Wednesday, March 13, 2019

நூற்றாண்டு ! அன்னை மணியம்மையார் !

நூற்றாண்டு !
அன்னை மணியம்மையார் !

தந்தை பெரியார் அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கின்றார் . வந்து போவோர் அனைவரும் கவலையுடன் "அய்யா உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் , உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் " என்று சொல்கின்றார்கள் . பெரியார் மிகவும் கோபமாக " எல்லோரும் இதையே  தானே சொல்கின்றீர்கள் ! யாரவது எப்படி என்று சொல்கின்றீ ர்களா ? " என்கிறார் .

அடுத்த சில நாட்களிலே ஒரு பெண்மணி வருகின்றார் . அம்மா என்ன வேண்டும் என்கின்றார் ?
அய்யா நான் தங்களைக் கவணித்துக் கொள்ள வந்துள்ளேன் . அப்பா சொன்னார்கள் என்கின்றார் . அவர் சிரித்துக் கொண்டே " நீங்கள் சின்ன பெண்,வேறு வேலையில்லையா உங்கட்கு , வீட்டிற்குப் போங்கள் " என்கின்றார்.அவரோ முடியாது,தங்களைப் பார்த்துக் கொள்வது தான் என் வேலை   என்கின்றார். ஒவ்வொன்றாகப் பார்த்துச்  சரி செய்து  எள் என்றால் எண்ணையாக , அனைத்தையும் கவணித்துக் கொண்டு ,வந்தவர்களை ஒழுங்கு படுத்தி அவரது உணவு, ஓய்வு  என்று மிகவும் கண்டிப்பாக  பெரியரையே , இது உங்கட்கு ஒத்துக் கொள்ளாது  உண்ணக்  கூடாது என்று கண்டிப்புடன் இருக்கும் வரை அனைத்தும் அவரே என்ற அளவிற்கு பணி புரிகின்றார். பெரியார் அவரைப்  பல முறை நீங்கள் திருமணம் செய்து கொண்டு வாழும் படி , போகச்  சொல்லி முயற்சி செய்து பார்க்கின்றார் . அவரது தந்தையாரிடமும் சொல்கின்றார். அய்யா இப்போது  தான் நீங்கள் நலமுடன் இருக்கின்றீர்கள் . அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விடுகின்றார் .

முகம் சுளிக்காமல் பெரியாருக்கு அனைத்தையும் செய்து செவிலியராக, சமையல் காரராக ,( அதுவும் வேனில் பயணம் செய்யும் போதே காய்கறிகளை நறுக்கிவைத்துக் கொண்டு நிற்கும் இடத்தில் சமைத்து உணவு தயார் !), செயலராக , தாயாக, மகளாக அவருடைய கோவத்தை அடக்கும் அமைதியாளராக அவரையே கண்டிக்குக்கும் மருத்துவராக இப்படித் தன் வாழ் நாளே  பெரியார், தன் வாழ்க்கையே அவரது உடல் நலம் என்று வாழ்ந்து காட்டினார் ! எத்தனை ஆண்டுகள் ? உலகில் யாரும் இப்படி இருந்ததாக வரலாறே இல்லை ! நேரே பார்த்தவர்களுக்குத்தான் அதன் முழு ஆழமும் தெரியும் !
அவரை விட  அம்மா சிக்கனம் என்றால் சாப்பாட்டில் உள்ள மிளகும், கறிவேப்பிலையுங் கூட  அடுத்த சமையலுக்கு உதவும் என்ற அளவு சிக்கனம் ! எதையும் வீணாக்கியதாகச் சரித்திரமே இல்லை ! எளிமையின் சின்னம் அவர் !

உழைப்பு எப்போதும்  சுறு சுறுப்புடன் தான் ! வீணாக்க நேரங்கிடையாதே ! மாநாடு கூட்டங்கள் என்றால் அங்கே அவர்தான் புத்தக வியாபாரி ! கூட்டம் முடிந்ததும்  அய்யாவிடமிருந்து  முதல் கேள்வி  எவ்வளவு புத்தகம் விற்றது என்பது தான் !

அவர் பட்ட அவமானம் கொஞ்ச  நஞ்சமல்ல ! அனைத்தையும் தூசியாகத் தட்டி விட்டவர். தூற்றியவர்களே  பின்னர் போற்றினார்கள் என்பதுதான் வரலாறு !
கொள்கையிலே அய்யாவைப் போன்றே துணிவும், சமரசம் செய்யாத மானமும் ! திருசியிலே சிறையில் இறந்தவர்களின் உடலைத் தர மறுத்த போது முதல்வர் காமராசரை நேரிலே பார்த்து அவரே அஞ்சும்  படி கர்ச்சித்தவர் ! உடலைப் பெற்று ஊர்வலம் நடத்திக் காட்டியவர். இராவண லீலாவை நடத்திக் காட்டியவர் . அடக்குமுறையின் போது கழகத்தைக்  கட்டிக் காத்தவர்.

அங்கு நான்சென்றிருந்த போது அவ்வளவு பெரிய பெரியார் திடலிலே அம்மா வெறுந்தரையிலே அமர்ந்திருக்கின்றார்கள் . அருகே அய்யா ஆளவந்தார் மட்டுந்தான் இருக்கின்றார் . எனக்கோ அதிர்ச்சி ! ஆளவந்தார்  என்னை விரட்டுகின்றார் ! நீ ஏன் இங்கே வந்தாய், உடனே சென்று விடு என்கின்றார் ! அவ்வளவு கடுபிடி ! அதில் அம்மாவின் உடல் நலம் மிகவும் பாதிக்க வைத்து விட்டார்கள் எதிரிகள் ! கழகத்தை ஒழித்துவிட நல்ல தருணம் என்று எதிரிகள் கணக்குப் போட்டுத் துரோகிகளுடன் இணைந்து முயன்றனர். ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டனர் என்றே சொல்லும் அளவில் நிலை இருந்தது ! வருமான வரித்துறையின் மூலம் முடக்கப் பார்த்தனர்.

ஒரு சமயம் ஆசிரியர் அய்யாவிடம் உங்கள் உழைப்பிலேயே எதை மிகவும் மகிழ்ச்சியாக நினைவு கூறுகின்றீர்கள்   என்று கேட்டேன் .அப்போது  சொன்னார் வருமான வரி டிரிப்யூனலில் இருந்து மீண்டதைத்தான்  என்றார் ! மீண்டது மட்டுயமல்ல தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றோம் என்றார் !

நாகம்மை குழந்தைகள் இல்லம் அம்மா அவர்களின்  இதய மகிழ்ச்சி ! அதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ! அந்தக் குழந்தைகளின் அம்மா அம்மா தான் அவர்க்குப் பிடித்த இன்னிசை !

அம்மாவின் கடைசி நாட்கள் சோதனைகள் நிரம்பியனவாக இருந்தாலும் அவர் ஆசிரியர் மீது வைத்திருந்த நம்பிக்கை அவருக்கு  ஆறுதலைத்  தந்தது என்று தான் சொல்ல வேண்டும் ! யாரிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அம்மா நன்கு உணர்ந்து சொல்லியும் சென்றிருப்பார்கள் என்று தான் நம்புகின்றேன்.

நூற்றாண்டு  கொண்டாடுகின்றோம் என்றால் அது நன்றியும், மகிழ்ச்சியும் கலந்த நினைவுகள் . நேரிலே கண்டவர்கள் மறக்க முடியாது !
அவர் ஓர் உன்னதப் பிறவி ! அர்ப்பணித்த வாழ்க்கை ! மனதில் நிறைந்தவர் !
வாழ்க அம்மா !
வாழ்க  பெரியார் ! வளர்க  பகுத்தறிவு !

No comments: