Friday, May 19, 2017

தமிழ் கடவுள்கள்

தமிழ்ச் சமூகம் கற்பனையான கடவுள்களை உருவாக்கி வழிபடும் பழக்கம் கொண்டிருந்ததா?..
ராமனை போல நீல நிறம் கொண்ட மனிதர்கள் எங்காவது வாழ்த்திருக்கிறார்களா?, ஆனால் கறுத்த நிறம், தடித்த உடம்பு, சுருள் முடி, கிடா மீசை கொண்ட கருப்பு சாமியின் சாயல் உங்களுக்கும் இருக்கிறதுதானே?,
தமிழர்கள் தாங்கள் வணங்கிய தெய்வங்களுக்கு பிரம்மனை போல மூன்று நான்கு தலைகளோ, நான்கைந்து கை கால்களோ , பிள்ளையாருக்கு போன்று பிளாஸ்டிக் சர்ஜரியோ செய்து பார்த்திருக்கிறீர்களா?.
அப்படியென்றால் தமிழர்களுக்கு கற்பனை வளம் கம்மி என்று எடுத்துக் கொள்வதா?, இல்லை தமிழர்கள் எதார்த்தவாதிகள் என்பதா?..
தமிழ்த் தெய்வங்கள் நிறமும் உருவமும் இந்த மண்ணின் மனிதர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது, இந்த நிலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது, உற்பத்தியோடு தொடர்புடையதாக இருக்கிறது,
பிரம்மனுக்கோ, பிள்ளையாருக்கோ இந்த துணைக்கு கண்டத்தின் ஏதாவது வட்டாரத்தன்மை இருக்கிறதா?, திணைக் கூறுகளைக் கொண்ட தலைவன்களும், போரிட்டு மடிந்த வீரன்களும்தானே தமிழ் தெய்வங்களின் கூறுகள்.
மூன்று திசைகளும் கடல் அரணாக உள்ள தென்னிந்தியாவில் வடக்கு திசை எதிரி நுளையும் வாய்ப்புள்ள பகுதி என்பதால்தானே மாரியம்மனையும், பிற காவல் தெய்வங்களையும் எல்லா தமிழ் கிராமங்களின் வடக்கு எல்லையில் நிறுத்தி இருக்கிறார்கள்,
அப்படியென்றால் வடக்கு எதிர்ப்பு என்பதும் வடக்கு ஆபத்து என்பதும் தானே தமிழ்த் தெய்வங்களே உணர்த்தும் தொன்மமாக இருக்கிறது.
என்றால் வடக்கின் ஆன்மீக ஆதிக்கத்திற்கு, வடக்கின் மார்வாடி பொருளாதார ஆதிக்கத்திற்கு, வடக்கின் ஹிந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் தமிழ் எல்லை தெய்வங்களை நிறுத்தி வளர்ந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?..
மூதேவி என்றொரு தமிழ் தெய்வம் விவசாய உற்பத்திக்கு ஆதாரமான மண்ணோடும், சேரோடும், குப்பை உரங்களோடும் தொடர்புடையது, பழந்தமிழர் கடல் வணிகத்தில் மாசாத்தான் என்னும் பெரு வணிகர்கள் கடல் பயணங்களில் தங்களை காக்கும் தேவதையாக ஒரு பெண் தெய்வத்தை வணங்கினார்கள், சாஸ்தா கோவில் வழிபாடுகள் இம்மண்ணின் கூறுகளை உடையதுதானே?.
திராவிட பகுதிகளை போல அதிகமான பெண் தெய்வங்களை கொண்ட பகுதி வேறெதுவும் கிடையாது,
தாய்த்தெய்வ வழிபாடும், தாய்மாமன் மரியாதையும், இறப்பை போற்றும் சடங்குகளும் பழக்கமும் இந்த மண்ணிற்க்கே உடையது, இவை எதுவும் ஆரிய கூறுகளில் இல்லாதது, அவர்கள் கடவுள்களிலும் இல்லாதது.
தமிழ் மக்களால் வணங்கப்படாத சுடலை மாடனையோ காத்தவராயனையோ, அய்யனார்களையோ , அரிவாள்களையோ தமிழ்நாட்டில் எங்கும் எங்காவது பார்க்க முடியுமா,
ஆனால் ஆடு மாடு கூட போகாத உயரமான கோபுரங்களையும் கொடிமரங்களையும் கருவறைகளையும் கொண்ட கோவில்களை நூற்றுக் கணக்கில் சாலை ஓரங்களில் காணலாம்,
இம்மண்ணில் ஆரியத்தை வேரறுக்க, வெகுமக்கள் பண்பாட்டில் வைதீகத்தை வேறுபடுத்தி காட்ட ஆயிரம் கூறுகள் சும்மாவே கிடக்கின்றன..
புராதனமான வைதீக ஆதிக்கம் என்பது அருவமானது கண்ணுக்கு புலப்படாதது, ஆனால நிஜத்தில் இருப்பது, அதனாலேயே ஆரிய எதிர்ப்பும் வெகுமக்கள் தன்மையில் புலப்படுத்த முடியாதிருக்கிறது,
நவீன முரண்களில் ஆரிய எதிர்ப்பை உள்வாங்கிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது, புலித்தேவன், ஒண்டி வீரன், மருது சகோதர்களின் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு கூறுகளை நவீன சமூகத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா?.
அந்த கூறுகள் அந்த காலகட்டத்தோடு நின்றுவிடுமா மருது சகோதரிகளின், தமிழ் கூறுகள் சம்ஸ்கிருத இந்தி திணிப்பிற்கு எதிராக பயன்படுத்த கூடியது அல்லவா?..
அதுபோலத்தானே தீரன் சின்னமலையும், வீரன் அழகுமுத்துக் கோணும், சுந்தரலிங்கமும், புலித்தேவனுடைய தமிழ் கூறுகளும் ஆரிய பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான பயப்படுத்தக் கூடியதுதானே,
அவன் விநாயகரை எடுத்துக்கிட்டு இந்துக்களே முஸ்லீம்களை விரட்டுங்கள்னு வந்தான்னா, நாம வடக்கு எதிர்ப்புன்னு மாரியம்மனை எல்லை சாமிகளை கையிலெடுப்பதில் என்ன தப்பு?,,
நெத்தி நிறைய பட்டை அடிச்சிட்டுதான் மறுத்து சகோதர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிட்டு இருப்பார், ஜக்கம்மான்னு சொல்லித்தான் கட்டபொம்மன் வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றிப்பார்.
"ஆற்றங்கரையில் இருக்கும் அந்த எளிய மக்களின் களிமண் பொம்மைகளை விட்டு விடுங்கள் அவற்றை சமூகத்திற்கு பயனில்லாதது என்று உணரும்போது அந்த மக்களே தூக்கி வீசிவிடுவார்கள்" என்று மாவோவின் மேற்கோளாக எங்கோ வசித்த ஞாபகம்.
அந்த வார்த்தைகள் எவ்வளவு அரசியல் கொண்டது..

No comments: