Tuesday, May 28, 2019

17-08-1932 பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டோனால்ட் வட்டமேசை மாநாட்டு கொள்கையை அறிவிக்கிறார்

1932 ஆகஸ்ட் மாதம் 17 ந்தேதி [17-08-1932] பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டோனால்ட் வட்டமேசை மாநாட்டு கொள்கையை அறிவிக்கிறார். இதன்படி “பொதுத்தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமையோடு தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி உரிமையையும் பெறுகின்றனர்” என்றார்
அதாவது பிளவுபடாத அன்றைய சென்னை மாகாணத்தில் சிலதொகுதிகளில் பொதுவாக்கெடுப்பில் தேர்தெடுக்கும் உறுப்பினர்களோடு,அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கான தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் சிறப்பு உரிமை ஆகும்.
கடுமையான போராட்டத்தின் விளைவாக அம்பேத்கர் ஆங்கில அரசிடமிருந்து பெற்று தந்த மிகமுக்கியமான நுட்பமான சிறப்பு உரிமை இது.இது குறித்து அம்பேத்கர் “இனப்பிரதிநிதித்துவத் தீர்வினால் கிடைத்த இரண்டாவது வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றதொரு சலுகை. இது ஒரு அரசியல் ஆயுதம்.இதன் மதிப்பு கணிப்பிற்கு அப்பாற்பட்டது” என்றார்
ஆனால், காந்தி இப்படி ஒரு தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்று ஏற்கனவே பிரிட்டன் பிரதமருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சிறையிலிருந்து 11-03-1932 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “ மேன்மை தாங்கிய மன்னருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்தொகுதி கொடுத்தால் நான் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவேண்டியதிருக்கும் என மரியாதையோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று
அதன்படி, தனித்தொகுதி அறிவிக்கப்பட்ட மறுநாள் 18-08-1932 காந்தி பிரிட்டன் பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார் “இத்தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலொழிய நான் உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் வருகிற செப்டம்பர் 20 ந்தேதி சாதாரண முறையில் நடைமுறைக்கு வரும்’ என்கிறார்
காந்தியின் கடிதத்திற்கு பிரிட்டன் பிரதமர் 08-09-1932 அன்று பதில் கடிதம் எழுதுகிறார்.
“தற்போது மிக மோசமாக துன்புற்றுக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வருங்காலத்தில் தங்களுக்கான நலனில் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தும் வாய்ப்பையும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதியை தேர்தெடுத்துக்கொள்ளும் உரிமையையும் தடுப்பதற்காகவே நீங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்”
நாடெங்கும் பெரும் பரபரப்பான சூழலில் காந்தி 20-09-1932 உண்ணாவிரதத்தை தொடங்கினார்.நாடு கொந்தளித்தது எல்லோருடைய கரங்களும் அம்பேத்கரை நோக்கி நீண்டது.காந்தி இருந்த எரவாட சிறைச்சாலை தினமும் பேச்சுவார்த்தை நடக்கும் இடமாக மாறியது.அவைகள் இருண்ட நாட்களாகவே அம்பேத்கருக்கு இருந்திருக்கவேண்டும்.
26-09-1932 அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ-இரண்டை வாக்கு உரிமையை எதிர்த்த காந்தியின் ஒப்பந்தத்தை ஏற்றுகொண்டதாக பிரிட்டன் அரசாங்கம் சிறைச்சாலையில் கர்னல் டயல் மூலமாக காந்தியிடம் தெரிவித்தது. மாலை காந்தியின் மனைவி பழச்சாறு கொடுக்க காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
சுற்றியிருந்த நண்பர்கள்,சாதகமான அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்ட தலைவர்களும் கூட அம்பேத்கரைவிட்டு காந்தியிடம் போய் சேர்ந்தது, அரும்பாடுபட்டு,உழைத்து,வாதிட்டு ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டோரின் மேன்மைக்காக வாங்கிய உரிமை கண்ணுக்கு முன்னால் களவு போனது!
டாக்டர் அம்பேத்கரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இதை படிக்கும்போதே நமக்கு மனம் பதைபதைகிறது.
“காந்தி ஏமாற்றி விடுவார், கவனமாக இருங்கள், காந்தி ஒரு உயிர்தான். ஆனால், நீங்கள் பாடுபட்டு வாங்கிய உரிமை லட்சம் உயிர்களுக்கு சமம்.நான் உங்களோடு இருக்கிறேன் கவலையை விடுங்கள்” என்று கடைசிவரை அம்பேத்காருக்கு தமிழகத்திலிருந்து ஒரு நட்பு கரம் நீண்டது. அது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கரமே!
இது புனா ஒப்பந்தத்தின் சோக வரலாறு.
இது குறித்து அம்பேத்கர் சில ஆண்டுகள் கழித்து இப்படி எழுதுகிறார்
”இயற்கையாக அந்த நேரத்தில் நாயகனாக [The man of the moment] அல்லது கதையின் வில்லனாகக் [ Villain of the piece ] கருதி அனைத்துக் கண்களும் என் பக்கம் திரும்பின
இரு மாறுபட்ட முடிவுகளிடையே ஒன்றினை நான் தேர்வு செய்யவேண்டியதிருந்தது.காந்தியை நிச்சயம் சாவிலிருந்து காப்பற்றுவதற்கு பொது மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இயங்கி வந்த அந்தக் கடமை என் முன்னாளிருந்தது....
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விலையாக கொடுத்து காந்தியின் உயிர் காப்பற்றப்பட்ட வரலாறுதான் புனா ஒப்பந்தத்தின் சோக வரலாறு!
டாக்டர் பாபா சாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக...
லெனாகுமார்

நன்றி; புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
- தொ பரமசிவன்

No comments: