Friday, May 11, 2018

இலங்கையில் தமிழர்களுக்கிடையே சாதிப்பிரிவு

”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்ற பிரச்சாரம் இப்போது இலங்கை தமிழர்கள் மத்தியில் தொடங்கியிருக்கின்றதாம்.
இதன் பொருள் என்ன என்று ஜெர்மனியில் உள்ள என் இலங்கைத் தமிழ் நண்பர்களை விசாரித்தேன். நீண்ட கதையைச் சொன்னார்கள்.
’சிங்களவர்களுக்கு எதிராக இலங்கையைத் தமிழர்கள் தான் முதலில் ஆண்டார்கள். ஆக, நாம் மீண்டும் ஆள வேண்டும்’ என மேலெழுந்தவாரியாகச் சொல்லிச் செல்லும் இந்த வாசகத்தின் பின் இருப்பது... இலங்கைத் தமிழர்களைக் காலம் காலமாக ”கீழ்நிலைச் சாதி” என பிரித்து வைத்து ”உயர் சாதி” சைவர்கள் என தம்மைக் கூறிக் கொள்ளும் ‘வெள்ளாளர்” சமூகத்தின் ஒரு தந்திரம் இது எனக் கூறினர். சரி தமிழகத்தில் உள்ளது போலவா இலங்கையில் தமிழர்களுக்கிடையே சாதிப்பிரிவு..? என அறிந்து கொள்ள விசாரித்ததில், இலங்கையில் தமிழ்ச்சமூகத்தினிடையே உள்ள சாதி பற்றிய தகவல் கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை உயர்சாதி என்றால் அது வெள்ளாளர் சமூகத்தினர் தான். பிராமணர் அல்ல. பிராமணர் வெள்ளாளர் சமூகத்துக்குக் கோயில் தொடர்பான காரியங்களை மட்டும் செய்வதற்காகத் தனி அந்தஸ்துடன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகம். இவர்கள் வேறு யாருடனும் சேர்ந்து இருக்க மாட்டார்கள். தனியாகச் சமைத்து தனியாக உண்டு தனியாக வாழ்வார்கள். “உயர்சாதியான’ வெள்ளாளர்கள் வீட்டில் கூட கை நனைக்க மாட்டார்களாம் ஆச்சார பிராமணர்கள். ஆனாலும் கூடஅவர்கள் உயர் சாதியினர் இல்லை இலங்கையில்.
இது இப்படி இருக்க..
எந்தெந்த சாதிப் பிரிவுகள்.. இவை எப்படி உருவாகின எனக் கேட்டு வைத்தேன். ஒரு பட்டியல் கிடைத்தது யார் யாரெல்லாம் “கீழ் சாதியினர்” என்பதற்கு. (இது ஈழத்து நண்பர்கள் வழங்கிய பட்டியல்)
1. பறையர் - மலம் அள்ளுபவர் (முன்னர்); பறை இசை இசைப்பவர்; நெசவுத் தொழில் செய்பவர்; இறைச்சி விற்பவர்
2. நளவர் - பனைமரத்தில் ஏறி கள் இறக்குபவர்
3. பள்ளர் - விவசாயம் கூலி வேலை செய்பவர்
4. கோவியர் - பிணம் தூக்குபவர்
5. திமிலர் - மீன் பிடிப்பவர்கள்
6. கரையார் - மீன் பிடிப்பவர்கள்
7.முக்குவர் - மீன் பிடிப்பவர்கள்
8. அம்பட்டன் - முடிவெட்டுபவர்
9. வண்ணார் - துணி துவைப்பவர்; பெண்களுக்கு பேறு காலத்தில் உதவும் மருத்துவச்சி
10. கொல்லர் - மண்வெட்டி, சுத்தியல் போன்ற இரும்புப்பொருட்களை உருவாக்குபவர்
11.கட்டார் - பொற்கொல்லர்
12. தச்சர் - மரவேலை செய்பவர்
.... இன்னும் சில இருக்கலாம்.
ஆக மேலே நாம் பார்த்த 12 வகை தமிழ்ச்சமூகத்தினரும் “ கீழ் சாதி” என இலங்கைத் தமிழர்களுக்குள் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் சமூகமே. இன்றும் இலங்கையிலும் சரி, புலம்பெயர்ந்த அயல் நாடுகளிலும் சரி, இந்தச் சாதி வித்தியாசம் இறுக்கமாகப் பார்க்கப்படுகின்றது. பெண் எடுத்தல் பெண் கொடுத்தல் என்பது ”கீழ் சாதிக்கோ” , அல்லது “கீழ் சாதி” யில் உள்ள குழுவுக்கு குழுவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இன்றைய நிலையில் ஈழத்தில் அரசியல் தலைமையில் இருப்போர் “வேளாளர்” சமூகத்தவர்களே மிகப்பெரும்பாண்மை.
அப்படியென்றால்,
ஈழத் தமிழ்ச் சொந்தங்களைப் பாதுகாப்போம்..
ஆண்டபரம்பரை மீண்டும் ஆளட்டும்...
என்ற கோஷமெல்லாம் யாருக்குச் சாதகமானவை என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையில் இறைச்சி வெட்டுபவர், துணி துவைக்கும் வண்ணார், திமிலர்.. இப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தோரை வீட்டிற்கு, வீட்டு எல்லைக்கு, வீட்டின் பின்புறம் என.. இவர்கள்
எங்கு வரை வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது இன்னமும் வழக்கில் உள்ளதாம். ஆனால் ஜெர்மனியில் இறைச்சி வெட்டும் ஜெர்மானியரோடு சேர்ந்து தான் படிக்கின்றனர்; லாண்டரி கடை வைத்திருக்கும் இத்தாலியரோடு நெருக்கமாகப் புழங்குகின்றனர்... இது என்ன பாரபட்சம்..??
இன்றும் கூட வெள்ளாளர்கள் வாழும் குடியிறுப்புப் பகுதியில் வீட்டு வரிசையில் இந்த “தாழ்ந்த” வகுப்பில் இருந்து யாராவது வீடு வாங்கி விட்டால் அதனை பெரிய குறையாகப் பேசி புலம்பி வருந்துவது நடைமுறையில் இருக்கின்றதாம்... நான் சொல்வது போருக்குப் பிந்திய சூழலைத்தான்.
ஒரு தனி மனிதரின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தொழில்களையும் செய்யும் சமூகத்தினரை “தாழ்ந்த” நிலையில் வைத்து விட்டு ஓரிரு சாதிகள் மட்டும் தம்மை “உயர் சாதி” என சொல்லிக் கொள்வது என்ன நியாயம்?
இலங்கையில் நடந்து முடிந்த போருக்குப் பின்னராவது சாதியை முற்றிலும் ஒழித்து விட்டு தனி ஒரு இனமாக ஒற்றுமையுடன் ஈழத் தமிழர்கள் வாழ்வதில் என்ன பிரச்சனை? இந்தக் காலச் சூழலில் சாதிப் பிரிவினை அங்கும் சரி, புலம்பெயர்ந்த தேசத்திலும் சரி.. என்ன நன்மையைத் தரப்போகின்றது.? வெறும் வெற்றுப் பெருமைகளைக் கட்டிக் கொண்டு எத்தனை காலம் தான் இலங்கைத் தமி் மக்கள் தங்களுக்குள்ளேயே பிரிந்து வாழப்போகின்றார்கள்?
இன்று உலகத்தமிழர்கள் என்ற அடையாத்தை நோக்கி நாம் செல்ல வேண்டிய அத்தியாவசியம் வந்து விட்டது. ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் இதனை யோசிக்க வேண்டியதும் சாதி அமைப்பை ஒழிப்பதும் இன்றைய காலத்தின் அவசியம் அல்லவா?

No comments: