Tuesday, June 11, 2019

சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..

தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.
வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன... இன்றும் பொது சுடுகாட்டில் பட்டியலின மக்களுக்கு வரும் எதிர்ப்பை அன்றே தொடங்கி வைத்தவன் ராஜ ராஜ சோழனே..
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது.
ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.
கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.
பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன....
இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது....

No comments: