரில் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழும் இருந்தது. ஒரு பெரிய நிலப்பரப்பாக இதற்கு முன்பும் பலர் ஆட்சியில் இது இருந்து வந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆட்சி ஆப்கானிஸ்தான்வரை பரவியிருந்தது. அதையும் இந்தியா என்றுதான் இப்போது வரலாற்று எடுகளில் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியை ஆங்கிலேயர்தான் இந்தியா என்று ஒருங்கிணைத்து அதிகாரபூர்வமாகப் பெயரும் குறிப்பிட்டார்கள். அதனால், இங்கு இருந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள். 1937 - இல் இப்பகுதியிலிருந்து பர்மா (இன்று மியான்மர்) பிரிக்கப்பட்டது. 1937 முதல் 1948 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பர்மா இருந்தது. அதன்பிறகு விடுதலை பெற்றது. 1937-இல் இந்தியாவிலிருந்து பிரியும்வரை பர்மா மக்களும் இந்தியர். இப்போது அவர்கள் பர்மியர். அங்கே இந்தியர் எனப்படுவோர் 2% மட்டுமே. ஆகவே, இந்தியர் என்பது இனப் பெயர் இல்லை என்பதும், அது சட்டபூர்வக் குடியுரிமைத் தகுதியைக் குறிக்கும் சொல்தான் என்பதும், அரசியல் களத்திற்கு வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய அரிச்சுவடி ஆகும். அவ்வாறெனில், இனம் என்பது எது? இன்றைய நிலையில், மரபினங்களைத் தனித்து அறியமுடியாது. வரலாற்றுப் போக்கில் தேசியஇனங்களாகவே மாந்த இனம் இருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்தையும் அதன் மொழிதான் அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர், ஜெர்மானியர், ஜப்பானியர்,தமிழர், மராட்டியர், வங்காளியர்-என்று அனைத்து தேசிய இனங்களும் மொழியால் அறியப்படுகின்றன. அது தான் இனம். ஒரு நாட்டின் குடியுரிமையைப் பல வழிகளில் பெற முடிகிறது. இன அடையாளத்தை அப்படிப் பெற முடியாது. 1955 -இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி இந்தியாவில் 12 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்திருந்தால் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். இந்தியாவில் குடியிருக்கும் ஒருவர் இந்தியர் ஒருவரை மணம் செய்துகொண்டு, இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் அவர் இந்தியக் குடியுரிமை பெறலாம். சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் 2020 ஜனவரி 10 அன்று நடைமுறைக்கு வந்தது (விதிமுறைகள் இன்னமும் வகுக்கப்படவில்லை). அதன்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், ஆறு ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருந்தால், அதாவது 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவிற்குள் குடியேறி இருந்தால், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆகவே, 2014 டிசம்பர் 31-க்கு முன்பு அவர்கள் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்காளிகள். இந்த சட்டத் திருத்தத்தின் படி " இந்தியர்கள். இங்கே மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியர் என்பது இனம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமய சார்பற்றுப் பேசக்கூடியவர்கள் தங்களை இந்தியர் என்று அடையாளப்படுத்தும் அதே நேரம், இந்துத்துவ வெறியர்கள் தங்களை பாரதீயர்கள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர்கள் மட்டுமின்றி, பிற சாதியினரும் பாரதீயர்களாக தங்களைக் கூறிக்கொள்கிறார்கள். நன்கு ஆய்வு செய்து பார்த்தால், இந்தியா முழுவதும் உள்ளவர்களில் "பூணூல் பெருமை"யை ஏற்பவர்கள் பாரதீயர்கள் என்ற பெயரை ஏற்கிறார்கள். அதை ஏற்காதவர்கள் இந்தியர்கள். ஓர் இனத்தைப் பூணூல் பெருமை நிர்ணயிக்குமா? ஆகவே இந்தியர் என்றோ பாரதீயர் என்றோ ஓர் இனம் இருக்க முடியாது. பாகிஸ்தானிய இஸ்லாமியத் தலைவர்களுள் ஒருவரான அப்துல் வாலி கான் 1986இல் மதசார்பற்ற இடதுசாரி பஷ்தூன் தேசியவாதக் கட்சியை நிறுவியவர். பட்டாணிய இனத்தை சேர்ந்த முக்கிய தலைவரான கான் அப்துல் கபார் கான்- இன் மகன். அவர் தன் இன அடையாளத்தை இவ்வாறு குறிப்பிட்டார்: " நான் கடந்த 50 வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன். 500 ஆண்டுகளாக முஸ்லிமாக இருக்கிறேன். ஆனால் 5000 ஆண்டுகளாக பட்டானாக இருக்கிறேன்." அதுதான் உண்மை. இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் பலரும் 73 ஆண்டுகளாகத்தான் இந்தியர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு மொழியினத்தவராக இருக்கிறார்கள். தமிழை அடையாளமாகக் கொண்ட மக்கள் தமிழராக இருக்கிறார்கள். இந்தியா என்பது இன்று இருக்கும். நாளை பல நாடுகளாகப் பிரியலாம். ஆகவே, இந்தியர் என்ற பெயர் இனத்தைக் குறிக்கவில்லை. அக் சொல் ஒரு சட்டபூர்வ தகுதியை மற்றும் குடியுரிமையைக் குறிக்கிறது. தமிழர்கள் என்பதே இனத்தின் பெயர். தமிழர்கள் எங்கு சென்று குடியேறினாலும் அந்த நாட்டின் குடியுரிமையை அவர்கள் பெறுவார்கள். ஆனால், இனம் என்பது தமிழர்தான். தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். அது தான் இனம். அதுவே நிலையானது. -பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம். 27.06.2021.
No comments:
Post a Comment