Thursday, January 04, 2018

கடவுள் மறுப்பை பெரியார் கையில் எடுத்த காரணம்

கடவுள் மறுப்பை, பெரியார் கையில் எடுத்த காரணம், "மக்கள் தன்னை திரும்பிப் பார்க்கவேண்டும்
என்பதே" என்ற ஒரு நண்பரின் குற்றச்சாட்டிற்கு பதில்
-
அறிந்து சிந்திக்கிறவர் எவரும் பெரியாரின் கடவுள் மறுப்பின் ஆதாரம் புரிந்தால் பெரியார் கருத்தை மறுக்கவே முடியாது.
-
மனிதனை பிரிக்கின்ற , மனிதர்களுக்கிடையில் சமத்துவமற்ற எந்த ஒரு வேற்றுமையையும் சாடியவர் பெரியார்.
அது பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் உட்பட்ட என்ன காரணமாக இருந்தாலும் ஒரு மனிதன் மேல் இன்னோர் மனிதன் செய்கின்ற ஆதிக்கத்தை தகர்த்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பெரியார்.
.
வர்ணாசிரமத்தின் அடித்தளத்தில் உருவான இந்துமதம், நால்வகை பிரிவுகளை வைத்து மனிதனை பிறப்பின் அடிப்படையிலே சமத்துவமற்றவனாக வைத்திருந்தது.
அம்பேத்கர் இந்துமதத்தின் கொடும்பிணியை தெளிவாய்ச் சொன்னார்.
"இந்து மதம் என்பது பல அடுக்குகள் கொண்ட மாளிகை;
ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் படிக்கட்டும் இல்லை வாசலும் இல்லை ஒரு அடுக்கில் பிறந்தவன் அதிலே சாக வேண்டும். வேற அடுக்குக்கு போகவும் முடியாது வெளியே வரவும் முடியாது" என்று .
-
அந்த வர்ணாசிரமத்தை, சாதியை எதிர்க்கிற பெரியார் அதன் அடியோடு அடியாக இழைந்து கிடந்த கடவுளையும் எதிர்க்கவேண்டிய கட்டாயம் வந்தது.

சாதியில் இருந்து உன் மதத்தை , கடவுளை பிரித்துக் கொண்டு போக உன்னால் முடியுமானால், பிரித்துக்கொண்டு போ அதில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.
உன் மதம், உன் கடவுள் சாதியோடு, வர்ணாசிரமத்தோடு தான் பின்னிக்
கிடப்பார் என்றால் அதை எதிர்த்தே தீருவேன் என்று சொன்னார்.
மூடநம்பிக்கைகளும் , கொடூரமான பழக்கவழக்கங்களும் மதத்தின் பேரால் தான் மக்கள் வாழ்விலே திணிக்கப்பட்டன என்பதை அறிவுடையோர் அறிவர்.
-
"ஒடுக்கபட்டவரை தாங்கள்
ஒடுக்கப்பட்டது சரிதான் என்று எண்ணவைக்கிற அமைப்பு தான் மதம்" என்ற வழக்கின் படியும், மதத்தை எதிர்த்தே ஆகவேண்டியதும் அவசியம்.
இவை எல்லாம் அறிந்திருந்தும், தெளிவான சிந்தனை இன்றி, வெறுமனே மக்களை திரும்பிப் பார்க்க வைக்க இறைமறுப்பை வலியுறுத்தியதாக சித்தரிக்க முயல்வது அறிவுடைமை ஆகாது.
மேலும், பெரியாரின் வழி நடப்பவர்களை பலர் அவ்வப்போது தேச துரோகிகள் என்று சொல்வதுண்டு.
அது என்னவோ உண்மை தான்,.
நாங்கள் மனிதனை தவிர வேறு எதன் மீதும் பற்றுகொண்டவர்கள் அல்ல. தேசமோ, மொழியோ, மதமோ , சாதியோ, மனிதனை பிரிக்கும் எனில் அவற்றிக்கு எல்லாம் நாங்கள் துரோகிகளாவே இருக்க ஆவலுறுகிறோம்

No comments: