Wednesday, January 03, 2018

ஸ்டெம் செல்லை பற்றி Dr.ஃபரூக் அப்துல்லா

--PART 1--



இப்படி ஒரு படத்தை அனுப்பி 
இதை பற்றிய கருத்தென்ன என்று நட்பொருவர் கேட்டிருந்தார்
எனது கருத்து பின்வருமாறு
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
மருட்டி வகை சுகப்பிரசவம் என்று வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம்
இதில் குழந்தையின் நஞ்சு கொடியை உடனே அப்புறப்படுத்தாமல் அது காய்ந்து சருகாகும் வரை விட்டு விடுவது நல்லது என்பது போல சிலர்
தகவல்களை பரப்பி வருவதை காண்கிறேன்.
இதற்கான அறிவியல் பூர்வமான பதிலை அளிக்கிறேன் . சற்று பொறுமையாக படிக்கவும்
நஞ்சுகொடி( placenta) என்பது என்ன?
பல கோடி விந்தணுவில் போட்டியில் முந்தும் ஒற்றை விந்தணு தாயின் கருமுட்டையுடன் இணைந்து ஒரு முட்டையாக உருமாறி தாயின் கர்ப்பபை எனும் கழனியில் விதையாக இடப்பட்டு முளைக்கும்
அது தனது 40 வார கருப்பை பயணத்தை ஆரம்பிக்கும் . அந்த 40 வாரமும் அதற்கு தேவையான ஊட்டச்சத்து தாயிடம் இருந்து பெறுவது இந்த நஞ்சுக்கொடியின் மூலம் தான்.
ஆக, குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் இந்த நாற்பது வாரமும் நஞ்சுக்கொடியின் தேவை மிக மிக இன்றியைமயாதது.
இந்த நஞ்சுக்கொடியானது குழந்தைக்கு ஊட்டம் அளித்து தானும் அளவில் வளர்ந்து 36 முதல் 40 வாரங்களில் முதிர்ச்சி அடைகிறது
இப்படி முதிர்ச்சி அடைவதை கொண்டே உள்ளே உள்ள குழந்தையின் வாரத்தை கணிக்க முடியும்.
40 வார இறுதியில் ஒரு நன்னாளின் நற்பொழுதில் குழந்தை பிறக்கிறது.
பிறந்த குழந்தையுடன் இந்த நஞ்சுக்கொடியுடன் கூடிய நஞ்சுப்பையும் வெளியேறுகிறது.
நவீன மருத்துவத்திலும் சரி இதற்கு முன்பு வீட்டில் பார்க்கப் பட்டு வந்த பிரசவ முறையிலும் சரி நஞ்சுக்கொடி குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நஞ்சுப்பை அப்புறப்படுத்தப்படும்.
நவீன மருத்துவத்தில் , குழந்தை பிறந்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு நஞ்சுக்கொடி சுத்தமான கத்திரிகோலால் நறுக்கப்பட்டு குழந்தை தனியாக பிரிக்கப்படுகிறது
நஞ்சுக்கொடியை நறுக்கும் முன் குழந்தையை நோக்கி அந்த கொடி பிதுக்கப்படும். தாயிடம் இருந்து கிடைக்கும் அந்த 10 முதல் 15 மில்லி ரத்தமும் குழந்தைக்கு கிடைப்பதற்காக இந்த ஏற்பாடு.
பிறகு தாய்க்கு கர்ப்பைபையின் மேல் மெதுவாக தடவிக்கொடுக்கப்படும். நஞ்சுப்பை மெதுவாக கர்ப்பைபையை விட்டு பிரிந்து வெளியே வரும்
அந்த நஞ்சுப்பை முழுமையாக வந்துவிட்டதா? என்று நோக்கப்படும். மீண்டும் ஒரு முறை கர்ப்பபையினுள் வேறு நஞ்சுப்பையின் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருக்கனவா என்று பார்க்கப்படும்.
இந்த நஞ்சுப்பையை என்ன செய்கிறோம்?
மருத்துவமனைகளின் பின்னே நன்றாக ஆழமாக குழி தோண்டி புதைக்கிறோம் . இதை Deep burial என்கிறோம்.
சிலர் கூறுவதை போல, ஒரு கோடிக்கெல்லாம் இந்த நஞ்சுக்கொடி விற்பனை ஆவதில்லை. சிரிப்பு தான் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போது மருத்துவமனைகளில் 2016 இன் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி நாங்கள் கழிவுகளை வெளியேற்ற பணத்தை கொடுத்து தான் செய்கிறோம்.
சிலர் இதற்கு ஒரு கோடி கொடுக்கிறார்கள்... அமெரிக்கா காரன் கொடுக்கிறான் என்று கதை அளந்துவிடுபவர்கள்.. தயவு செய்து தங்கள் கதைகளை அட்லியிடம்
கூறினால் அவரது அடுத்த படத்தில் அதை புகுத்தி பல புரட்சிகள் செய்வார்
நஞ்சுக்கொடி என்பது வெளியேறிவிட்டால் அதனால் ஒரு பயனும் கிடையாது
நீங்கள் கதையில் குற்றவாளியாக உள்ளே இழுக்கும் அமெரிக்காவின் மருத்துவ கழகமே ஸ்டெம் செல்லை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறிவிட்டது.
ஸ்டெம் செல் பாதுகாப்பு
அதற்கு வருடம் 20,000 எல்லாமே புருடா மற்றும் தேவையற்ற ஆணிக்களே
ஸ்டெம் செல்லை பாதுகாத்து வரும் பல பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த வாழ்த்துகள்.
அது போக அடுத்த கப்சா யாதெனில்.இந்த ஸ்டெம் செல் இருந்தால் உலகத்தில் குழந்தைக்கு எந்த நோயும் வராது என்று காரண்டி கொடுப்பது கேன்சர் வராது என்று சத்தியம் சொல்வதெல்லாம் தரமான காமெடி
தொப்புள் கொடியை சரியான நேரத்தில் வெளியே எடுக்காமல் விட்டால் என்ன ஆகும் ?
பிரசவத்தின் போது மூன்று நிலைகள் இருக்கின்றன
1. கர்ப்ப பை வாய் திறக்க ஆரம்பித்தலில் இருந்து பனிக்குடம் உடையும் வரை
2. பனிக்குடம் உடைவதில் இருந்து குழந்தை பிறத்தல் வரை
3. குழந்தை பிறந்ததில் இருந்து நஞ்சுப்பையை வெளியேற்றும் வரை
இதில் தாய் மரணங்கள் அதிகமாக நிகழ்வது மூன்றாம் நிலையில் தான்.
பிரசவத்திற்கு பின்பான ரத்தப்போக்கு (post partum haemorrhage ) நிகழ்வது ,
நஞ்சுக் கொடி கர்ப்ப பையிலேயே தங்கிவிடுவது ( retained placenta) போன்ற காரணங்களினால் உதிரப்போக்கு அதிகமாகிறது
சரியான முறையில் பிரசவத்தின் மூன்றாவது நிலையை
கவனிப்பதற்கு பெயர் AMTSL ( ACTIVE MANAGEMENT OF THIRD STAGE OF LABOUR )
நஞ்சுக்கொடி வெளியேறியவுடன் அதில் இருக்கும் ரத்தம் மணிநேரங்கள் செல்ல செல்ல கெட்டுப்போய் விடும். அது குழந்தைக்குள் செல்லுமாயின் குழந்தைக்கு நோய் தொற்று( SEPSIS) ஏற்படும்
இந்த நோய் தொற்று குழந்தையின் இறப்புக்கு காரணமாய் அமைந்து விடும்.
ஆகவே, குழந்தை பிறந்த பின் நஞ்சுக்கொடியை விட்டு வைப்பதால் குழந்தையின் உயிருக்கு கேடு தான் விளையுமே தவிர நன்மை விளையாது
இந்த ஸ்டெம் செல் , அமெரிக்கா, இலுமினாட்டி , ஒரு கோடி விலை இவையெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை
😊
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

--PART 2--

ஸ்டெம் செல்லை பற்றி கூறியவுடன் பலருக்கும்
ஒரு டவுட்..
நாங்கள் எங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்லை ஸ்டோர் செய்து வைத்துள்ளோம். அது தேவையற்றதா?
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
உண்மையில்.. உங்கள் குழந்தைக்கு பின்னாளில் மரபு வழி நோய்கள் ஏதேனும் வரின் ..உதாரணம்... டைப் ஒன்று டயாபடிஸ் என்று பத்து வயதில் கண்டுபிடிக்கப்பட்டால் ...அதை குணப்படுத்த ஸ்டெம் செல்கள் உதவும் என்ற எண்ணத்தில் இந்த ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன.
ஆனால் உண்மையாக, உங்கள் குழந்தைக்கு எந்த மரபணு பிரச்சனையால் டைப் 1 டயாபடிஸ் வந்ததோ , அதே மரபணு குறைபாடு அதன் நஞ்சுக்கொடியின் ஸ்டெம் செல்லிலும் இருக்கத்தானே செய்யும்.
ஆகவே, உங்கள் குழந்தையின் டைப் ஒன்று டயாபடிஸை குணப்படுத்த உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல் பயன்படாது.
உங்கள் குழந்தையுடன் ஒத்துப்போகும் ஆனால் டைப் ஒன்று டயாபடிஸ் இல்லாத ஒரு குழந்தையின் ஸ்டெம் செல் தான் உதவும் ஆக, அப்போதும் அந்த ஸ்டெம் செல்லை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் .
ஸ்டெம் செல்களை எல்லாம் எடுத்து வங்கி போல ஸ்டோர் செய்து வைத்தால் அவரவருக்கு தேவையான ஸ்டெம் செல்லை பணம் கொடுத்து பெற முடியும்
சரி இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி எந்த அளவில் இருக்கிறது?
அது மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது
நிலவில் பட்டா போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தால்
அதையும் வாங்க இங்கு ஆள் உண்டு.
அதை சிலர் பல பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய வரலாறும் உண்டு.
இங்கு ஒரே விசயம் தான்
ஒருவரின் பேராசையை தூண்டினால் போதும்
எளிதாக அவரை நம் வசமாக்கலாம்
ஆம்..
உங்களின் பிள்ளைக்கு வாழ்நாள் முழுவதும் எந்த நோயும் வராது ..
கேன்சர் வராது..
சரி செய்து விடலாம்...
என்று கூறினால்..
இருக்கவே இருக்கிறார்கள் பணம் வைத்துக்கொண்டு செலவு செய்ய வழி தெரியாமல் ஒரு சாரார்...
சரி இந்த ஸ்டெம் செல்லை பத்திரமாக வைத்திருக்க வருடம் இத்தனை ஆயிரம் செலவு செய்கிறீர்கள்.. ஓகே..
குழந்தைக்கு பிரச்சனை என்று பின்னாளில் கண்டு பிடிக்கப்பட்டால் உடனே இந்த ஸ்டெம் செல்லை எடுத்து உடலில் ஏற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது எதற்கு சமம் தெரியுமா???
நிலவில் இடம் வாங்கி
வீடு கட்ட ரெடியாகுவதற்கு சமம்.... 😂😂😂
அறிவியல் வளரும்
ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டமும் சேர்ந்தே வளரும்
😁
மக்களே ..என்னை மன்னிச்சு...
என்னால் இதை விட எளிதாக கூற முடியாது...
Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

--PART 3--

நமது பாட்டன்கள் தொப்புள் கொடியை தாயத்தாக கட்டியது எதற்கு ?
அவர்களுக்கு ஸ்டெம் செல் தெரபி பற்றி அப்போதே தெரிந்து.. இது போன்று செய்தார்களா ?
எனது பதில்
Dr .ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
முதலில் அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்
நம்மை விட நம் முன்னோர்
உழைப்பாளிகளாகவும்
ஐந்து புலன்களையும் நுட்பமாக பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்கியிருக்கலாம்.
அவர்களிடம் அறிவியல் இத்தனை முன்னேற்றம் ஏற்படாத காலத்திலும்
அவர்கள் செய்த கட்டடகலை , கோபுரங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன.
ஆகவே அப்போதே இண்ஜிணீயரிங் துறை ஒரு பெரிய கோவில் கட்டுமளவு வளர்ந்திருந்தது என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியும்.
அதே போன்று தான் மருத்துவத்திலும், சித்தர்கள் எழுதி வைத்துச்சென்ற ஓலைகளை படித்து அவர்கள் வழி வந்தோர் வைத்தியம் பார்த்தனர்.
அக்கால நோய்களுக்கு தங்களால் ஆன சிறப்பான வைத்தியத்தை பார்த்தனர்.
ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்
நம்மை விட அனைத்திலும் சிறப்பாக நம் முன்னோர் இருந்தனர் என்று கூறுவது ஏற்கலாகாது
காரணம்
கடந்த இரு நூற்றாண்டுகள் வரை
மின்சாரம்
பெட்ரோல் இன்ஜின்
கணிணி
மைக்ரோஸ்கோப்
டெலிபோன்
ரேடியோ
டிவி
விமானம்
ஒளி விளக்கு
செயற்கை கோள் போன்றவை
கண்டுபிடிக்கப்படவில்லை
இவையனைத்தையும் கொண்டு நாம் அடைந்த இந்த அசுர வளர்ச்சியை நிச்சயம் நம் முன்னோர் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்
சரி தாயத்துக்குள் தொப்புள் கொடிக்கு வருவோம் -
ஸ்டெம் செல்கள் இருப்பதை அறிந்தெல்லாம் அவர்கள் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை .காரணம்
அப்போது நுண்ணோக்கி கிடையாது. நமது உடல் செல்களினால் தான் ஆனது என்று கூறிய
ராபர்ட் ஹூக் கடந்த பதினேழாம் நூற்றாண்டில் தான் பிறந்தார்.
ஸ்டெம் செல் தெரபி தற்போது இருபது ஆண்டுகளாக தான் வளர்ந்து வருகிறது.
பிரபலமாகி வருகிறது.
மேலும் ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட உறைகுளிரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாயத்தில் வைத்து பின்னாடி ப்ரயோஜனம் இல்லை.
எதையாவது தாயத்தாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று நரி முடி , பித்தளையில் எழுதி போட்டுக்கொள்வது, குழந்தையின் தொப்புள் கொடி என்று போட்டுக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் தாயத்து போட்டதின் முக்கிய நோக்கம்
பயத்தை போக்கும் ப்லாசிபோவாக அந்த தாயத்து உதவியது
அவ்வளவே..அதற்கு மீறி முக்கியத்துவம் அதற்கு தேவையில்லை
நம் முன்னோர் வழக்கப்படி நரபலி கொடுக்கும் பழக்கமும் தான் வழக்கில் இருந்தது. அதற்கும் அறிவியல் காரணம் ஏதும் காண முடியுமா?
அனைத்துமே அக்காலத்தில் அவர்களுக்கு தெரியாதவற்றின் அறியாதவற்றின் மீது கொண்டிருந்த மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அவ்வளவே
"முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" கும்பலுக்கு என் கருத்து

நம் முன்னோர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை. அவர்கள் காலத்தில் அவர்கள் தான் மிகச்சிறந்த அறிவாளிகள்.
Dr.ஃபரூக் அப்துல்லா 


சிவகங்கை

No comments: