Tuesday, May 08, 2018

காந்தியால் துயருறும் பெண்கள்- (Michael Connellan)

பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.

அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.

ஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி – சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) என்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.
காந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.
தென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.
கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.
தனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
பெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சிறுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.
இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.

No comments: