Saturday, May 12, 2018

போர்க்காலத்தில் மனிதநேயம் முற்றாக செத்துப்போய் இருந்தத்தும் வன்னி மக்கள் சந்தித்த பேரவலங்களுக்கு காரணமாக இருந்தது. இன்றுவரையிலும் நாம் போலியான அல்லது பக்க சார்பு மனிதாபிமானிகளாகவே இருக்கின்றோம்
20.04.2009 வவுனியா மெனிக்பாம் வலையம் 3 மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியதொடங்கியது. இறுதி போர்க்களத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தால் ஏற்பட்ட சன நெருக்கடி அது.. அம்பலவன்பொக்கணை பகுதியில் உள்ள புலிகளின் முன்னரங்க பகுதிகளை படையினர் கைப்பற்றியதன் மூலம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் மக்கள் மீதான புலிகளின் கட்டுப்பாட்டையும் முற்றாக உடைத்திருந்தனர். .இப்போது மக்களிடம் இரண்டு தெரிவுகள் எஞ்சியிருந்தன.
1.சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிடல்.
2.வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பின்வாங்கி சென்ற புலிகளுடன் செல்லுதல்.
( ஆனாலும் வலைஞர் மடத்தில் கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு த்ங்களை செல்லுமாறு புலிகள் அடித்து உதைத்ததாக அங்கிருந்த கிருஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் ஐ.நா வுக்கு கூறினார்கள் என்பது வேறு கதை)
அந்த பகுதியில் இருந்த வன்னி மக்களில் கிட்டதட்ட 104,868 பேர் மெனிக்பாம் வலையம் 3 அன்றய தினம் வந்து சேர்ந்திருந்தனர். ஒரே நாளில் மிக அதிகமானோர் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதலும் கடைசியுமாக இருந்தது. தமது மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் மீட்கப்பட்ட கடைசி தொகுதி மக்களாக இராணுவம் இவர்களை கருதி இருக்க வேண்டும்.
ஏனெனில் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருந்தது. அதுநாள் வரை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் தப்பி சென்றுவிடாமல் இரும்புகரம் கொண்டு அவர்களை கையாண்ட புலிகள் அதனை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் கைவிட்டு பின்வாங்கி முள்ளிவாக்கால் பகுதிக்கு சென்றிருந்தனர். அனேகமான கட்டாயமாக பிடித்து செல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள்கூட மக்களோடு மக்களாக தமது உறவினர்கள் துணையுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றனர். அதிகளவில் புலிகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் இச்சந்தர்ப்பத்தியேலே. புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் போன்ரவர்கள் கூட இந்த மக்களுடன் வெளியேறி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். கிட்டதட்ட 15 லெப்டினண்ட் கேணல் தரம் வழங்கப்பட்ட புலிகளின் இயக்க உறுப்பினர்கள்,04 வைத்தியர்கள், பத்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் உடைய புலிகள் உட்பட 700 மூத்த புலிகள் உறுப்பினர்கள், அரசு படைகளிடம் சரணடைந்தனர்.
சுமார் 22000-25000 பேர் மாத்திரமே முள்ளிவாய்க்கால் பகுதிக்கு புலிகளுடன் இணைந்து இடம்பெயர்ந்ததுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், பாதுகாப்பு படைகள், வவுனியா-முல்லைதீவு அரச செயலகம் போன்றவற்றினரால் கணிக்கப்பட்டது இவ்வாறு முள்ளி வாய்க்காலுக்கு சென்றவர்களுக்காகவே மெனிக்பாம் வலையம் 4 அமைக்கப்பட்டது..இவர்களில் சுமார் 18000 ( சரியான எண்ணிக்கையை படைதரப்பு கூறவில்லை) பேர் வரையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மெனிக்பாம் வலையம் 4க்கு இராணுவத்தினரால் கொண்டுவந்து விடப்பட்டனர். 14.05.2009 ல் சுமார் 3000 பேரும் 15.05.2009 அன்று சுமார் 15000 பேரும் இராணுவத்தினரால் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு மெனிக்பாம் வலையம் 4ல் தங்கவைக்கப்பட்டனர். கிட்டதட்ட 3000 பேர்வரையில் காயமடைந்த நிலையில் சிகிட்சைக்காக வவுனியா வைத்தியசாலை உட்பட வேறு சில இடங்களில் சேர்க்கப்பட்டிருந்தனர். மிகுதி பேர்களுக்கு என்ன நடந்து எனபது இதுவரை வெளிப்படையாக தெரியாத ஒன்றாக இருக்கின்றது. இவர்கள் ஒன்றில் போரில் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது காணாமல் போய் இருக்கலாம், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம். அல்லது வேறு எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். 15.05.2009க்கு பின்னரும் வெளியேறாமல் முள்ளிவய்க்காலில் இருந்தவர்களை புலிகளாகவே தாம் கருத வேண்டியுள்ளதாக அரசு படைகள் ஐ.நா மற்றும் இராஜதந்திர வட்டாரங்களுக்கு கூறினர்.
பெரும்பாலான மக்களுடன் இணைந்து 20.04.2009ல் போர்களத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பி செல்லாமல் மிக மோசமான கொலைக்களமாக மாறப்போகின்றது என்று தெரிந்தும் இவர்கள் ஏன் முள்ளிவாய்க்காலுக்கு சென்றனர்?
முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயந்து சென்றவர்களில் மூன்று வகையினர் அடங்கியிருந்ததாக கருதப்படுகின்றது.
1.புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் குடும்பத்தினர்-உறவினர்கள்.அவர்களுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள்.
2.இலங்கையின்ல் பல்வேறு குற்றசெயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது கைதாவதில் இருந்துது தப்பிப்பதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தஞ்சமடைந்தோர்.
3.புலிகளால் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டு இதுவரையிலும் தப்பித்து வராமல் இருக்கும் தங்கள் பிள்ளைகளை தேடி சென்றோர்.
இதனால்தான் அரசுபடைகளும் சர்வதேச சமூகமும் முள்ளிவாய்க்காலை கண்டுகொள்ளாமல் இருந்தனரா? இன்றுவரையும் இருக்கின்றனரா?
பதில் சம்மந்தப்பட்டவர்களுக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்.

படம் 1- 12.05.2009ல் வெளியேறியவர்கள்.

படம் 2- 14.052009 ல் வெளியேறியவர்கள்.

No comments: