Tuesday, June 05, 2018

NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது.

இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி அதைசாத்தியமாக்கியது இதே தமிழ்நாடு. இப்போது NEETஐ தமிழ்நாட்டின் மீது பலவந்தமாக திணித்திருப்பது அதே உச்சநீதிமன்றம்.
இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது தமிழ்நாடு மட்டும் அதை எதிர்த்திருக்காவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலுமே கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தனை கோடி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வளவு குறுகியகாலத்தில் பள்ளிக்கல்வியோடு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வாளராகவெல்லாம் ஆகியிருக்க முடியாது. பல லட்சம்பேர் வெளிநாடுகளில் குடியேறி கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கமுடியாது.
அதையெல்லாம் செய்தவர் பெரியார் என்கிற ஒற்றை மனிதன். தனக்கென சொந்தமாக ஒரு குழந்தை இல்லாத அவன் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் தன் சொந்தப்பிள்ளைகளாக நினைத்தான். அவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டபோதெல்லாம் அவன் துடித்தான். அதன் விளைவே நம்மில் பலர் உயர்கல்வி கற்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு விமானம் ஏறிப்பறக்கவும் வெளிநாடுகளுக்கு கோடை விடுமுறைகள் செல்லுமளவுக்கும் செல்வந்தர்களாக முடிந்தது. சீரோடும் சிறப்போடும் செல்வாக்கோடும் வாழ முடிந்தது.
இன்று மருத்துவப்படிப்பில் பொதுசுகாதாரத்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத்திகழும் தமிழ்நாட்டின் மீது இப்போது அதே இந்திய உச்சநீதிமன்றம் NEETஐ பலவந்தமாக திணித்திருக்கிறது. அதை எதிர்த்து சட்டத்திருத்தம் மூலம் NEETஐ ஒழிக்கவேண்டியதும் அதே தமிழ்நாடு. அதற்குத்தேவை அரசியல் அதிகாரம். அரசியல் அதிகாரத்தால் மட்டுமே அது இனி சாத்தியப்படும். அடிமைக்கும்பல்களால் அல்ல. எனவே அடிமைகளை அகற்றி அரசியல்சட்டப்படிக்கு NEETஐ ஒழிக்க என்ன வழி என்பது மட்டுமே ஒற்றை இலக்காக இருக்கவேண்டும்.
NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது. இந்திய அரசியல் சட்டத்தை திருத்த முடிந்த தமிழ்நாட்டால் இந்த சுண்டைக்காய் NEETஐ தூக்கி எறிய முடியாது என்பது ஏற்கக்கூடிய வாதமும் அல்ல; ஏற்கவேண்டிய வாதமும் அல்ல. அது ஏமாற்றுப்பேர்வழிகளின் வாதம். ஏமாளிகள் மட்டுமே அதை நம்புவார்கள். ஏழுகோடித்தமிழர்களும் ஏமாளிகள் அல்ல.

No comments: