Friday, January 26, 2018

டுபாகூரான காஞ்சி சங்கர மடமும் தமிழும்...

வடக்கே பத்ரிநாத், மேற்கே துவாரகா, கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி இவை நான்கு மட்டுமே சங்கரர் ஏற்படுத்திய அத்வைத மடங்கள் என்பர். இந்நான்கு சங்கராச்சாரிகளும் காஞ்சியிலுள்ள மடத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேற்கண்ட நான்கு மடங்களும் ஆதிசங்கரரால் நிறுவபட்டதாக 1972இல் ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பில் காஞ்சி மடம் பற்றி ஏதும் கூறப்படவில்லை.
உண்மையில் சிருங்கேரி மடத்துனான முரண்பாட்டில் உருவானதே காஞ்சிமடம். சிருங்கேரியில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பார்ப்பனர்களை சிருங்கேரி சங்கராச்சாரியை தரிசிக்க அனுமதிக்கவில்லை. இவர்களுடைய கோத்ர அனுஷ்டானங்களின்படியும் பின்பற்றும் சாஸ்த்திர சம்பிரதாயங்களின்படியும் இவர்கள் தோஷமுடையவர்களாக இருப்பதாகவும் அம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியில் இருப்பதாகவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமுற்ற இவர்கள் சங்கமேஸ்வரம் என்ற இடத்தில் ஒரு புதிய மடத்தை உருவாக்குகிறார்கள். பிறகு இதற்கொரு கிளையை காஞ்சியில் உருவாக்குகிறார்கள். இதற்கிடையில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவு கிடைத்ததால் கும்பகோணத்தில் மடத்தை அமைக்கிறார்கள்.
சென்னை முதன்மையான நகராக உருவெடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பூரி சங்கராச்சாரியாரின் செல்வாக்கு சென்னையில் உயரத் தொடங்கியது. இதனால் தம் எல்லைக்குள் அவருடைய செல்வாக்கு வளர்வதை விரும்பாது அதன் அருகேயுள்ள காஞ்சிபுரத்துக்கு மடம் மாற்றப்பட்டது. ஆனாலும் இன்றளவிலும் காஞ்சி மடத்தை மற்ற சங்கராச்சாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. இப்போதே அப்படி என்றால் அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? எனவே காஞ்சி மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம்தான் என்பதை நிறுவுவதற்கு துணிந்தனர். பல மோசடியான சான்றுகளை உருவாக்கினர். இம்மோசடிப் பற்றி 1977இல் வெளிவந்த ‘அனைத்திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபை’-மதுரை வெளியிட்ட ‘தஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?’ என்ற நூல் விரிவாக பேசுகிறது. உருவாக்கப்பட்ட செப்பேட்டு ஆதாரங்கள், 1586இல் இறந்துபோனவர் 1719இல் எழுதிய ஸ்ரீமத் ராமாயண கிருஷ்ண தர்மாசுரம் என்கிற வியாக்கியான நூல் பற்றிய மோசடிகளை எல்லாம் விரிவாக பேசி இந்நூல் அச்சான்றுகளை அம்பலப்படுத்துகிறது. நாம் அதற்குள் போக வேண்டாம்.
செய்தி என்னவென்றால் மற்ற நான்கு மடங்களுக்கும் ஆதிசங்கரர் சொல்லிய சமஸ்கிருத சுலோகங்கள் சான்றுகளாக இருக்கின்றன. ஆனால் இந்த தேவமொழி காஞ்சி மடத்தை கைவிட்டுவிட்டது. இவ்விடத்தில் தீட்டு மொழியான தமிழ்தான் உதவி செய்தது. இறுதியில் இவர்கள் சான்றுகளாக காட்ட கிடைத்தது என்னவோ வெறும் மூன்று தமிழ் பாடல்கள்தான். இம்மூன்று பாசுரங்களும் ‘பக்த மான்மியம்’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. இதில் ‘ஆச்சார்யாள் ஜம்புகேசுவரத்தில் தாடங்க பிரதிஷ்டை பண்ணியதையும், காஞ்சிபுரம் வந்து ஏகாம்பநாதரை தரிசனம் செய்து காமாட்சி ஆலயத்தில் தரிசனம், காமகோடி யந்திர ஸ்தாபனம் செய்து’ என்று விளக்குகிறது. (இதையும் மற்ற மடத்துக்காரர்கள் ஏற்கவில்லை என்பது தனிச்செய்தி).
ஆக தமிழ் தந்த சான்றில்தான் இன்று வரை இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இதற்கு மட்டும் இவர்களுக்கு தமிழ் தேவையாம். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லையாம்.
உதவிய நூல்கள்:
1) (காஞ்சி) சங்கராச்சாரியார் யார்? – ஓர் ஆய்வு – கி. வீரமணி
2) இந்துமதம் எங்கேப் போகிறது? – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

No comments: