Friday, May 19, 2017

விடுதலைப்புலிகள் & கலைஞர்

1.
காதல் மனைவி செய்த துரோகத்தை வெளியே சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறவனை போலத்தான் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தோம். பருத்திவீரன் படத்தில் இறக்கும் தருவாயில் பிரியாமணி ஒரு வசனம் சொல்வார். "நீ செஞ்ச எல்லா பாவத்தையும் எம்மேல வந்து இறக்கிட்டாங்கடா வீரா! " என. அதுபோல எல்லா தவறுகளையும் கலைஞர் மீது சாட்டி பேசாமடந்தையாக இருந்த எங்களையும் பேசவைக்கிறார்கள் .
இந்த எளிமையான கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு விவாதத்தை தொடரலாம் வாருங்கள் :
1. நார்வே அமைதி ஒப்பந்த காலத்தில் ஆன்டன் பாலசிங்கத்துக்குத் தெரியாமல் ஆயுதங்களை குவித்தது யார்? அதன்காரணமாக சர்வதேச அமைப்பு முன்பாக பாலசிங்கம் தவறு செய்தது போல நிற்க வைக்கப்பட்டாரே ஏன்?
2. ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டு ராஜ பக்சே வெற்றி பெற்றது எப்படி?
3. அமைதி ஒப்பந்தத்தை மீறி போரைத் துவக்கியது யார்?
4. போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து போரை நிறுத்த மறுத்தது யார்?
5. கடைசியாக அப்பாவி தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார்?

2.
சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் எண்பது திமுகவினருக்கு பிரபாகரன் மீது ஒருவித மதிப்பும், ஈர்ப்பும் இருந்தது.
இறுதி யுத்தத்தின் போதும், அதன்பின்பும் கூட அந்த நிலை தொடர்ந்திருந்தது. ஆனால் எப்போது இந்த தமிழ் தேசியவாதிகள் ஜெயலலிதாவிற்காக திமுகவையும், கலைஞரையும் ஈழத்துரோகிகள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்தே இந்த எண்பது திமுகவினரில் பலரும் பிரபாகரன் மீதும், புலிகள் மீதும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இப்படி பிரபாகரனை விமர்சிப்பதில் தயக்கமும், உறுத்தலும் கொண்டிருந்த திமுகவினரை உசுப்பிவிடும் வகையில் இந்த தமிழ்தேசியவாதிகள் கலைஞர் மீதும், திமுக மீதும் தொடர்ந்து அவதுறான, அசிங்கமான பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்த நிலைக்கண்டு இனியும் பொறுக்க முடியாது என்று அந்த எண்பது திமுகவினரில் இன்று எழுவது பேர் பிரபாகரனை மிகக்கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக தென்படுகிறது. இதில் என்ன கொடுமை எனில் இன்று பிரபாகரன் மீது இத்தகைய கரும்புள்ளிகளும், கடும் விமர்சனங்களும் வைக்கப்பட காரணமாயிருந்த தமிழ்தேசியவாதிகள் எவரும் பிரபாகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை களைக்க முற்படுவதில்லை. மாறாக இன்னும் கலைஞரையும், திமுகவையுமே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்காக அவர்கள் கவலை பட்டதாகவோ, பரிதாபப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இன்றும் பிரபாகரனை ஒரு போராளியாக பாவித்து, அவர் மீதான விமர்சனத்திற்காக பரிதாபப்படுபவர்கள், அனுதாபப்படுபவர்கள் யாரென்று பார்த்தால் அது அந்த எண்பதில் மீதமிருக்கும் பத்து திமுகவினரே.
இந்த பத்தும் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக குறைந்து சுழியாகும், காரணம் நமது தமிழ்தேசிய பிள்ளைகளின் சுழி அப்படி.
எப்படியோ, பிரபாகரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

3.
கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????
அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.
ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?
"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.
இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.
இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி :(

No comments: