Friday, May 11, 2018

எடுத்ததற்கெல்லாம் தமிழ் ஈழத்தைப்பார்

எடுத்ததற்கெல்லாம் தமிழ் ஈழத்தைப்பார் என்று நித்திரையிலும் கொதிநிலையிலேயே தூங்கும் தமிழ்நாட்டு “தமிழ்த்தேசிய” போராளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ஜெயலலிதாவுக்குப்பிறகான அதிமுகவின் நிலைமையில் தான் பிரபாகரனுக்குப் பின்னான தமிழீழ அரசியல் இன்று இருக்கிறது. இதற்கு இந்திய அரசும் இலங்கை அரசும் அவரவர் தரப்பில் காரணங்கள் என்றாலும் அதைவிட அடிப்படையான காரணம் ஒன்றுண்டு. சர்வாதிகாரிகளின் ஆளுமையின் அடிப்படையே அடுத்த தலைமுறை ஆளுமைகளை தலையெடுக்கவிடாமல் அழித்துவிடுவது. அத்தகையை தலைமைகளை ஆதரித்து ஊக்குவித்து ஆராதித்த இரு சமூகங்களும் அதற்கான ஆனப்பெரிய விலைகளை இன்று ஏகத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் தம் தற்கால தாள முடியாத துன்ப துயரங்களின் ஆரம்பப்புள்ளி, நதிமூலம் தாம் விழுந்துவிழுந்து ஆதரித்த தம் ஆதர்ஷ ஆளுமைகளே என்பதை இரண்டு தரப்பும் உணர்ந்து தெளிந்ததாக எந்த சமிக்ஞையும் இல்லை. 🙁☹️😟
ப.தெய்வீகனின் பதிவு:
"இனப்படுகொலை புரிந்த சிங்களமே" - "இன்னமும் எங்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரினவாதமே" - என்று போர் முடிந்த நாள் முதல் குரல் நாண்கள் அறுந்து தொங்குமளவுக்கு குழறிய போராட்டங்கள் அனைத்தும் இன்று எங்கு வந்து நிற்கிறது என்று பார்த்தால் -
யாழ். ஊடக மையத்தில் ஒரு முன்னாள் போராளி - விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் - மாவீரரின் தந்தை என்ற சகல கௌரவங்களயும் கொண்ட முதியவர் "இந்த மண்ணுக்காக உயிர் நீத்த எமது மக்களை நினைத்து நிம்மதியாக அழ விடுங்கள்" - என்று தமிழர் தரப்பை பார்த்து கெஞ்சி கண்ணீர் விடுகின்ற புள்ளியில் வந்து நிற்கிறது.
இதைவிட எங்களது இனத்துக்கு இனி என்ன பெருமை வேண்டியிருக்கிறது?
யாழ். ஊடக மையத்தில் காக்கா அண்ணன் கண்ணீர் விட்ட அந்த காட்சியை விட தாயகத்தின் நிலமையை எந்தப்பெரிய வார்த்தைகளாலும் ஒருவரும் எழுதி கிழித்துவிடமுடியாது.
ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழர்களுக்கு இனிவரும் காலத்தில் எவ்வளவு காத்திரமான படிப்பினைகளை கொடுக்கப்போகிறதோ இல்லையோ சிங்கள தரப்புக்கு பெரிய பெரிய பாடங்களையெல்லாம் நிச்சயம் கற்றுக்கொடுத்திருக்கும்.
மகிந்த ராஜபக்ச குழுவினர் தற்போதையை வடக்கு நிலைவரங்களை பார்த்து வயிற்றிலும் தலையிலும் அடித்து அழுதிருப்பார்கள். தேவையில்லாமல், அன்று இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கெல்லாம் தடை விதித்தோமே? தேவையில்லாமல் இவ்வாறு அரசியல் பேசுபவர்களை தமிழர் தரப்பில் மிரட்டி வைத்திருந்தோமே! இவர்களையெல்லாம் அப்படியே விட்டிருந்தால் ஆயிரம் ஆயிரம் குழுக்களாக பிரிந்து நின்று எவ்வளவு அழகாக ஆளையாள் காலை வாரியிருப்பர் - அம்புலன்ஸ் செலவுகூட இல்லாமல் தங்களை தாங்களே முடித்திருப்பார் - என்று நிச்சயம் வருந்தியிருப்பர்.
வேண்டுமானால் பாருங்கள், மகிந்த தரப்பு மாத்திரம் அடுத்த தடவை ஆட்சிக்கு வருமானால், தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே "தமிழீழம்" தருவதாக எழுதிக்கொண்டுதான் யாழ்ப்பாணம் வருவார்கள்.
அவ்வளவு தூரம், அவர்களுக்கு இப்போது குளிர்விட்டுப்போயிருக்கும்.
அவர் ஏன் பயப்படவேண்டும்.
கிளியை கட்டி குரங்கிடம் கொடுத்ததுபோல தமிழர் தரப்புக்கு கொடுத்த எந்த விடயமாவது இதுவரையில் உருப்பட்டிருக்கிறதா? அதனை நிறைவேற்றுவதற்கு எங்கள் "வீரத்தமிழ் தலைமைகள்" அனுமதித்திருக்கிறார்களா?
பொருளாதார மத்திய நிலையம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரைக்கும் எல்லாவற்றுக்கும் பிச்சல் - புடுங்கல் - பீச்சல் என்று நாறிய பிழைப்புத்தானே?
இதில் சிங்கள தேசம் எதற்குத்தான் தமிழர்களை பார்த்து அச்சப்படவேண்டும்?
இந்த சீத்துவத்தில், ஆயிரக்கணக்கில் பலியான எங்களது மக்களின் அழிவுக்கு நீதி கேட்டுக்கொண்டுபோய் வெளிநாடுகளுடன் முண்டிக்கொண்டு நிற்பதுதான் கடுப்பை கிளப்பும் அடுத்த காமடி.
இருந்து பாருங்கள்!
அந்த விசாரணைகளும்கூட நடந்து முடிந்து தீர்ப்பொன்று வெளிவருகின்ற தினம் வருமானால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு எங்கள் வீர்த்தமிழ் முன்னணி ஒன்று நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு நிற்கும்.

ஒற்றுமையில்லை எனில் ஒன்றுமே நடக்காது என்றுதானே டெஸோவை ஆரம்பித்தார் கலைஞர் ..மகோரா (MGR) விடுதலைப் புலிகளை தனியே பிரித்து அதிமுக இலங்கை பிரிவாக நடத்த ஆரம்பித்தபோதே முடிந்துவிட்டது எல்லாம் அவலமாக .

No comments: