Monday, July 30, 2018

கலைஞர் எல்லாவற்றையும் சரியாகக் கணக்கிட்டு, தன்னால் முடிந்ததை முயன்றார்

கலைஞர் 2009இல் மேலும் வீரியத்துடன் போராடியிருக்க வேண்டும், போராடியவர்களையும் கிளர்ச்சி செய்ய அனுமதித்திருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அன்றைய நிலைமையை இலகுவாக மறந்து விடுகிறார்கள். அன்றைய நிலைமையை பார்க்கு முன் இன்றைய நிலைமையைப் பார்ப்போம்.
அண்ணன் சீமான் ஊர் ஊராகச் சென்று மானத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு பிரபாகரனின் வீரத்தை ஊட்டியிருக்கிறார். உணர்ச்சியோடு இலட்சக் கணக்கான தம்பிகள் ஏகே 74 ஏந்தத் தயாராக நிற்கிறார்கள். எட்டு வழிச் சாலை அமைந்தால் எட்டுப் பேரை வெட்டுவேன் என்று மன்சூர் அலிகான் அரிவாள் எந்தி நிற்கிறார். சுங்கச் சாவடிகளை அடித்துடைத்து விட்டு வேல்முருகன் வேலேந்தி நிற்கிறார்.
இப்படியான நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் காட்டாட்சி தமிழ்நாட்டில் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் தமிழர்கள் மீது பயங்கரவாதப் படுகொலை அரங்கேறியது. எட்டுவழிச் சாலை ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகின்றன.
இதை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்று மார்தட்டியவர்கள் இன்றைக்கு சில வழக்குகளைப் போட்டதும் ஓடி ஒளிந்து விட்டார்கள். எட்டுப் பேரை வெட்டுவேன் என்ற மன்சூர் அலிகான் சிறைவாசலில் நின்றபடி, 'இது நல்ல திட்டம் என்றால், நானும் கல் தூக்கி உதவுவேன்' என்று பம்மினார். சீமானின் சத்தத்தையே காணவில்லை. உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அடி வாங்கவும், சிறை செல்லவும் இன்றைக்கும், அன்றைக்கும் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இவர்களை எல்லாம் நம்பி, 2009இல் கலைஞர் டெல்லிக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கியிருந்தால், அதோ கதிதான்.
ஒரு காலம் இருந்தது. 1985இல் ஆண்டன் பாலசிங்கம் உட்பட மூன்று பேர் இந்திய அரசால் நாடுகடத்தப்பட்டார்கள். கலைஞர் ஆணையிட்டார். இலட்சக் கணக்கில் தமிழர்கள் வீதியில் இறங்கினார்கள். ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் எந்த ஊரிலாவது ரயில் ஓடினால் அந்த ஊரில் தமிழன் இல்லையென்று அர்த்தம்' என்று கலைஞர் முழங்கினார். இந்திய அரசு பணிந்தது. நாடுகடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இது எல்லாம் ராஜிவ்காந்தி படுகொலையோடு முடிந்து போனது. வெகுஜன ஆதரவு இப்படியான போராட்டங்களுக்கு இல்லாமல் போனது. உலகமயமாக்கலும் ஒருபக்கம் போர்க்குணம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையை உலகம் முழுதும் குறைக்கத் தொடங்கியிருந்தது.
இப்படியான ஒரு நிலையில்தான் 2009 வருகிறது. சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பெரும்பாலான தமிழர்கள் தம்பாட்டில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கிளர்ச்சி செய்ய சில நூறு பேர் தயாராக இருந்தார்கள். பல இலட்சம் பேர் கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்திய அரசு ஈழத்தில் மூர்க்கமான போரை நடத்திக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மீது பாயவும் அது தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. கலைஞர் வரம்பு மீறினால், அவருடைய ஆட்சியைக் கலைத்து, அவரையும் சிறையில் அடைத்து, திமுக என்கின்ற கட்சியையும் இல்லாமல் செய்து விடுகின்ற திட்டத்தை ஆரிய பார்ப்பனிய அதிகார வர்க்கம் கொண்டிருந்தது.
திமுகவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போனாலும், வெளியில் இருந்து கொண்டே மத்திய அரசாங்கத்தைக் காப்பாற்ற பகுஜன் சமாஜ், இடதுசாரிக் கட்சிகள் என்று பலர் தயாராக இருந்தார்கள். தன்னால் மத்திய அரசைக் கவிழ்க்க முடியாது என்பதையும் கலைஞர் உணர்ந்திருந்தார்.
மிகப் பலவீனமான நிலையில் சிறுபான்மை அரசாங்கத்தை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்த கலைஞர் தன்னால் எவ்வளவு தூரம் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் முயன்றார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் முடியவில்லை.
ஈழத்தில் தலைவர் பிரபாகரன் எந்த ஒரு அடி பணிவுத் திட்டத்தையும் ஏற்க மறுத்து சண்டை செய்து கொண்டிருந்தார். ஈழத்தில் இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்பதும் தனக்குப் பிறகு வருபவர்கள் தமிழர் உரிமையை கூறு போட்டு விற்று விடுவார்கள் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இறுதி வரை அடிபணியாது எதிர்த்து நின்று அவர் சண்டையிட்டார்.
ஆனால் கோடிக் கணக்கில் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஒரு முதன்மை மாநிலமாக ஆக்கியிருக்கின்றன. சமூகநீதியில் தமிழ்நாடு எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது. இன்னும் போக வேண்டிய தூரமும் இருக்கிறது. விட்டுக் கொடுப்புக்களோடும், நிதானத்தோடும்தான் இலக்கை அடைய வேண்டியிருக்கிறது.
மூத்த அரசியல்வாதியான கலைஞர் எல்லாவற்றையும் சரியாகக் கணக்கிட்டு, தன்னால் முடிந்ததை முயன்றார். முடியாததை செய்யாது விட்டார். தடுக்க முடியாததை தடுக்காது விட்டார். தமிழீழத்தை அவரால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட, இந்திய வேட்டை நாய்களிடம் இருந்து தமிழ்நாட்டை கலைஞர் காத்தார்.

No comments: