Friday, May 11, 2018

நாங்க ஐயர்ன்னு பேர் போட்டா

நாங்க ஐயர்ன்னு பேர் போட்டா
அவுங்கள பறையர், பள்ளர்ன்னு சாதிப்பேர பேரு பின்னாடி போட்டுக்க சொல்லுங்க.
நாங்க நாடார், தேவர்,முதலியார், நாயுடு,நாயக்கர்ன்னு பேரு போட்டா அவுங்கள அவுங்க சாதிப்பேர போட்டுக்கோங்க. ஏன் அவுங்க சாதி போட்டுக்கிறதுல இவ்வளவு தாழ்வு மனப்பான்மை. கம்பீரமா அதை போட்டுக்க வேண்டியதுதான.
இது மாதிரியான எண்ணங்களை என்னளவில் சாதி இந்துக்களை விட பிராமின்ஸ் பேசி கேட்டிருக்கிறேன்.
அடிப்படையாக பார்த்தால் சட்டென்று பார்த்தால் இதில் ஒரு லாஜிக் இருப்பதாக தெரியும்.
என் வீட்டில் என்னால் முடிந்த உணவை என் உணவு என்று உண்கிறேன். நீ உன் வீட்டு உணவை இதுதான் என் உணவு என்று உண்ண வேண்டியதுதானே.
ஏன் கூனி குறுகுகிறாய். இப்படி யோசிக்கும் போது மேலே சொன்ன அவரவர் சாதிப்பெயரை பின்னால் போட்டுக் கொள்வது சரியென்று தோன்றும்.
ஆனால் அப்படி இல்லை.
சாதரணமாக இப்படி ஒரு பிராமின் கல்லூரி மாணவருக்கு எழும் இந்த சந்தேகத்தை எப்படி தீர்ப்பது என்பதற்கு கிடைத்த வாய்ப்புதான் காந்தி மண்டபத்தில் இருக்கும் மதிப்பிற்குரிய இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை ஆராயும் வாய்ப்பு.
ஒரு எலுமிச்சை சர்பத் குடித்து விட்டு காந்தி மண்டபத்தில் இருக்கும் தியாகிகள் புகைப்படங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றேன்.
அங்கு மொத்தம் 1125 சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்படங்கள் இருக்கின்றன.
அதில் எத்தனை தியாகிகள் பெயர் பின்னால் சாதிப்பெயர் இருக்கிறது என்று கணக்கு எடுக்க ஆரம்பித்தேன்.
சற்றே சிரமம் ஆன வேலைதான்.
ஆனாலும் நின்று எடுத்து முடித்தேன்.
மேலும் எத்தனை தியாகிகள் சுபாஸ் சந்திர போஸின் INDIAN NATIONAL ARMY யில் இருந்தார்கள் என்பதையும் மிக தோராயமாக எடுத்தேன்.
கோயமுத்தூர் மாவட்டம்
122 தியாகிகள் புகைப்படத்தில் 41 தியாகிகள் புகைப்படங்கள் சாதி பெயரோடு இருக்கின்றன.
5 பேர் INA
தூத்துக்குடி மாவட்டம்
37 தியாகிகள்
17 சாதி அடையாளம்
1 INA
விழுப்புரம் மாவட்டம்
34 தியாகிகள்
17 சாதி அடையாளம்
0 INA
தஞ்சாவூர் மாவட்டம்
68 தியாகிகள்
26 சாதி அடையாளம்
7 INA
மதுரை மாவட்டம்
86 தியாகிகள்
24 சாதி அடையாளம்
36 INA
இப்படி 30 மாவட்டங்கள் தியாகிகள் புகைப்படங்களில் இருந்து கணக்கு எடுத்தேன்.
மொத்ததில்
1125 தியாகிகள்
370 சாதி அடையாளம்
135 INA
இதில் இந்த INA கொஞ்சம் தோராயமாகத்தான் இருக்கும். ஏனென்றால் பல புகைப்படங்களில் ராணுவ உடை உடுத்தி இருக்கும் தியாகிகள் பெயர் விபரத்தில் INA சேர்க்கப்படவில்லை.
ஆனால் சாதி அடையாள பெயர்கள் கணக்கில் 5 சதவிகிதம் முன்னே பின்னே மாறலாமே தவிர 95 சதவிகிதம் சரியான தகவல்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
மொத்தம் 1125 தியாகிகள் படத்தில் 370 தியாகிகள் பெயர் சாதி பெயரோடு இருந்தது என்று சொன்னேன் இல்லையா...
If there is Brahmin or Caste Hindu younsters reading this status pls loooook at this..
அந்த 370 சாதி அடையாள தியாகிகள் பெயரில் ஒரு தியாகி பெயர் கூட பட்டியல் இனத்தவர் (SC ST) அடையாளத்தோடு இல்லை.
ஒரு தியாகி பெயர் கூட இல்லை.
ஏன் இல்லை ?
எஸ்.சி எஸ்.டி பிரிவில் வரும் மக்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லையா?
அவர்கள் போராடவில்லையா என்ன?
போராடி இருப்பார்கள். அவர்கள் புகைப்படம் கூட காந்திமண்டபத்தில் இருக்கலாம். ஆனால் சாதி பெயர் போடாமல் இருக்கலாம்.
அதான் கேட்கிறேன் ஏன் போடவில்லை.
“ஏன்னா அந்த காலத்துல எஸ்.சி எஸ்.டி சாதியினர இழிவாக நடத்தினார்கள். அந்த சாதி பெயரை சொன்னாலே பிறர் இழிவாக பார்க்கும் படியான ஒரு சமூக சூழல் இருந்தது.. அதான் போடவில்லை”
“அந்த காலத்தில் இல்லை எந்த காலத்திலும் அச்சூழல்தான் இருக்கிறது. இப்போது இந்த நிமிடமும் அச்சூழல்தான் இருக்கிறது. ஒரு பொண்ணு பாருங்க பையனப் பாருங்க கல்யாணம் பண்ண எஸ்.சி மட்டும் வேணாம்” என்று சமூக பேசுகிறதா இல்லையா.
”பேசுகிறதுதான். ஆமா சாதி பெயர போடுறது. ஐயர், தேவர், முதலியார்ன்னு போடுறது தப்புதான்”
“தப்பு இல்ல ரொம்ப ரொம்ப தப்பு. அதுலையும் நீ டாக்டர், என்ஜினியர்ன்னு படிச்சிட்டு உன் பேருக்கு பின்னாடி சாதி பெயர் போட்டு ஃபேஸ்புக் அக்கவுண்ட் வெச்சிக்கிறது அநாகரிகமான நடவடிக்கை”
இப்படித்தான் சாதி பெயர் அடையாளத்தை புரிந்து கொள்ள வேண்டும் இளைஞர்களே...
இதில் இன்னொரு முக்கியமான பாயிண்டை கவனியுங்கள்.
INA என்னும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராடிய தியாகிகள் பெயரில் 90 சதவிகித பெயரில் சாதிப் பெயர் இல்லை. அவர்கள் சாதி அதிகம் புழங்கும் இடத்தில் இருந்து வந்தாலும் சாதிப்பெயரை அவர்கள் பெயரோடு சேர்க்கவில்லை.
ஆக குழுவாக இணைந்து தீவிர போராட்டம் செய்யும் போது உயிரை பணயம் வைத்து போராடும் போது மக்களுக்காக மிகத்தீவிரமாக போராடும் போது ஏற்படும் தோழமை உணர்வால் சாதி உணர்வு குறைகிறதா. குறைகிறதுதான்.
இந்த பாயிண்ட் கம்யூனிஸ்டுகள் பார்வையில் முக்கியமான பாயிண்டாகும்.
தீவிரமாக கம்யூனிஸ்டுகள் மக்கள் நலத்தை முன்னிட்டு மக்களை இளைஞர்களை போராட அழைக்கும் போது அவர்களுக்குள் சாதி உணர்வு குறைகிறதா. நிச்சயம் அவ்வுணர்வு குறைந்து அழிந்தே போகிறதுதான்.
இப்படி இதில் யோசிக்க நிறைய இருக்கிறது.
அதே சமயம் இப்படி எஸ்.சி எஸ்.டி பிரிவினரை இச்சமூகம் அனைத்து துறைகளிலும் மிக நேரடியாகவும் நாசுக்காகவும் ஒதுக்கி வைத்திருக்கும் போது அவர்கள் அந்த ஒடுக்கப்பட்ட சாதி என்ற தளத்தில் ஒன்று இணைவது மட்டும்தான் விடுதலைக்காக சம உரிமை பெறுவதற்கான ஒரே வழி.
ஆக அடக்குபவன் தன் வீண் பெருமை சாதி அடையாளத்தோடு ஒன்று சேர்வது சாதி வெறி.
அடக்கப்படுபவன் தன்னைப் போன்ற அடக்கப்படும் சாதிகளோடு சேர்ந்து தலித் அடையாளத்தோடு சாதி ஒழிக்க போராடுவது சாதி ஒழிப்பு.
இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொத்தாம் பொதுவாக சாதி பெயர் நீயும்தான் போட்டுக்கோயேன் நண்பா என்று சொல்லக் கூடாது.
அது மனித தன்மையற்ற, அநாகரிகமான செயலாகும்.
அடுத்த தலைமுறையினரான நீங்களும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போடுவதை தவிருங்கள்.
கொஞ்சம் யோசியுங்கள்...

No comments: