கேள்வி: நான் கம்யூனிஸ்ட். எனக்கு திராவிட கட்சிகளை பிடிக்காது. என் நண்பன் தலித் அரசியல் பேசுவான். தலித்துகள் ஆண்டால்தான் தலித்களின் நிலை மாறும் என்பான். ஆனால் பினராயி விஜயனும் சரி, மாயாவதியும் சரி பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஒன்றும் புரியவில்லை.
பதில்: இந்த அதிர்ச்சி கூட உங்களுக்கு வந்ததற்கான காரணம் நீங்கள் தமிழர் என்பதால். அதாவது, திராவிட இயக்கம் கிளை பரப்பி அரசியல்மயப்படுத்திய தமிழ்நாட்டுத் திராவிடத் தமிழர் என்பதால். அதனால்தான் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி திட்டமே தவிர, வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்பது உங்களுக்கு புரிந்திருக்கிறது. உங்களைப் போலவே திராவிட இயக்கத்தின் வாக்கரசியல் தலைமையான முக.ஸ்டாலினுக்கும் இது தெரிந்திருக்கிறது. அதனால்தான் பினராய் போல அல்லாமல், மாயாவதியைப் போல அல்லாமல், பொருளாதார இட ஒதுக்கீடு என்கிற மோசடியை கடுமையாக எதிர்க்கிறார்.
திராவிடம் வெறும் அரசியல் கோட்பாடு அல்ல. அது இந்த மண்ணுக்காகவே, இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கக்காரர்களின் மூளையைப் படித்து, அவர்களின் எல்லா விதமான அயோக்கியத்தனங்களையும் உடனுக்குடன் கண்டறிந்து எதிர்க்கும் வண்ணம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட customized அரசியல்.
திராவிடம் என்கிற கறுப்பில் இந்த மண்ணுக்குத் தேவையான சிவப்பும், நீலமும் உள்ளடங்கியே இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், "தமிழ்நாட்டில் உங்களை வழிநடத்த பெரியார் இருக்கிறார்," என தைரியமாகச் சொன்னார்.
மேலும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களைவிட தமிழகத்தில் பொருளாதார சமன்பாடு மேம்பட்டிருக்கிறது. தலித் கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் கட்சிகள் ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தலித்களின் நிலை பன்மடங்கு மேம்பட்டுள்ளது. உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலருக்கும் மனம் இருக்காது என்றாலும், மறுத்துப் பேச இது கருத்து(opinion) அல்ல உண்மை(fact). எவ்வளவு கசந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். தமிழகம் டென்மார்க்கோ, சிங்கப்பூரோ இல்லைதான். ஆனால் நிச்சயம் உபியைவிட, மேற்குவங்கத்தை விட உயர்ந்தது.
எனவே தமிழகத்தில் இல்லாவிட்டால் நீங்கள் கம்யூனிஸ்டாக, தலித் அரசியல் மட்டுமே பேசுகின்றவராக இருப்பதில் தவறில்லை. ஏனெனில் பிற மாநிலங்களில் திராவிட சித்தாந்த அரசியல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும்பட்சத்தில் திராவிட மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டை மேற்கு வங்கமாக, உத்திர பிரதேசமாக, பீகாராக மாற்ற முயற்சிக்காமல், ஏனைய இந்தியாவையும், சிவப்பு+கருப்பு+நீலம் கலந்த திராவிட அரசியல் பேசும் நாடாக மாற்ற முயற்சியுங்கள்.
அதைச் செய்ய உங்களுக்கு திராவிடக் கட்சிகளை பிடித்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. விமர்சனங்களோடு அவர்களை அணுகுங்கள். இருப்பதில் சிறப்பானதை பெரியாரைப் போல விமர்சனங்களோடு ஆதரியுங்கள். கொள்கையில் தீவிரமாக இருங்கள். திராவிட இயக்கத்தவனாக இருங்கள். போதும்.
No comments:
Post a Comment