Sunday, January 21, 2018

திருமாவளவனின் கட்டப் பஞ்சயத்தும் காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் நிகழ்ச்சியும்

திருமாவளவனின் கட்டப் பஞ்சயத்தும் காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் நிகழ்ச்சியும்:
ரஜினிகாந்த் பற்றிய என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் இரண்டு வகை சுவாரசியமானவை.
திருமா கட்டப் பஞ்சாயத்துச் செய்தாரே என்கிறார்கள். அழகிரி என்ன சாக்ரடீஸ் பஞ்சாயத்தா செய்தார்? ஸ்டாலின், ஜெயா, சசி, மற்ற மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் செய்யாத எதை திருமா செய்துவிட்டார். திருமா எந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரையும் மானப் பங்கம் செய்ததில்லை, செய்தி நிறுவன அலுவலகத்தை எரித்ததில்லை, சொந்தக் கட்சிக்காரரை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டதில்லை, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் செய்தவர்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசும் கட்சிக்காரர்களை அறிவேன். இதோ வைரமுத்து விவகாரத்தில் அவர் தோலின் நிறம் முதல் அவர் தாயார் வரை வசைப் பாடி தீர்த்துவிட்டார்கள் அக்கிரஹாரத்து ஜெண்டில்மேன்கள். இந்த வைரமுத்து எதிர்ப்பாளர்களை விட ராமதாஸ் மேன்மையானவர் ஏனென்றால் அவரால் அவர் சமூகத்திற்கு கொஞ்சமாவது நன்மை ஏற்பட்டது. திருமாவின் ஜாதி தான் அவரை மட்டும் தனித்து வேறொரு அளவுகோலில் வைத்து அளக்கச் செய்கிறது.
ஒரு ஐயங்கார் எனக்கு அனுப்பியச் செய்தி வி.சி.க தொண்டர்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த சங்கரர் படத்தை தார் பூசி அழிப்பது. அனுப்பியவர் 'இது vandalism இல்லையா' என்றார். இதில் முதல் vandalism செய்தவர்கள் தென்னக ரயில்வே நிர்வாகத்தினர் என்றேன். போன வருடம் இத்தாலி சென்றேன். அஸிசி நகரம் கத்தோலிக்கத்தின் மிக முக்கியமானப் புனிதர் பிறந்த இடம் ஆனால் அந்நகரின் ரயில்வே நிலையத்தில் அதற்கான எந்தத் தடையமும் இருக்காது. பொது மக்களின் வரிப்பணத்தில் சகலரும் வந்துப் போகும் இடத்தில் இது தேவையில்லாத வேலை என்றேன். அவர் "இது இந்திய வழி" என்றார் சிகாகோவில் இருந்துக் கொண்டு. "ஏன் இப்படித் தான் செய்ய வேண்டுமா, இங்கெல்லாம் இப்படியாச் செய்கிறார்கள், மதச் சார்பின்மையை பின் பற்றலாமே" என்றால் "நாம் ஏன் இவர்களிடம் இருந்து கற்க வேண்டும்" என்றார் அந்த அமெரிக்கா வாழ் இந்து. இவர்கள் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்றுச் சொல்கிறார்களோ அப்படி அமெரிக்கா இருந்தால் ஒரே நாளில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்தியாவுக்கு ஓடி விடுவார்கள். இங்கே இந்துக்களுக்கோ அவர்கள் வாழ்க்கை முறைக்கோ ஏதேனும் சிக்கல் வந்தால் அவை மிகக் கவனமாகவே கையாளப் படுகின்றன அதற்கு பல நிகழ்ச்சிகளை சுட்டிக் காட்ட முடியும்.
"அதைச் செய்தது ஒரு நிர்வாக முடிவு, யாரோச் சிலரின் தனிப்பட்ட முடிவு அல்ல அதையும் தார்ப் பூசி அழிப்பதையும் ஒன்றாக்கக் கூடாது" என்றார். இந்த வெளிப்புற வன்முறையை விட நாசூக்கான வன்முறை தான் அருவருப்பானது என்றேன். தமிழ் போன்ற ஒரு மொழியை பிராந்திய மொழி என்று ஒதுக்கி சமஸ்கிருதம் பல்கலைக் கழகங்களில் முன்னிறுத்தப் பட்டக் காலம் ஒன்றுண்டு தமிழ் நாட்டில். தஞ்சை SBI அலுவலகத்துக்கு நவராத்திரியின் போதுச் சென்றால் அக்கிரஹாரத்துக்குச் சென்ற உணர்வு வரும். மொழி, மதம், ஜாதி என்ற எந்த வகையிலேனும் பெரும்பான்மைச் சேர்ந்து விட்டால் நம்மவர்கள் அடிக்கும் கொட்டம் அலாதியானது. நோகடிப்பது வேறொரு நாட்டில் பன்மைத் தன்மைப் பற்றியும் சிறு பான்மையினரை எப்படி அரவனைத்துச் செல்வது என்றும் அன்றாடம் விவாதம் நடக்கும் சூழலில் பல்லாண்டு காலம் அந்த விவாதங்களின் பலனை அனுபவித்துக் கொண்டு இந்தியர்களுக்கு இன்னொருப் பாடத்தை அறிவுறுத்தும் ஹிபாக்ரஸி அருவருப்பானது.
மேலும் அவரிடம் சொன்னேன். இந்த மாதிரி சுவரெல்லாம் சங்கரர் படத்தை வரைவதற்குப் பதில் ஒரு தகவல் மையம் அமைத்து நகரின் முக்கிய இடங்கள் பற்ரி ஒரு நல்ல வரலாற்றுக் குறிப்பை அளிக்கலாம் அதில் சங்கரர், காஞ்சி மடம் எல்லாம் இருக்கலாமே என்றேன். 'அதெல்லாம் எங்கே சார் செய்வது' என்று அலுத்துக் கொண்டார். இன்று வரை சங்கரர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதங்கள், கீதை இவைப் பற்றி வெகு ஜன வாசகனுக்கு உரிய நல்லப் புத்தகங்கள் கிடையாது. இது தற்செயல் அல்ல. அவைப் பற்றிய புரிதல் மேதைகளுக்கானத் தங்களுக்கு மட்டுமே என்றும் சராசரி குடி மகனுக்கு சுவரில் ஓவியம் போதும் என்ற மேட்டிமைக் குணமுமே காரணம்.
அவரே வேளாங்கன்னி ரயில்வே நிலையத்திலும் இப்படி ஓவியங்கள் இருக்கலாம் என்று எனக்குத் தூண்டில் போட்டார். அதுவும் தவறே என்றேன். இணையத்தில் வேளாங்கன்னி ரயில்வே நிலைய புகைப்படம் கிடைத்தது. ரயில்வே நிலையம் என்னமோ சர்ச் போல் இருக்கிறது கட்டுமானத்தில். ஆனால் ஓவியமோ சிலுவையோ இல்லை. காஞ்சிபுரத்தில் சிவ லிங்கமே வரையப்பட்டிருந்தது. அந்த வேளாங்கன்னி ரயில்வே நிலையத்தின் புகைப்படத்தோடு ஒரு செய்திக் குறிப்பும் இருந்தது. ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளே இல்லை என்று.
நான் கடைசியாக தமிழகத்தில் ரயிலில் சென்றது 2010-இல். ஏஸி முதல் வகுப்பில் கரப்பான் பூச்சிகள் இருந்தன, கொடுக்கப்பட்ட கம்பளிப் போர்வை சலவையையேப் பார்த்திராதது, பரிமாறப்பட்ட உணவு பரலோகத்துக்கான டிக்கெட். தென்னக ரயில்வே எந்தப் பாரம்பர்யத்தையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு காப்பாற்ற முயல வேண்டாம் அது செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காகச் செய்தால் மக்கள் சந்தோஷப் படக் கூடும்.

No comments: