Thursday, August 09, 2018

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?
இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் பல:
1.புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளனர். இந்த நேரத்தில் தமது இயக்க வரலாற்றில் என்றுமே தோல்வியினை காணாத அவர்களை விமர்சிப்பது தடக்கி விழுந்தவன் மேல் மாடேறி மிதிப்பது போன்றுள்ளது.
2.புலிகள் இயக்கத்தில் பலர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர் இவ்வாறிருக்கையில் எப்படி புலிகளை விமர்சிக்க முடியும்.
3.புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களையும் புலிகளை நேசித்தவர்களையும் வெல்ல வேண்டும். ஆகவே புலிகளின் தவறுகளை விமர்சிப்பது கைவிடப்படல் வேண்டும்.
4.சரி பிழைகளிற்கு அப்பால் புலிகள் விடுதலைக்காக செய்த உயிர்த் தியாகங்கள் அளப்பெரியவை. அவர்களினுடைய வேதனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
5.புலிகள் இறுதிவரை அரசுக்கு எதிராக யுத்தம் நடத்தியவர்கள், அவ்வாறிருக்க எப்படி நீங்கள் விமர்சிகக் முடியும்.
6.புலிகள் யுத்தம் செய்யும் போது நாட்டைவிட்டு ஓடிவிட்டு, அவர்கள் அழிந்த பின்னர் அவர்களை விமர்சிக்கின்றீர்கள் இதற்கு உங்களிற்கு என்ன தகுதியுண்டு?
7.புலிகள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியலில் (கூட்டணியின் அரசியலுக்கு ஆயுத வடிவம் கொடுத்தனர்) இருந்து தான் தமது அனைத்து செயற்பாடுகளையும் செய்தனர். அதனால் நாம் ஒட்டு மொத்த தவறுகளையும் அவர்களின் தலையில் போட்டுவிட முடியாது.
இவ்வாறு பல கோணங்களிலும் பலவடிவங்களிலும் புலிகளை விமர்சிப்பதை தவிர்ப்பது பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி தான் என்ன? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அதன் தோல்விக்கான காரணங்களை குறித்து மௌனம் சாதியுங்கள். புலிகளின் மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். மக்களிற்கு அரசியல் அறிவு ஊட்டாதீர்கள் என்பதுடன் புலிகளின் அரசியலின் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுவும் தான்.
புலிகளில் இருந்தோ அல்லது புலிகள் கொண்ட அரசியலில் இருந்தோ அடுத்த கட்ட நகர்வு என்பது மீண்டும் இன்னுமொரு முள்ளிவாய்காலையோ அல்லது களனி கங்கையையோ உருவாக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
புலிகள் கொண்டிருந்த அரசியல் மக்கள் நலனற்றது. சொந்த மக்களை ஆயுதங்கொண்டு அச்சுறுத்தி வைத்திருந்தது. அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியது. மக்களை நேசித்த தேசபக்தர்களை கொன்று போட்டது. இலங்கை அரசினால் ஒடுக்குமுறைகளிற்கு உள்ளான முஸ்லீம், சிங்கள மக்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் மீது வன்முறையினை ஏவி போராட்டத்தின் நேச சக்திகளை அந்நியப்படுத்தியது. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளான வல்லரசுகளை நம்பி அவர்களுடன் கூட்டு வைத்திருந்தது. மக்கள் சக்தியினை விட மேற்குலகின அதிநவீன ஆயுதங்களை நம்பி செயற்பட்டது. இவர்களின் அமைப்பின் வடிவம் இவர்களிற்குள்ளேயே மேற்குலகம், சிறீலங்கா, இந்தியா தமது கையாட்களை இலகுவாக உருவாக்க வழிகோலியது. இப்படி பல பல. இவைகள் தான் புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு காரணமாயின.
மாற்றுக் கருத்து அல்லது தமது இயக்கம் மீது விமர்சனம் செய்பவர்களை ஒரே வார்த்தையில் துரோகி என்று அழித்தொழித்தவர்கள் தான் புலிகள். சிறைப் பிடித்து வைத்திருந்த மாற்று இயக்கப் போராளிகளையும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பல உன்னதமான மனிதர்களையும் மனிதநேயமற்ற முறைகளில் சித்திரவதைகள் செய்து கொன்று புதைத்தனர். புலிகளின் முகாம்களிற்கு முன்னால் எமது தாய்மாரும், தந்தைமாரும், சகோதரிகளும் தமது தந்தையை, கணவனை, மகனை, மகளை விடுதலை செய்ய வேண்டி அழுது அலைந்த அவலங்களையும்; புலிகள் அவர்களை மனித நேயமற்ற முறையில் தகாத வார்த்தைகளை கூறி எட்டி உதைத்து அடக்குமுறையாளர்களை விடவும் மிகவும் கேவலமான முறையில் நடந்தனர். காலங்காலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை 72 மணி நேரத்தில் உடமைகள் அனைத்தினையும் பறித்தெடுத்து துரத்தி அடித்தனர். இது கிட்லர் யூத இன மக்களிற்கு செய்த கொடுமைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. இதனால் தான் புலிகளை பாசிச சக்தி என்று விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர். புலிகள் பாசிச சக்தி இல்லை என்றால் ஏன் மற்றுக்கருத்தாளர்களை சித்திவைதைகள் செய்து கொன்று குவித்தனர்? புலிகளின் பாசிச நடவடிக்கைளினால் துன்புற்ற பல ஆயிரக்கணக்கான எம்மக்களின் வேதனைகள் துன்பங்கள் உங்களிற்கு ஒரு பொருட்டே கிடையாதா? இவைகள் பற்றி என்றுமே வாய்திறக்காது இருந்துவிட்டு இன்று வந்து விட்டீர்கள், புலிகளின் தோல்விக்கு பின்னான வேதனைகளிற்கு மருந்து போட்டு அவர்களை மீண்டும் சிம்மாசனத்தில் ஏற்றி உங்கள் இருப்புக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு.
புலிகளின் இந்த பாசிசக் கூறு என்பது புலிகளின் அரசியலையே காட்டி நிற்கின்ற அதேவேளை, புலிகளின் தலைமையைத் தான் அது கூறியும் நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த வீரர்களிற்து பாசிசப் புலிகள் என்னும் பதம் பொருந்தாது. இவர்கள் தமிழ் மக்களின் விடுதலை புலிகளினால் வெற்றி கொள்ளப்படும் என திடமாக நம்பி, தமது விலைமதிப்பற்ற உயிரினை தியாகம் புரிந்த வள்ளல்கள். மாறாக மீண்டும் புலிகளைப் போன்று பாசிசக் கூற்றுடன் ஒரு அமைப்புத் தோன்றி மீண்டும் பல லட்சம் பேரையும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும் கொன்று குவிக்கும் அரசியலை உருவாகவிடாது தடுப்பதே அவசியமாகும்.
புலிகள் யுத்தத்தில் தோல்வியுற்ற நிலையில் அவர்களை விமர்சிப்பது விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்றது என்பது குறித்து:
புலிகள் உலக வல்லரசுகளால் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டிருந்தால் இந்த கூற்றை ஆதரிக்க முடியும். மாறாக புலிகள் மேற்கத்தேய நாடுகளை நம்பி தமிழ் மக்களை வைத்து பேரங்கள் நடத்தியதன் மூலமுமே தோற்கடிக்கப்பட்டார்கள்.
புலிகள் அமைப்பு ஏன் யுத்தத்தில் தோற்றது? புலிகள் மக்களுக்கான ஒரு அமைப்பாகவா இருந்து? இவர்கள் தமது தோல்விக்கான உள்நிலை கூறுகளை உருவாக்கியதால் தான் தோற்றனர். மக்களை நம்பாது அவர்களை வைத்து பேரம் பேசிய புலிகளின் தோல்வியை, தோல்வியாக ஏற்கமுடியாது. மாறாக இது அவர்களின் அழிவு நிலையாகவே காணப்பட வேண்டும். இந்த அழிவு நிலை ஏன் உருவான என்பதை விமர்சிக்காது அதனை பாதுகாத்தால், மீளவும் இதே அனுபவத்தை தான் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள நேரும்.
புலிகள் இயக்கதில் இருந்தவர்களையும், புலிகளை நேசித்தவர்களையும் விட்டு விட்டு புதிய போராட்டம் சாத்தியமற்றது. எனவே புலிகளின் கடந்த காலத்தினை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது போராட கூடிய சக்திகளை அந்நியப்பட்டு போகச் செய்கின்ற செயற்பாடுதான் இது. புலிகளின் மக்கள் விரோத அரசியலின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதனை கைவிடுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர் தம்மை முற்போக்கு சக்திகள் எனக் கூறுபவர்கள். இது தவறான பார்வையும் அதேவேளை மாற்றுக்கருத்தாடல்களுக்கான முரணான செயற்பாடும் சந்தர்ப்பவாதப் போக்குமாகும்.
புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் அல்லது புலி சார்பானவர்கள் மீளவும் போராட வேண்டுமானால் முதலில் அவர்கள் ஏன் புலி தோற்றது? என்ற கேள்விக்கான பதிலை தேட முற்படவேண்டும். அப்போது தான் அவர்களிடம் மக்கள் விடுதலைப் போராட்டம் பற்றிய பார்வை ஏற்படும். மேலும் புலிகளின் குணாம்சங்களில் ஒன்றான மற்றுக் கருத்தை எம்போதும் அரசின் கருத்தாக கொள்ளும் பார்வை அற்றுப் போகும் போதே இவர்கள் மீளவும் மக்களுக்கான உண்மையான விடுதலைக்கு போராட முற்படுவார்கள். இந்த மாற்றம் நிகழாதவிடத்து மீண்டும் புலிப்பாணியிலான போராட்டமே முன்தள்ளப்படும்.
ஒருசில முன்னாள் புலி உறுப்பினர்கள் கூறும் கூற்று தமது கண்முன்னே தனது சக போராளி இறந்தான், ஆனால் இவர்கள் சும்மா இருந்து கொண்டு விமர்சிக்கிறார்கள் என்பது முற்றிலும் அரசியல் புரிதலற்ற கூற்று.சரியான விடுதலைப் போராட்டத்தை நடத்தாத புலிகளில் அனாவசியமாக கொடுக்கப்பட்ட உயிர்களில் அக்கறை கொண்டவர்களே புலிகளை விமர்சித்தனர். மாற்று கருத்துக்களை செவிசாய்க்க மறுத்ததும் ,ஆயத்தம் மட்டும் இருந்தால் போராட்டம் வெற்றி பெறும் என்ற மூட நம்பிக்கையை புலி துறக்காததால் தான் இன்று அழிந்துள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை மையமாக வைத்துத்தான் புலிகள் தமது செயற்பாடுகளை செய்யபுறப்பட்டனர். அதில் ஒரு இயக்கம் தான் போராட வேண்டும், மற்றைய இயக்கங்கள் அழிக்கப்பட வேண்டும், பாராளுமன்றவாதிகள் கொல்லப்பட வேண்டும். ……. இவ்வாறு பல. இது முற்றிலும் தவறான கருத்தும் புரிதலுமே. அதாவது மக்களிடம் இருந்து ஒன்றையும் புலிகள் பெற்றிருக்கவில்லை மாறாக புலிகளிடம் உள்ள கூற்றை மக்களிடம் ஆயதத்தின் மூலம் திணித்தனர். அது பின்னர் ஒரு கூற்றாக மாறியது.
புலி என்றும் மக்களின் கருத்தை கேட்டதோ இன்றி புலி உறுப்பினர்களுடைய கருத்துக்களையோ கேட்டதோ கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றும் கூலிப்படையாகத் தான் சாதாரண புலி உறுப்பினர்கள் வைக்கப்பட்டிருந்தனர். ஜனநாயகத்தையும் புலிகளின் மக்கள் விரோதப் போக்கினையும் கேள்வி கேட்ட பல புலி உறுப்பினர்கள் போராட்ட களங்களில் பின்னால் இருந்து தலைமையின் உத்தரவுகளுக்கமைய சக பேராளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் புலிகளிடமிருந்து தப்பி ஓடினர்.
நாம் போராடி தமிழீழம் பெற்றுத் தருவோம் நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் போதும். அதுவும் வாய் திறக்காமல் இருந்தால் போதும் என்று கூறி செயற்பட்டவர்கள் தான் புலிகளின் தலைமை. இது தான் புலிகள் அழியும் வரை நடந்தது. ஏன் புலிகளில் இறந்தவர்களை நினைவு கூறும் “மாவீரர் தின” நிகழ்வுகள் உண்மையில் உணர்வு பூர்வமாகவா நடைபெறுகின்றது? இல்லை மாறாக ஆடம்பரமாகவும் ஒரு கொண்டாட்டமாகவுமே நடைபெறுகின்றது. இதை வைத்து பணத்தையும் சாம்பதிக்கின்றனர். இவ்வாறு தான் மக்களை பார்வையாளர்களாகவும் தம்மை கதாநாயகர்களாகவும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.
மக்களை நேசிப்பவர்களும் மக்களுக்காக போராடுபவர்களும் உண்மையை கூறுபவர்களும் எப்போதும் ஒரே நோர்கோட்டில் பயணிப்பர். மற்வர்கள் எல்லாம் தமது நலனுக்கு எற்ப தம்மை மாற்றிக் கொள்வார்கள் இது தான் உண்மை.
உண்மையான விடுதலைக்காய் போரட வேண்டின், விமர்சனங்கள் அற்ற போராட்டம் சாத்தியமற்றதே.

No comments: