Friday, May 11, 2018

வணிகப்பெயரைத் தமிழில் மொழிபெயர்க்கலாமா

பேஸ்புக் என்ற வணிகப்பெயரைத் தமிழில் முகநூல் என்று மொழிபெயர்க்கலாமா என்று முழிபெயர்க்கும் அளவுக்குப் பட்டிமன்றங்களைப் பார்க்கிறேன்.
பாருங்கள், கணினிக்குள்ளும், திறன்பேசிக்குள்ளும் தமிழைக் கொண்டு வருவதற்குப் பலர் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது. தென்கிழக்காசியாவில் கணினி, திறன்பேசிகளில் தாய்மொழிதான் இயல்பு. சீனாவில் தேடுபொறி கூகுள் இல்லை, சீனர்களே சீன மொழியில் படைத்த பைடு. ருசியாவிலும், சீனாவிலும் சமூக ஊடகத் தொடர்புக்கு அவர்களே அவர்கள் மொழியில் எழுதிய மென்பொருள்களைத்தான் புழங்குகிறார்கள். தமிழ்நாட்டிலோ “தமிழில்” வரும் தொலைக்காட்சிகளில் கூட ஆங்கிலத்தில் பேசுவதுதான் உயர்வாகக் கருதப் படுகிறது. ஆங்கிலம் கலந்து பேசுபவர்கள்தாம் உயர்ந்தவர்கள் என்ற நிலை.
இதைப்பற்றி எல்லாம் வணிகப்பெயரைத் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்று எரிந்த கட்சி பேசுபவர்கள் அக்கறையோடு விவாதித்திருக்கிறீர்களா என்று தெரியாது. பொதுவாகத் தமிழ்வளர்ச்சியைப் பற்றியெல்லாம் பேசுபவர்களைத் தமிழ் வெறியர்கள் என்று ஓரம் கட்டும் போக்கு நிலவுகிறது.
மென்பொருள்களைத் தமிழில் புழங்கினால்தான் அவற்றைத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். இப்படி உயர்நுட்பக் கருவிகளில் தமிழ் புழங்கினால்தான் தமிழ் தொடர்ந்து வாழும். இல்லையேல் அது அடுக்களை மொழியாகச் சுருங்கி மறையலாம். முகநூலுக்கே முழுக்க முழுக்கத் தமிழ் இடைமுகம் இருக்கிறது. அதை எத்தனை தமிழர்கள் புழங்குகிறார்கள்? ஐபோனில் தமிழில் எழுதுவதை ஆப்பிள் நிறுவனம் அண்மையில் கூட்டியிருக்கிறது. ஆனாலும், தமிழர்கள் ரோமன் எழுத்தில் தமிழை எழுதுகிறார்கள். “என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்ற பாரதியின் புலம்பல் நினைவுக்கு வருகிறது.
இப்படிப்பட்ட செய்திகளைப் பற்றி ஆக்க முறையில் உரையாடலாம்.
முகநூலா பேஸ்புக்கா என்ற பட்டிமன்றம் தமிழர்களுக்கு வேண்டியதில்லை. தம் வணிகப்பெயர்கள், வணிகச்சின்னங்கள் பற்றி அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாமில்லை. நாம் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுமில்லை, பங்குதாரர்களுமில்லை. அல்லது அவர்களின் வழக்குரைஞர்களுமில்லை. அதனால் தமிழில் முகநூல் என்ற பெயரைப் பார்த்துக் கடுப்படைவதற்குப் பகராக, தமிழில் இருக்கும் மென்பொருள்களைப் புழங்கினால் வளர்முகமாக இருக்கும். ஏதோ, என்னுடைய தம்பிடித் துண்டு.

No comments: