Saturday, June 01, 2019

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு

                                                          தந்தை பெரியார்

ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பை சைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள்.

 அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது.  அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள்.  அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள் பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டார்களாம்.

  இது மிகவும் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இதே ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் வர்ணாசிரமப் பார்ப்பனரோ அல்லது தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரோ அல்லது பார்ப்பனர் சொல்லுப்படி ஆடுகிற பார்ப்பனரல்லாதாரோ (நமது மந்திரிகளைப் போல்) ஜட்ஜிகளாய் இருந்திருந்தால் இந்த கேசின் முடிவு இப்படியிருக்குமென்று உறுதி கூற முடியுமா? ஜட்ஜிமெண்டு என்பது மிக பரிசுத்த ஜட்ஜிமெண்டு என்பதே அவரவர்கள் மனச்சாக்ஷியைப் பொறுத்ததாகத்தானே இருக்கும்.  மனச்சாக்ஷி என்பதே எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது.

 ஐரோப்பியருக்கு மாடு சாப்பிடுவது மனச்சாக்ஷிக்கு விரோதமாகாது.  பார்ப்பனரல்லாதாருக்கு ஆடு தின்பது மனச்சாட்சிக்கு விரோதமென்பதாகத் தோன்றாது.  பார்ப்பனருக்கு இவர்கள் சாப்பிடுவதை கண்ணில் கூட பார்க்கக்கூடாது என்பது மனச்சாக்ஷிக்கு விரோதமாகத் தோன்றாது.  ஆதலால் இதே ஐகோர்ட் ஜட்ஜி ஸ்தானத்தில் ஒரு வருணாசிரம பார்ப்பனர் இருந்தால் அவர் கண்டிப்பாய் இந்த ரோட்டில் நடந்தது தப்பு என்றும் போட்ட அபராதம் வாப்பீஸ் செய்து நடந்தவனை தண்டிக்க வேண்டும் என்று சொன்னால் தான் அவர் மனச் சாக்ஷிப்படி நடந்தவராவர்.

 அதனால்தான் நாமும் நமது சுயமதிப்பையும் மனச்சாக்ஷியையும் உத்தேசித்து ஐகோர்ட் ஜட்ஜ் முதல் எல்லா ஸ்தானங்க ளிலும் பார்ப்பனரல்லா தாரே இருக்கவேண்டுமென்று கோருகிறோமே  அல்லாமல் வேறில்லை.  இதுபோலவேதான் பார்ப்பனர்களுக்கு தங்களது ஆதிக்கத்தை உத்தேசித்து பார்ப்பன ஜட்ஜிகளே இருக்க வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்கள் கோருவதைப்பற்றி நாம் அவர்கள் பேரில் குற்றம் சொல்ல வரவில்லை.  ஆனால் அது நிறைவேறினால் நமது சமூகத்திற்கும் நமது சுயமரியாதைக்கும் ஆபத்து என்றுதான் சொல்வதோடு நம்மால் கூடுமானவரை தடுக்க வேண்டியதும் நம்முடைய கடன் என்கிறோம்.

 அவர்கள் 4000, 5000 சம்பளம் வாங்குவதாலும் அவர்கள் ஜாதி வக்கீல்களையே முன்னுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து அவர்களுக்கு அனுகூலம் செய்து நம்ம ஜாதி வக்கீல்களை சிறுமைப்படுத்தி  விரோதம் செய்வதினாலும் மற்றும் அவர்கள் ஜாதியாருக்கே முனிசீப்பு, சப் ஜட்ஜி, ஜட்ஜி முதலிய உத்தியோகங்கள் கொடுத்து நம்முடைய ஜாதியாரின் உரிமையை ஒழிப்பதினாலும் நமக்கு அவ்வளவு ஆபத்திருப்பதாய் நாம் நினைப்பதில்லை. 

ஆனால் கல்பாத்தி பொது ரோட்டு வழிநடை உரிமை போன்ற விஷயங்களில் பார்ப்பன ஜட்ஜிகளிடம் இருந்தும் பார்ப்பன சட்டமெம்பர்களிடமிருந்தும் நமது சுயமரியாதைக்கும் அனுகூலமான தீர்ப்பு பெற முடியுமா என்கிற விஷயத்தில்தான் பயமாயிருக்கிறது. 

உதாரணமாக கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்கலாம் என்று சட்டசபையில் தீர்மானம் ஏற்பட்டும் சட்டமெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. பார்ப்பனர் வேலையிருந்தால்தான் போகலாம் என்று சொல்லி வியாக்கி யானம் செய்யவில்லையா?  அதுபோலவே இந்த வழக்கும் பார்ப்பன ஜட்ஜாயிருந்தால் ஈழவர் அந்த ரோட்டில் நடந்தது குற்றமானாலும்  நடக்க உரிமையில்லை. ஆனாலும், அதற்கு வேறு மார்க்கம் செய்து நடக்கவிடாமல் செய்துவிட வேண்டுமே அல்லாமல் தடுத்தது குற்றம் என்றாவது சொல்லி அபராதத்தைக் காயம் செய்ய அவரது மனச்சாக்ஷி சொல்லுமே அல்லாமல் பார்ப்பனரல்லாத ஜட்ஜியைப் போல் சர்க்கார் பொது ரோட்டில் யாரும் தாராள மாய் போகலாம் என்று துணிந்து இயற்கை தர்மத்தை சொல்லியிருப்பார் என்று எண்ண நமக்கு தைரியமில்லை.

 இது எப்படியோ இருக்கட்டும். இனியாவது பாலக்காட்டு பார்ப்பனர்கள் கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்க சுதந்திரம் கொடுப்பார்களா?  அல்லது அந்த தீர்ப்பை வாங்கி பாலக்காட்டு முனிசீப்பு கோர்ட்டில் நிறைவேற்றி சர்க்கார் பந்தோபஸ்துடன் போய்க் கொண்டு இருக்க வேண்டுமா என்று தான் கேட்கிறோம். அது போலவே, திருநெல்வேலி சந்நியாசி அக்கிரஹாரப் பார்ப்பனர்களுக்கும் கும்பகோணம் அய்யங்கார் தெரு, வியாசராய மடத்தெரு, பட்டாச்சாரி தெரு பார்ப்பனர்களுக்கும் இந்த தீர்ப்பே போதுமா அல்லது அங்கும் பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போய் ஐகோர்ட்டுக்குப் போய் நீதி பெற வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.

  அல்லது மகாத்மா இந்த ஊர்களுக்கு வந்த சமயம் பார்த்து இந்த தெருவுகளில் நுழைந்து இந்த பார்ப்பனர்களின் நிலைமையை அவர் அறியச் செய்ய வேண்டுமா என்றுதான்  கேட்கிறோம்.  ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள்.  ஏனெனில் ஐகோர்ட், கவர்ன்மெண்டு, சட்ட மெம்பர், சட்டசபை மற்றும் அதிகாரம் செல்வாக்கு முதலியவைகளில் அவர்கள் இருப்பதால் இதையெல்லாம் கால் தூசிக்கு சமானமாய்தான் நினைப்பார்கள்.

 ஆனாலும், பாமர மக்கள் இவ்வாங்கில அரசாட்சியிலேயே தெருவில் நடக்க தெருவைத் தொடாமல் பைசைக்கிளின் மேல் போக உரிமை கொடுக்க மறுக்கும் இக்  கல்நெஞ்சக் கூட்டங்கள் தங்களுக்கு சுய ஆட்சி வந்தால் எப்படி நடப்பார்கள்? நம்மை எவ்வித கொடுமை செய்வார்கள்?  நம்மை மனு தர்ம சாஸ்திரமோ  பராசரஸ்மிருதியோ அல்லது  இதில் பட்ட ஆச்சாரிய சுவாமிகளோதான் ஆளுவார்கள்.  ஆனாலும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்துவிட்டால் பிறகு என்ன ஆகும் என்பதுதான் நமது கவலை.

       குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927
#பெரியார்காலவரிசைப்பதிவுதீண்டாமை.

No comments: