Friday, January 05, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இணைய உலகமே? - யாருக்கு யாரோ புகழ் "சாம்ஆண்டர்சன்"
எழுதியது ஈரோடு கதிர்

இரண்டு வருடங்கள் இருக்கும், இந்தக் கொடுமையைப் பாருங்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட சுட்டியில் இருந்த சினிமாப்பாடலையும், நடனத்தையும் பார்த்துவிட்டு உபரியாக அந்தப் பாடலின் கீழ் இடப்பட்ட பின்னூட்டங்களையும் கண்டு அதிர்ந்துபோனது நிஜம். அதன் கீழ் இருக்கும் பின்னூட்டங்களைக் கண்டு வயிறு வலிக்கச்சிரித்தாலும் அதில் இருக்கும் அறுவெறுப்பு சகிக்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. Youtube சுட்டிகள் ஒவ்வொன்றையும் பார்த்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதும் ஆச்சரியமாக இருந்தது. ”யாருக்கு யாரோ” புகழ் ”சாம் ஆண்டர்சனை” தமிழ் இணைய உலகம் தவிர்க்க இயலாமால் அவ்வப்போது பயன்படுத்தி சிரித்துச் சிரித்து சலித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பது புரிந்தது.


சென்ற வார ஆனந்தவிகடனில் வந்த சாம்ஆண்டர்சன் குறித்த ஒரு நகைச்சுவை பேட்டிதான், பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை மீண்டும் சாம் ஆண்டர்சனை எடுத்துச் சென்றது. அதுவரை அவர் ஈரோடு எனத்தெரிந்தாலும் அவரைக் கண்டுபிடிப்பது இயலாததாகவே இருந்தது அல்லது பெரிதாக முயலவில்லை. விகடன் பேட்டியில் இருந்த சதர்ன் கூரியர் என்ற வார்த்தைதான் மீண்டும் அவரைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

”யாருக்கு யாரோ படம்”

செவ்வாய்க்கிழமை (02.08.11) காலையில் வந்தவுடன் இன்று எப்படியாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று Youtubeல் ஒருவழியாய் வரிசையாய்ப் பார்த்து முடித்தவுடன், ”என்ன ஆனாலும் சரி இந்தாளை இன்னிக்கு எப்படியாச்சும் புடிச்சிடனும்”னு ஒரு கிறுக்குத்தனம் வந்தது. அப்போது நண்பர் கார்த்தியும் வந்து சேர, ஒரு வழியாய் சதர்ன்கொரியர் எண் பிடித்து அங்கிருக்கும் நண்பரிடம் சாம்ஆண்டர்சன் எண் வாங்குவது என முடிவு செய்து, உள்ளுக்குள் ஓடிய ஆயிரம் கேள்விகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, அந்த நண்பருக்கு போன் அடித்தேன். அவர் போனை எடுத்ததும் ”சாம்ஆண்டர்சன் உங்ககூடத்தான் இருக்கார!?” எனக் கேட்கும் போதே என் வார்த்தைகளை என் சிரிப்பே தின்று தீர்த்தது. ஒருவழியாய் அவரின் தொடர்பு எண்ணைப்பெற்று, அவரை அழைக்கலாமா வேண்டாமா என பல தயக்கங்களுக்குப் பிறகு ஒரு அசட்டுத்துணிச்சலில் அழைப்புவிடுத்தேன்.

வாகனத்தில் செல்லும் இரைச்சலோடு சாம்ஆண்டர்சன் போனை எடுத்தார். எனக்கு ”ஹலோ” சொல்லும் முன்னே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது. சாம்ஆண்டர்சனா எனக் கேட்டு, அவர் ஆமாம் சொல்லுங்க என்று சொல்லும்முன்னே மீண்டும் எனக்கு சிரிப்பு கொப்பளித்து வந்தது. ஒருவழியாய் சமாளித்து பேச முற்பட, “என்ன விசயம், நீங்க யாரு சார்?” எனக்கேட்டார்.

கார்த்தியிடம் போனைக் கொடுத்து ”நீங்க பேசி சமாளிங்க” என்றுசொல்ல, அவரும் மறுத்து எஸ்கேப் ஆகிவிட, நான் டரியலாகி நின்றேன்

சட்டென “உங்கள் ரசிகன்” என்று அப்பட்டமாக அவரை ஓட்ட மனது வரவில்லை,

”இந்தமாதிரி இந்தமாதிரி விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன், நெட்ல உங்க படம் பார்த்தேன்” என ஒருமாதிரி சொதப்பி பேசத் துவங்கினேன்.

“நெம்பர் யாரு குடுத்தாங்க, நீங்க யாரு” என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் உளறி, ஒருவழியாய் “உங்களைச் சந்திக்கமுடியுமா, ஒரு பேட்டி எடுக்கனும்” என்றேன்.

அவரின் சந்தேகம் அப்போதுதான் அதிகரித்தது “நான் கூரியர் டெலிவரில இருக்கேன், எதுக்கு சார் பேட்டி எடுக்கனும், நீங்க யாரு, எங்கேயிருக்கீங்க,” என அவர் மடக்க.

என் பெயர் முகவரி எல்லாம் சொல்ல அவரே “சார் உங்க ஆபிஸ்க்கு வந்து நானே கூரியர் குடுத்திருக்கேன்” என்று சொல்லி பேச்சைக் கொஞ்சம் எளிதாக்கினார்.

உங்களை சந்திக்க முடியுமா என மீண்டும் கேட்க அவர் கூரியர் டெலிவரியில் திண்டல் பகுதியில் இருப்பதால், ”டெலிவரி முடிச்சிட்டு, சாப்டவே 4 மணிக்குத்தா வருவேன், நால்ர மணிக்கு உங்க ஆபிஸ்க்கே வர்றனே” என்றார்.

போனை வைத்த பிறகு, பேசியது நிஜம்தானா என்னை நானே ஒருநிமிடம் கேட்டுக்கொண்டேன். நண்பர் கார்த்தியிடம் ”சாம்ஆண்டர்சன் மாலை 4 மணிக்கு வர்றதா ஒப்புக்கொண்டார்” எனச் சொல்லிவிட்டு, சந்திப்பு குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, அவரைச் சந்திக்கும் தைரியத்துக்கு மக்களிடம் பாராட்டு வாங்கி காத்திருக்க ஆரம்பித்தேன். துணைக்கு லவ்டேல் மேடி, ஜாபர், கார்த்தி, கருவாயன் சுரேஸ் என ஆள் அம்போடு எப்போது 4 மணி ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம்.

மணி நாலைத் தாண்டியது, சாம்ஆண்டர்சன் மட்டும் வந்த பாடில்லை. மீண்டும் போன் அடிக்க, “சார் இப்போதா வீட்ல சாப்ட்டேன், ஒரு பத்து நிமிசம்” எனத் தள்ளிப்போட்டார். ஆவலோடு காத்திருந்த நண்பர்கள் காதில் புகைவழிய முறைக்க, 10……15….. 20 நிமிடம் ஆனது, அவர் வரவில்லை.

மீண்டும் அழைக்க இன்னொரு 5 நிமிடம் என்றார். ”வர்றேன்னு சொல்லிட்டு ஏமாத்துறாரோ” எனச் சந்தேகம் வந்தது. அதற்குள் லவ்டேல் மேடி “தல, சாம்ஆண்டர்சன் வராட்டி, இன்னிக்கு நீங்க தான் ட்ரீட்” என மிரட்ட ஆரம்பித்தார். ட்ரீட் என்பது ஒரு டீயும், க்ரீம் பன்னும்தான் என்றாலும் சாம்ஆண்டர்சன் வராமால் போனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உலகத்தில் எப்படி முகத்தைக் காட்டுவது என்ற குழப்பம்தான் (ங்கொய்யால இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல)

ஒரு வழியாய் 5.15 மணிக்கு வந்து சேர்ந்தார், இணைய உலகம் பார்த்து ரசித்துக் கொண்டாடி, திட்டி மகிழ்ந்த ”ராசாத்தி ஏ ராசாத்தி” பாடல் நாயகன்.

PIT சுரேஷ் - சாம் ஆண்டர்சன்
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள், அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்து அந்தப் படம் தியேட்டரிலும், ஜீ தொலைக்காட்சியிலும் கூட ஓடியது என்றால். நேரில் பார்த்தபோதுதான் அடையாளம் புரிந்தது நானும் அவரை சில முறை பார்த்திருக்கிறேன் என்பது.

நாங்கள் ஐந்து பேர் குழுவாக அமர்ந்திருப்பதைக் கண்டவுடன் அவரிடம் ஒரு திடுக்கிடல் தோன்றியது. ஒரு வழியாய் அறிமுகப்படலம் முடிந்து அவரின் சினிமா, இப்போது செய்துவரும் பணி, சமீபத்தைய விகடன் பேட்டி குறித்து பல விசயங்கள் உரையாடினோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் அந்தப் படத்தின் இயக்குனர் அவரின் பெரியப்பா. மத்திய அரசு சார் நிறுவத்தில் இசைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவருக்கு ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசை, அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது கதாநாயகன் கிடைப்பதில் ஏதோ சிக்கல் வர, இவரை நடிக்கச் சொல்லியிருக்கார். தயாரிப்பு அவர்கள் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு.

சாம் ஆண்டர்சன், லவ்டேல் மேடி, ஜாபர்

நடிப்பு என்பது துளியும் வராத அவரை வைத்து ஒரு வழியாய் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் காட்சியில் கதாநாயகியின் கையை பிடிக்கும் போது, நம்ம ஆள் பயத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். அது போன்ற பல சுவாரசிய சம்பவங்கள்

படத்தை வலிந்து சில திரையரங்குகளில் வெளியிட்டு ஓட்ட முயற்சி செய்து அதுவும் வெற்றியடையவில்லை. ஜீ டிவி அதை வாங்கியது ஒரு சிறு ஆறுதல். இரண்டு கதாநாயகி வேண்டும் என தீர்மானித்து வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய, அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போதே ஆயிரத்தெட்டு பந்தா செய்ய அவரை மாற்றி அவசர அவசரமாக வேறு பெண்ணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்

நண்பர் ஜாபர் கேட்ட சில கேள்விகளில் குறிப்பாக ”படத்தின் தவறுகள் என்ன”வென்று கேட்டபோது, வெள்ளந்தியாக அவர் சொன்னது ”எல்லாமே தவறுதான் சார், அதிலும் நடிக்கவே தெரியாத நான் நடித்ததுதான் பெரிய தவறு” என்றார்.

படம் எடுத்த செலவுகள் குறித்துப்பேசும் போது, அப்போது செலவிட்ட தொகைக்கு ஒரு ரூட் பஸ் வாங்கியிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. படத்தை சென்சாரில் மட்டுமே பாராட்டியிருக்கிறார்கள், பார்த்தவர்கள் பலரும் எப்படியாவது தொடர்புகொண்டு கிண்டலடித்திருக்கிறார்கள் அல்லது திட்டியிருக்கிறார்கள். அனைவருக்கும் அவர் சொன்னது, சொல்ல விரும்புவது “ஒன்னுமே தெரியாம ஒரு முயற்சி எடுத்தேன், அது சொதப்பிடுச்சு, எல்லோருமே எடுத்தவுடனே 100 மார்க் வாங்கிடமுடியுமா, அந்தப் படத்திற்குப் பிறகுதான் பலவிசயங்கள் கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திட்றவங்க திட்டிட்டுப்போறாங்க சார்,” என்பதுதான்.

அடுத்து விகடன் பேட்டி குறித்து கேள்விகள் திரும்ப, விகடனும் எங்கெங்கோ தேடி ஜீ டிவி மூலம் தொடர்பு கிடைத்து தன்னிடம் பேசியதாகவும். விகடனில் வெளிவந்த பேட்டியில் பெரும்பாலானவை அவர்களாகவே நகைச்சுவைக்காக எழுதிக்கொண்டதாகவும் அப்பாவியாகச் சொன்னார். ஆனால், விகடன் பேட்டி வெளிவந்த பிறகு அவர் கூரியர் கொடுக்கச் செல்லுமிடத்தில் புதிது புதிதாக மக்கள் அடையாளம் கண்டு பேசுவதாகக் கூறினார்.

இணையத்தில் YouTubeல் அவரின் படக் காட்சிகளை பல லட்சம் முறை பார்த்திருப்பது, கேவலாமாகத் திட்டி கருத்துகள் வந்திருப்பது, சாம்ஆண்டர்சன் ரசிகர் குழு என்ற பெயரில் ஆர்குட்டில் 1800 பேர் & ஃபேஸ்புக்கில் 400 பேர் இருப்பது, அவருக்கென விக்கிப்பீடியாவில் ஒரு பக்கத்தில் அவரைப்பற்றிய குறிப்பு என்று பொய்யான தகவல்கள் இருப்பது, அவருடைய ”யாருக்கு யாரோ” ராசாத்தி ஏ ராசாத்தி பாடல் ”ராமசாமி” குறும்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது…. என்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்துக் கேட்கும் போது “அப்படியா சார், இப்படியெல்லாம் இருக்கா, விக்கிப்பீடியானா என்ன சார்” என அப்பாவியாக் கேட்ட போது கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

இணையம் குறித்து மருந்துக்கும் தெரியாத மனிதனையா, இந்த இணைய உலகம் இவ்வளவு குத்திக் குதறுகிறது (அ) கொண்டாடுகிறது?. ஒரு வகையில் அவரைக் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளை அந்த மனிதன் பார்க்கவில்லையென்பதை நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கியதாகச் சொன்னார், ஆனால் அதன் பயனர்பெயர் கூட அவருக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இன்னொரு படம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் எப்போது எப்படி என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யமுடியவில்லை என்றும் கூறினார்.

லவ்டேல் மேடி, நான், கார்த்தி, சாம் ஆண்டர்சன்
ஒரு சினிமாவில் நடித்திருக்கிறோம் என்ற பந்தா சிறிதும் இல்லாத வெகுளித்தனம் மட்டுமே நிறைந்த அவரைப் பார்க்கும் போது, சந்திக்கும் முன் வரை இருந்த கிண்டலும், குறும்பும், குறுகுறுப்பும் அன்பாக உருவெடுத்தது. சினிமாவில் நடித்துவிட்டோம் இனி எப்படியாவது சினிமாவிலேயேதான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் தினம் தினம் முகவரிகள் தேடித்தேடி கூரியர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முடிந்தவரை நல்லபடியாக செய்யவேண்டும் என்ன எண்ணமும் ஆவலும் இருக்கிறது!

நமக்கு அவரைக் கிண்டல் செய்ய எவ்வளவு சுதந்திரத்தை இந்த உலகம் கொடுத்திருக்கிறதோ அதைவிட அதிகமாக, அவர் விருப்பப்பட்டதை அவர் செயல்படுத்த அதிக சுதந்திரமும் உரிமையும் இருப்பதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அவரைச் சந்தித்து இரண்டு நாட்கள் கழிந்தபின்பு இன்று YouTubeல் அந்தப் பாடலை பார்க்கும்போது சிரிப்பு பொங்கிவரத்தான் செய்தது ஆனால், அதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்க்க மனம் விரும்பவில்லை!

No comments: