தலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம்!
தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாழ்ந்த பூமியில்தான் இன்னும் சாதிக் கொடுமைகளும், அதன்பேரில் நிகழும் வன்முறைகளும் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.
பொதுவெளியில் வள்ளுவனையும், பாரதியையும் கூட்டணி சேர்த்துக்கொள்ளும் வெள்ளுடை வேந்தர்கள் யாருமே, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் ஆண்டான் அடிமை மனோபாவத்திலேயே இன்னும் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டி முதல்நிலைப் பேரூராட்சி கிராமம், இன்னும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்தும், ஒதுக்கி வைத்தலில் இருந்தும் மீளவே இல்லை.
நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பதையே பலரும் உற்றுக்கவனித்ததை கவனித்தோம்.
நாம் அந்தக் கிராமத்திற்கு சென்றபோது, தலித் இளைஞர் ஒருவரிடம் பேசினோம். அவர், அந்த ஊருக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் (நம்மிடம்) நீண்ட நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பதையே பலரும் உற்றுக்கவனித்ததை கவனித்தோம்.
‘ஏன் இப்படி பார்க்கிறார்கள்?’ என்று அந்த இளைஞரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில், “சார்….இது பொது இடம். இந்த மாதிரி இடத்தில் எல்லாம் நாங்கள் (தலித்துகள்) நின்று பேசக்கூடாது. எங்களுக்கென காலனி இருக்கிறது. அங்குதான் பேச வேண்டும்,” என்றார்.
கோயிலடி, சந்தை கூடும் இடம் போன்ற பொது இடங்களில் தலித்துகள் சகஜமாக நின்று கதைக்க இயலாத சங்கிலி பிணைப்பில்தான் இன்னும் அந்தக் கிராமம் கட்டுண்டு கிடக்கிறது. நம்மிடம் பேசிய சில தலித் இளைஞர்களேகூட சுற்றும்முற்றும் பார்த்தபடியே பேசினர்.
“இதெல்லாம் பரவாயில்லை சார். இந்த ஊருக்குள்ள இன்னும் எங்களுக்கு எந்த சலூன் கடையிலயும் முடி வெட்ட மாட்டாங்க சார். அதனால நாங்களே முடி வெட்டிப் பழகிக்கிட்டோம் சார். இப்போலாம் எங்களுக்கு நாங்களே முடி வெட்டிக்கிறோம் சார்,” என்றார் இன்னொரு இளைஞர்.
கீரிப்பட்டியில் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. வன்னியர், அகமுடையார், ஜங்கமர், குரும்பக்கவுண்டர் ஆகிய சமூகங்களே பெரும்பான்மையினராக உள்ளனர். பறையர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் 4 மற்றும் 5ம் வார்டுகளில் வசிக்கின்றனர்.
தலித் சமூகத்தில் இருந்து மட்டும் சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர்.
தலித் சமூகத்தில் இருந்து மட்டும் சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரும்பான்மை சமூகத்தினர் தலித்துகளை வெளிப்படையாக சாதி பெயரைச் சொல்லி அழைக்காவிட்டாலும், அவர்களை, ‘காலனிக்காரனுங்க’ என காரணப்பெயரால் அடையாளப்படுத்தி விடுகின்றனர்.
இந்த ஊருக்குள் 5 சலூன் கடைகள் இருந்தும், எந்தக் கடையிலும் தலித்துகளுக்கு முடித்திருத்தம் செய்வதில்லை. வெளிப்படையாகவே மறுத்துவிடுகின்றனர். அதேநேரம், கீரிப்பட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தசாமி புதூரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால், கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூக ஆண்கள் கந்தசாமி புதூருக்குச் சென்று முடித்திருத்தம் செய்து கொள்கின்றனர். அல்லது, அவர்களே சிகையலங்காரம் செய்து கொள்கின்றனர்.
ஊரின் மையத்தில் இருக்கும் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் இன்றும் தலித் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்து அம்மனை தரிசிக்கவோ, திருநீறு பிரசாதம் பெறவோ முடியாது.
இதைவிட மிகக்கொடுமையானது என்னவெனில், தலித் சமூகத்தினருக்கு தாகம் எடுத்தால், தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தர மாட்டார்களாம். அப்படியே குடிக்க தண்ணீர் கொடுத்தாலும், அவர்களுக்கென வீடுகள்தோறும் தனியாக ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்திருப்பதாகவும், அதில்தான் தண்ணீர் தருவார்கள் என்றும் கூறுகின்றனர்.
இன்றும் பெரும்பான்மை மற்றும் ஆதிக்க சமூகத்தினரைக் கண்டால், தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியவர்கள்கூட, கையெடுத்து கும்பிட்டு ‘கும்புடறோம் சாமி’ என்று சொல்லும் போக்கும் நீடிக்கிறது. அவர்கள் பவ்யமாக வணக்கம் தெரிவித்தவுடன் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சில சில்லரைக் காசுகளையும் தருகின்றனர்.
எனினும், இத்தகைய அடிமை வணக்க முறையில் இருந்து தலித் இளைஞர்கள் மட்டும் மீண்டுவிட்டதைக் காண முடிகிறது. ஆனாலும், ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி பெருமையையும், தலித்துகள் மீதான துவேஷங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச்செல்லும் வேலைகளிலும் ஈடுபடாமல் இல்லை.
தலித்துகள் வசிக்கும் பகுதியில் இரண்டு அரசுத்தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளியில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளே அதிகளவில் படிக்கின்றனர்.
பிற ஆதிக்க சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ‘காலனிக்கார பிள்ளைகளுடன் பழகினால், அப்புறம் நம்ம குழந்தைகளுக்கும் அவனுக புத்திதான வரும்,’ என்று கூறுவார்களாம்.
பிற ஆதிக்க சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ‘காலனிக்கார பிள்ளைகளுடன் பழகினால், அப்புறம் நம்ம குழந்தைகளுக்கும் அவனுக புத்திதான வரும்,’ என்று கூறுவார்களாம்.
தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது ஆறுதலானது; எனினும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மற்றவர்க்கு இணையாக பெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்துவதில்லை.
கீரிப்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர், தங்கள் சாதி பெருமைகளைப் பேசும் திரைப்படப் பாடல்களை (உ.ம்.: தேவர் மகன், சண்டக்கோழி, மறுமலர்ச்சி) ஒலிபரப்பி வருகின்றனர்.
கீரிப்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர், தங்கள் சாதி பெருமைகளைப் பேசும் திரைப்படப் பாடல்களை (உ.ம்.: தேவர் மகன், சண்டக்கோழி, மறுமலர்ச்சி) ஒலிபரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக தலித் சமூகத்தினரும் தங்கள் குலப்பெருமையைப் பேசும் (‘தென்றல்’ படத்தில் வரும் ‘பறை’ பாடல், ‘கபாலி’ படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடல்) பாடலை ஒலிபரப்புகின்றனர்.
சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தாலும் இப்போதுவரை கீரிப்பட்டியில் பெரிய அளவிலான சாதி மோதல்கள் இருந்ததில்லை. ஆனால், ஒடுக்கப்படும் மக்கள் எல்லா காலத்திலும் அடங்கியே கிடப்பார்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
No comments:
Post a Comment