Tuesday, June 11, 2019

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல

பாவம் கிரேஸி மோகன்; இது முறையல்ல
*
திரைபிரபலம் மரணத்திற்கு; பிரபலங்களிடம் பேட்டி, காட்சிகளை ஒளிபரப்புவதின் மூலம் நல்ல ரேட்டிங் இருப்பதால், தமிழர்கள் மண்டையில் மாபெரும் சோகமாகத் திணிக்கின்றன ஊடகங்கள்.
அப்படிதான் சமீபத்தில் மறைந்த திரு. கிரேசி மோகன் மரணமும் ரேட்டிங்காக. அவரின் இறப்பு வருத்ததிற்குரியதாகப் பார்க்கப்படுவதற்குப் பதில், சுவாரஸ்யமானதாக மாற்றப்பட்டது, அவருக்கு ஏற்பட்ட மரியாதைக்குறைவு.
ஊடகங்கள் பிரபல படுத்துகிற மரணங்களுக்காக உடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பது சமூக வலைதளங்களில் வழக்கமாகி வருகிறது. அதில் சில முற்போக்காளர்களும் மூக்கை சிந்தி சுவற்றில் தேய்த்து விடுகிறார்கள்.
ஒருவரை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளால் அஞ்சலி செய்வது, பொய்யான செய்தியை உண்மையாக்குகிறோம் என்பதை அறியாமலே அறிவாளிகளும் செய்து முடித்து விடுகிறார்கள்.
S.V.சேகர், Y.G. மகேந்திரனுடன் ஒப்பிடும்போது கிரேசி மோகனின் காமெடி சிறப்பானதுதான். ஆனால், ஒரே மாதிரியானது. முதல் இரண்டு படங்களில் என்ன எழுதினாரோ அதையேதான் தொடர்ந்து எழுதி அலுப்பேற்றினார்.
நாயகிகளுக்கு ஜானகி, மைதிலி என்கிற அய்யங்கார் பெயர்களை மட்டுமே எப்படி வைத்தாரோ அதுபோல்.
‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘இப்பதானே நீங்க சொன்னீங்க’ என்ற பாணியில்.
எப்பவாவது விதி விலக்கும் உண்டு. காயத்திரி என்ற அய்யர் பெயரையும் வைத்ததுபோல்.
அவரின் காமெடிகள் இப்போது சிரிப்பை வரவைக்காது என்பதினால்தான் இப்போது ‘அள்ளி விடுகிற’ இதே ஊடகங்கள் அவர் எழுதிய காமெடிகளைத் தனியாக ஒளிபரப்பியதே இல்லை. (கவுண்டமணி பேசியதை தவிர)
90 களில் தொடர்ந்து ஒரே மாதிரியான வசனங்களால் நம்மை வருத்தப்பட வைத்த கிரேசி மோகனின் காமெடியிலிருந்து மீட்டு, உலகின் மாபெரும் காமெடி காட்சிகளுக்குத் தரம் உயர்த்தியவர் வடிவேலு.
*
‘இந்துல எழுதுற, சந்துல எழுதுற பார்த்தசாரதிதானே நீ’ எனக் கவுண்டமணி அவரை ஒரு படத்தில் கேட்டாரே, அந்தப் பார்த்தசாரதி போலவே சில படங்களில் எழுதியும் இருக்கிறார்.
வியாட்நாம் காலனி என்ற மலையாளப் படம் தமிழில் பேசியபோது, ஒரு காட்சியில் சாம்பார் சாதத்தை நாய் சாப்பிட்டு விடும். அதற்கு டேவிட் என்கிற காதாபாத்திரம் நாயகனை பார்த்து,
‘அய்யிரே.. சிக்கன வேணான்னு திருப்பிக் கொடுத்திட்டே. அங்க பாரு மனுசன் சாப்பிட வேண்டிய சாம்பார் சாதத்தை நாய் சாப்பிடுது. நாய் சாப்பிட வேண்டிய சிக்கனை கீழே மனசங்க சாப்பிடுறாங்க’ எனப் பேசும்.
அய்யர் பேச வேண்டிய வசனத்தைச் சிக்கன் விரும்பி சாப்பிடுகிற டேவிட் பேசுவதைப்போல் எழுதியதில் கிரேசி மோகனின் அரசியல் மட்டுமல்ல அவரின் தந்திரமும் தெரியும்.
மனோரமா ‘வெங்கட கிருஷ்ணன்’ என்ற பெயரை, வெங்கட கிச்சுனன் என சென்னை தமிழில் சொல்வார். அதற்கு டேவிட், ‘நாக்குல தர்பையை வச்சு வழிச்சா சரியா பேர சொல்வ’ என்பார். இதுவும் அய்யர் பேசிய வேண்டிய வசனமே.
இன்னும் விரிவாக எழுத வேண்டிய சூழல் இதுவல்ல, இதுவும் கூட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பிடுகளை மறுக்க வேண்டிய அரசியல் கடமை எனக்கு இருப்பதால் எழுதினேன். இதை எழுதியதற்கும் நான் காரணமல்ல என்றாலும் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டால் வருந்துகிறேன்.

No comments: