Wednesday, March 13, 2019

“அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்”

சமூக வலைதளங்களில், பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி வரும் கருத்துக்கள் எல்லாம் “அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்” ங்கற ரேஞ்சுலதான் இருக்கு ஆனா உணர்ச்சிகளுக்கும், சட்டநடைமுறைகளுக்கும் வெகு தூரம்ங்கறதுதான் உண்மை.

நீதித்துறை……

மனிதன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சு, தீம்காவின் முன்றாம் கலைஞர் உதயநிதி நடிச்சது. அதுல ஒரு பணக்காரன் சாலையோம் படுத்துருக்கறவங்களை காரை ஏத்தி கொன்னுருவான். அந்த வழக்குல நம்ம ராம்ஜெத்மலானி மாதிரி ஒரு பெரிய வக்கில் (பிரகாஷ்ராஜ்) வழக்காடி அந்த கேசை ஒன்னுமில்லாம பண்ணிருவார் அப்புறம் நம்ம முன்றாம் கலைஞர் போராடி அந்த கேசுல சாட்சியை கோர்ட்ல ஆஜர்ப்படுத்துவார். அப்ப ஜட்ஜ் (ராதாரவி) ஒரு வசனம் பேசுவார்.

“கோர்ட்ல இங்க உட்காந்துட்டு இருக்கறவங்க மட்டுமில்ல, எல்லோருக்கும் தெரியும் இந்த ஆக்ஸிடன்டை யார் பண்ணதுன்னு, ஆனா நான் ஒரு ஜட்ஜ், மத்தவங்க நினைக்கறத வச்சு நான் தீர்ப்பு சொல்லமுடியாது, நான் சரியான தீர்ப்பு கொடுக்கணும்னா அதுக்கு சாட்சி, ஆதாரம் தேவை, ஆனா ஆதாரம்….. இந்த கேஸ் வந்த முதல் நாளே தெரியும், இதை யார் பண்ணதுன்னு, சரி அவனுக்கு தண்டனை கொடுக்கலாம்ன்னா அதுக்கு ஆதாரம் ? யாராவது ஆதாரம் கொடுப்பாங்களான்னு பாத்தா…..

வெயிட் பண்ணிட்டே இருப்பேன் ஆதாரம் அப்ப வரும் ஆதாரம் இப்ப வரும்ன்னு ஆனா ஆதாரம் ஒண்ணு கூட இருக்காது. பைல் மட்டும் குப்பை மாதிரி சேரும் அதுல ஒரு பேப்பராவது நான் திருப்தியா “ ஆமாண்டா, இதுதாண்டா ஆதாரம்” ன்னு சொல்ற மாதிரி இருக்காது. சாட்சிகளும் பணத்துக்கோ, பயத்துக்கோ விலை போயிடுவாங்க, அப்புறம் நான் என்ன பண்ண முடியும், குற்றவாளி கைய வீசிட்டு வெளிய போயிடுவான். இதுவரைக்கும் இதுதான் நடந்துருக்கு..”

காவல்துறை……

இந்த வழக்கில் ஊடகங்கள் எட்டு வருசம், 1500 பொண்ணுங்க லட்சம் வீடியோன்னு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு பெண்தான் புகார் அளித்துள்ளார். அதுவும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை காரில் அழைத்துச் சென்று மேலாடையைக் கழற்றி புகைப்படம் மற்றும்  விடியோ எடுத்து தங்கச் சங்கிலியை மிரட்டி பிடுங்கி கொண்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் தர புகாரை பெற்று கீழ்கண்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

354-A : ஒருப் பெண்ணை உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடலைக் கையாளுதல் (தண்டனை :1 லிருந்து 4 ஆண்டுகள் வரை)

354-B :  ஓரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன், பலம் கொண்டு அவருடைய உடையை கலைந்து நிர்வாணமாக்குதல் (தண்டனை :1 லிருந்து 3 ஆண்டுகள் வரை)

392 IPC : செயினை பறித்தற்கு

66 (E ) SEXUAL ASSAULT ( பாலியல் தொல்லை)

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புகாருக்கு மேல் சட்டப்பிரிவுகள் இருந்தால் சார்ஜ் ஷீட் போட்ட இன்ஸ்பெக்டைரை குனிய வச்சு ராடை சொருகிடும் கோர்ட்.

ஒருவரிடம் புகார் பெறப்பட்டால் மட்டுமே, ஒரு தனிநபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்,

வீடியோவுல அவங்க முகம் தெரியுதேன்னு ஆரம்பிங்கறவங்களுக்காக.

2010 வருடம் என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தாசுவாமிகள் ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சில இருந்தப்போ எடுத்த வீடீயோவை டெல்லி, மத்திய தடய ஆய்வகத்துக்கு அனுப்பி அவங்களும் அந்த வீடியோவ ஆராய்ச்சி பண்ணி அந்த வீடீயோ உண்மைதான் சொன்னது 2017 ஆம் வருசம். ஒரு வீடியோவை உண்மைன்னு சொல்லவே ஏழு வருசம். நாடே நாறின கேசுக்கே எழு வருசம்னா இந்த கேசுக்கு எத்தனை வருசம் ஆகும்ன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்க ஊரு பப்ளிக்…………..

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தென்மாவட்டத்தில் நடந்தது.

“கைய ஏண்டா வெட்டின”

“நேத்து எந்தங்கச்சி காலேஜ் போயிட்டு வரும் போது, குறுக்காட்டி கைய புடிச்சு இழுத்துருக்கான் சார், வீட்டுல வந்து சொல்லிட்டு அழுதா அதான் இழுத்த கைய வெட்டிட்டேன்”

முதல் பாராவை படிங்க….

No comments: