Tuesday, May 28, 2019

1973 ஆம் ஆண்டு மறைந்த தந்தை பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி.பி.எம். ஆய்வு மாணவர்கள் சிலர் எதிர்ப்புக் காட்டினர்

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார்
மறைந்து விடுகிறார்.
சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம்
நடத்த முற்படுகிறோம்.
இந்து பத்திரிகையின் ராம் தான் அன்றைய எஸ்.எப்.அய்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் அறிவிக்கப்படாத வழிகாட்டி.
பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் அமைக்க சி.பி.எம். ஆய்வு மாணவர்கள்
சிலர் எதிர்ப்புக் காட்டினர்.
ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின்
செயலர் என்ற முறையில் இச்சங்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இளந்தமிழர் என்ற அமைப்பின் சார்பில் இக்கூட்டத்தை நடத்தினோம். பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில், மத்திய நூலக மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
அன்றைய கல்வி அமைச்சர் நாவலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு
மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
#நடிகவேள்_இவ்வாறு_பேசினார் ......
🔊🔊🔊
"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள்
என்று உரையைத் தொடங்கியவர் ,,,,,,
1920 களில் பெரியார் முதல் வலம்
வருகிறார்.
அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில்
நாடகக் குழுவினருக்கு காபி தேநீர்
வாங்கச் செல்வேன்.
அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன்.
"டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார்.
நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார்.
காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்"
என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.
1940களில் பெரியார் வலம் வருகிறார்.
உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு,
காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு
பேச முடிந்தது.
"இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது.
இதை யார் வாங்கித்தந்தது?
#அய்யா_சாமி : டேய் வரேன்டா ......
#சாமி : வரேன்டா .......
#அய்யரே : வாங்கிக்கப்பா .......
மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப்
பாருங்கள் ,,,,,,,
ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள்,
இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.
நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.
👊👊👊
நன்றி : பேராசிரியர் மு. நாகநாதன்.
நன்றி கார்த்திகைநிலவன்

No comments: