Thursday, January 04, 2018

சாவித்திரி ராவ் பூலே

சாவித்திரி ராவ் பூலே
(3 January 1831 – 10 March 1897)
ஆயிஷாவை உயர்த்திய படிகள்.
பெண்ணுரிமை போராளிகள் தொடர்
டிசம்பர் இறுதி, நல்ல பனி, இரவு பதினொரு மணி , கோவை பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. மடிக்கணிணியை இருக்கையில் வைத்து விட்டு கீழிறங்கி நின்ற போதுதான் மசூது பாய் எதிரில் வந்தார். கூடவே அவர் மகள் ஆயிஷா. ,
சலாம் சொல்லி விட்டு அவரே தொடங்கினார். "லீவு முடிஞ்சு காலேஜுக்கு போறா?! அதான் பஸ் ஏத்தி விட வந்தேன் .நீங்களும் கோயம்புத்தூருக்கா , இறங்கும் போது பாத்துகிடுங்க ". எஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாளாம். கொஞ்சநேரம் பேசிகொண்டிருக்கும் போதே பேருந்து நகர ஆரம்பித்தது. மசூது பாய், ஆயிஷாவிடம் இறங்கியதும் போன் பண்ணச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
.
ஆயிஷா யார் துணையும் இன்றி ஒரு இரவுப் பயணத்தை தாண்டி தன் உயர்கல்விக்க்காக செல்கிறாள். தமிழகத்தில் இன்றைய நாளில் இது இயல்பானது. இதில் வியப்படைவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும் இது எப்படிச் சத்தியப் பட்டது , சாத்தியப் படுத்த உழைத்த கரங்கள் எவை என்பதில் தான் சிந்தனை.
இன்றில் இருந்து சற்றேறக் குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான இந்தியாவில் இதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடிந்திருக்குமா ?!
சமைக்க, துணி துவைக்க, இரவில் இயைந்து கொடுக்க,
வரிசையாய் பெற்றுத்தள்ள, வாழ்நாள் எல்லாம் வளர்த்து வரும் ஒரு அடிமை என்ற எண்ணம் தாண்டி பெண்களைக் கண்டிராத ஒரு காட்டுமிராண்டிச் சமுதாயத்தில், பெண்கள் படிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தை , அதைச் சாத்தியமாக்க 1840களில் உழைத்த கரங்கள் சொல்லவா ?!
மகாராஷ்டிரத்தின் நய்காவ்ன் என்கிற ஊரில் பிறந்த சாவித்திரி ராவ் பூலே(பிறப்பு: 1831 ஜனவரி 03) தெரியுமா?!, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை . அவர் கணவர் ஜோதிராவ் பூலே, முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கியவர். குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்த நேரம், சாவித்திரி ராவின் ஒன்பதாம் வயதில் திருமணம். மனைவியாய் தானே பாடம் நடத்தி அவரை கல்வியாளராய் உருவாக்குகிறார் ஜோதிராவ் புலே .
அண்டை அயலார் ஏற்கவில்லை. "பொட்டச்சிக்கு என்ன படிப்பு வேண்டிகிடக்கு?!" என்ற முப்பாட்டன் காலத்து வசனங்கள் மெல்லக் கடிந்து , அவை கேட்கப் படாது போன போது வன்முறை கட்டவிழ்த்து விட்டும் பார்த்தன.
யாருக்கும் அஞ்சினார்கள் இல்லை. எதிர்த்து நின்றார்கள் கணவனும், மனைவியும். படித்ததோடு மட்டும் அல்ல , மற்ற பெண்களையும் படிக்க வைத்தாக வேண்டும். அதிலும் விவசாயப் பெருங்குடிப் பெண்கள் படிக்க வேண்டும் என்று சாவித்திரி ராவ் பூலே உரக்கச் சொல்கிறார்.

பத்தாம்பசலிகள், பழம் பெருச்சாளிகள் , என்னென்னவோ செய்து பார்க்கின்றனர். சாவித்திரி ராவ் பூலேவைப் பற்றி அசிங்கமான அர்ச்சனைகள் , சாலையில் நடக்கும் போது கல் எறிந்து பார்த்தார்கள். சாணத்தை எறிந்து பார்த்தார்கள். ஒரு நாள் அப்படி கல்லெறிய வந்தவனுக்கு கன்னம் பழுத்தது. சாவித்திரி தான். அதிர்ந்து அடங்கிப் போனது சில கும்பல்கள்.

பெண்களைப் படிக்க வைக்க பெண் தான் சரி என்று முதல் பெண் ஆசிரியையை தானே உருவெடுத்தார். 1848 இல். அது தான் முதல் பெண்களுக்கான பள்ளி . கூட இணைந்து கொண்ட இன்னோர் பெண் பாத்திமா ஷேக் .
பள்ளி நடந்து கொண்டிருந்தாலும்,ஒளிந்திருந்து சேறு வீசுகிறவர்கள் முழுதும் அடங்கியபாடில்லை. கருத்து ஒத்துப் போன கணவர் ஜோதிராவ் புலே ஆலோசனைப் படி பள்ளிக்கு செல்லும் போது பழைய புடவை உடுத்திச் செல்வார். சாணம் வீசுகிறவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்கள். சாவித்திரி பள்ளிக்கு சென்றதும் சேறான புடவையை மாற்றி புதிய புடவையை உடுத்திக் கொள்வார். எடுத்த பணியில் சோர்ந்து போனதாய்த் தெரியவில்லை.
பெண்களுக்கான பணி, கல்வி மட்டும் இல்லை என்றும் உணர்கிறார்கள் புலே தம்பதியினர்.
ஆண்களுக்கு என்றுமே பெண்கள் போகப் பொருட்கள்,
அவள் உடை, இடை,நடை என அனைத்தும் ஆண்களுக்காகவே படைக்கப் பட்டவை என்ற எண்ணம் இன்றும் மறையாத ஒன்று.
கணவன் இல்லா உலகம், பெண்ணுக்கு அவசியம் இல்லை என்று உறுதியாக நம்பிய காலம். உடன் கட்டையும், விதவையானால் முடி மழித்து மூலையில் இருத்தும் வழக்கத்தில் இருந்த காலம்.
ஏன் விதவைகள் மொட்டை அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள் புரட்சித் தம்பதியினர். முடிதிருத்தும் தொழிலாளர்களை ஒன்று திரட்டுகிறார்கள் . விதவைகள் தலையில் கை வைப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்கள் முடிதிருத்துவோர்.
இந்நேரத்திலே(1849-50) பெண்களுக்கான ஐந்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள்.
அடுத்த படியாக தாழ்த்தப்படோர்களுக்கான பெண்கள் பள்ளி(1852).
1870களில் , பஞ்சம் நிலவிய காலத்திலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஐம்பதிற்கும் மேல் நிறுவியிருந்தார்கள் புலே தம்பதியினர்.
சமூகத்துடன் இடைவிடா போராட்டத்துடன் நகர்ந்த நேரத்தில் ஜோதிராவ் பூலே , சாவித்திரியை தனியே போராடவிட்டு இறந்து போனார்(1890, நவம்பர் . 28). "வீதிவரை மனைவி" என்ற வெட்டிச் சொற்களை எல்லாம் சாவித்திரி புலே ஏற்க மறுத்து, தனக்கான உரிமை என ஜோதிராவ் புலேவின் சிதையை தீ மூட்டி அவரை வழி அனுப்பி வைத்தார். பெண் போகாத இடம் ஏது என்றார். ஜோதிராவ் என்னவோ மகிழ்வோடு தான் காற்றில் கரைந்திருப்பர் என நினைக்கிறேன்.
ஜோதிராவ் மறைந்த பின்னரும், எடுத்த பணி நோக்கியே நகர்ந்த சாவித்திரி ராவ் புலேவை (1897 மார்ச் 10) பிளேக் நோய் கொண்டு சென்றது.
இன்றைக்கு சில நூறு கிலோமீட்டர் தூரம் தாண்டிப் உயர்கல்வி பயிலும் மசூது பாய் மகள் ஆயிஷா, சாவித்திரி பாய் பூலேவை அறிந்திருப்பாளா ?! பாத்திமா ஷேக் யார் என்று கேட்டால் சொல்வாளா ?!
நாளை காந்திபுரம் நிறுத்தத்தில் இறங்கும் போது கேட்க வேண்டும். அவள் அறிந்திருப்பதன் சாத்தியம் குறைவு தான்.

இந்திய வரலாறல்ல ,உலக வரலாற்றிலே கூட பெண்களுக்கான பக்கங்கள் மிகச் சிறிய எழுத்துகளால் தானே எழுதப் படுகின்றன.
இன்னும் ஆயிஷாக்களை, மணிமேகலைகளை, மேரிகளை உயர்த்த நினைத்த படிக்கட்டுகளைக் குறித்து சொல்ல வேண்டும்.
படிகள் உயரும்

No comments: