Tuesday, February 05, 2019

Road to Nandikadal, Page 366

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன்.   தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும்  வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366)


No comments: