Tuesday, May 28, 2019

திராவிடம் ஏன்?

திராவிடம் ஏன்?
வீட்டுக்கு வந்திருந்த நண்பரொருவர் எனது புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு எவ்வளவு தமிழ் இலக்கிய புத்தகங்கள் படிக்கிறாய் பின்பு எப்படி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை ஆதரிக்கிறாய்? இயக்கத்தின் பெயரில் கூட தமிழை முன்னிறுத்தாது திராவிடத்தை அடையாளமாக்கிக் கொள்ளும் அரசியலை ஆதரிக்கிறாய்? சமீபகாலமாக அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்று எனக்கு தெரியும் என்பதால் சற்று விளக்கமாக பதில் சொல்ல விரும்பினேன்.
இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வழங்கியதும், இருமொழிக் கொள்கை கொண்டு வந்து தமிழை இந்த மாநிலத்தில் அதிகாரத்தின் மொழியாக்கியது திராவிட இயக்கம்தான். மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என்று முஷ்டியை உயர்த்தி கூவும் பிழைப்புவாதிகளால் நல்லாட்சி என கொண்டாடப்படும் காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான் இவர்களால் வந்தேறி என அழைக்கப்படும் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இந்த உண்மையை மட்டும் அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை இப்படி திட்டமிட்டு மறைப்பதில் இருந்து அவர்களது அரசியல் யோக்கிதை தெரிந்துவிடும். இங்கு மீண்டும் மீண்டும் நடப்பது என்ன வென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் உணர்வுபூர்வமாக கொப்பளித்து பொதுபுத்தியில் திணிப்பது.
கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்று கொண்டாடுவது எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் காமராஜர் என்னும் ஒற்றை பிம்பத்துக்கு பின்பு தமிழக கல்விச் சாதனைகள் அனைத்தையும் அடைப்பது அதன் மூலம் திராவிட இயக்கத்தின் அளப்பரிய பங்களிப்பை குழி தோண்டி புதைக்க நினைப்பதும், காமராஜரை திராவிட இயக்கத்திற்கு எதிரான பிம்பமாக கட்டமைப்பதும் அருவருப்பான அரசியல் நிலைப்பாடு.
அப்படி என்ன திராவிட இயக்கம் கல்விக்கு பங்களித்தது என்று கேட்போருக்கு சொல்கிறேன் முதல் முதலில் சென்னை மாகாணத்தில்
கட்டாயக் கல்வி திட்டத்தையும் ,
மத்திய உணவுத் திட்டத்தையும் ,
அறிமுகப்படுத்தியதே திராவிட இயக்கத்தின் மூதாதையான நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான். அதேபோல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இலவசக் கல்வித் திட்டத்தையும், மத்திய உணவுத் திட்டத்தையும் முன் மொழிந்தவரும், அதனை செயல்படுத்த அரும்பாடு பட்டவருமான நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு பெரியார் தொண்டர் சாகும்வரை சுயமரியாதைக்காரர் ஆகவே வாழ்ந்தவர்.
பெருந்தலைவர் காமராஜரும் "பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதை நான் பெருமையாக கொள்கிறேன்" என்று பொதுவெளியில் கூறியவர். காமராஜர் பள்ளிக் கல்வியை பரவலாக்கியதை தொடர்ந்து உயர்கல்வியை பரவலாக்கி, கல்லூரிகளை உருவாக்கி, இட ஒதிக்கீட்டை மேலும் விரிவுபடுத்தி நம்மை பட்டதாரிகளாக உருவாக்கியது அதற்குப் பின் வந்த திராவிட ஆட்சியின் சாதனைகள் தான்.
இப்பொழுது நாம் திருப்பிக் கேட்போம் தமிழக கல்வி வரலாற்றில் தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பு என்ன??
இந்திய தேசியம் பேசிய காமராஜருக்கும் தமிழ் தேசியம் பேசும் இவர்களுக்கும் என்ன தொடர்பு??
இக்கேள்விகளில் சற்றே ஊன்றி சிந்தித்துப் பார்த்தால் அதன் காரணிகள் தெளிவாக புரியவரும். இவர்களுக்கு ஜனநாயகம் சார்ந்த சித்தாந்த வறட்சி காரணமாக காமராஜர் போன்ற மக்கள் நாயக பிம்பத்தை சுவீகரிக்க முயல்வது, அதே போல அவரது ஜாதி பின்புலத்தை பயன்படுத்திக்கொள்ள நினைப்பது. இதை நீங்கள் அப்படியே ஆர்எஸ்எஸ் எப்படி அம்பேத்கரை தமதாக்கிக் கொள்ள முயல்கிறது என்பதுடன் ஒப்பிடலாம். அரசியல் அற்பத்தனத்தில் உச்சம் இது.
சரி திராவிடம் என்னும் சொல் ஏன் முன்னிலைப் படுத்தப் படுகிறது என்பதற்கு வருவோம். வரலாற்று ரீதியாக திராவிடம் என்னும் சொல் விந்திய மலைக்கு தெற்கே வசிக்கும் மக்கள் இனத்தை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது(The Hathigumpha inscription of the Kalingaruler Kharavela refers to a T(ra)mira samghata(Confederacy of Tamil rulers) dated to 150 BCE.) ,
அதன்பின் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வகுக்கும்போது திராவிடம் என்னும் சொல்லை சமஸ்கிருதத்தை வேறாக கொள்ளாத மொழிக் குடும்பத்தை குறிப்பிட பயன்படுத்துகிறார்.
திராவிட இயக்கக் காலத்தில் பெரியார் திராவிடம் என்னும் சொல்லை ஆரியம் என்னும் பண்பாட்டால் ஒடுக்கப்படும் பண்பாட்டை குறிக்கும் சொல்லாக வரையறுக்கிறார்(அன்றைய மதராஸ் மாகாணத்தில் கன்னடதெலுங்கு மற்றும் மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கியது என்பதை நினைவில் கொள்வோம்), அதாவது ஆரியம் என்பது ஆதிக்க மனோபாவத்தை குறிக்கும் சொல் என்றால் திராவிடம் என்பது ஆதிக்கத்தை எதிர்க்கும் சமத்துவத்தை முன்மொழியும் புரட்சி குறியீடு.
அண்ணா இதை மேலும் தெளிவாக விளக்குகிறார்
"ஆரியம் பிறப்பில்லை கருத்தில் இருக்கிறது, சாதியை நெஞ்சில் சுமக்கும் எவரும் ஆரியரே" .
இதன்படி தமிழர் தமிழர் என வாய்கிழிய கூறினாலும் சாதியை மனதில் சுமந்து உங்கள் சாதி தலைவருக்கு ஜே போடுவீர்கள் என்றால், சாதி வெறியர்களை ஓட்டுப் பொறுக்குவதற்காக தமிழன் எனும் தலைவன் எனவும் கொண்டாடுவீர்கள் என்றால், நீங்கள் ஆரியர்களே.
ஆக திராவிடம் என்னும் தத்துவம் ஒரு இன ரீதியான ,மொழி ரீதியான அடையாளத்தையோ மட்டும் முன்னிலைப் படுத்துவது என சுருங்கிவிடாமல் சமத்துவம் என்னும் தத்துவத்தின் குறியீடாக தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டது. சுருங்கச் சொல்வதென்றால் திராவிடம் என்றால் "சமூக நீதி".
திராவிடம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் வந்தேறிகள் என உலறுபவர்களுக்கு ஒரு சேதி சொல்கிறேன் தமிழ்நாட்டில் திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் அயோத்திதாச பண்டிதர். இவரையும் நீங்கள் வந்தேறி என்றுதான் சொல்வீர்களா?
தமிழ் என்னும் சொல்லின் திரிபு தான் திராவிடம் ( Thamizhar was likely derived from the name of the ancient people Tamilar > Tamila > Damila > Dramila > Dravida.[30]) ஆனால் இன்றைய சூழலில் தமிழ் என்னும் அடையாளத்தை முன்னிறுத்தி கையில் அத்துடன் தமிழ் சமயம் , தமிழ் கடவுள் ,தமிழ் வழிபாட்டு முறை என திராவிட இயக்கம் எதிர்த்த அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கு தமிழ் சாயம் பூசி மீண்டும் நம்முள்ளே திணிப்பதற்கான வாயிலை அது ஏற்படுத்துகின்றது. இன்று தமிழ் தேசியர்கள் செய்வதை உற்று நோக்கினால் புரியும் முதலில் தமிழ் கடவுள் என முப்பாட்டன் முருகன் என கூறினார்கள் , பின்பு சிவனை முப்பாட்டன் என்றனர், இன்று மாயோன் எங்கள் முப்பாட்டன் என்கின்றனர் அத்துடன் ஐந்திணை கடவுள் அனைத்தும் எங்கள் கடவுள் தான் என்கின்றனர். ஐந்திணை கடவுள்களில் இந்திரனும் அடக்கம் இந்திரனுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் சாயம் பூசுவதனால் மட்டும் காட்டுமிராண்டித்தனம் காட்டுமிராண்டித்தனமாகதா என்ன?
தமிழகம் பார்ப்பனிய தாக்கத்திற்கு உள்ளான பின்பு உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐந்திணை தெய்வ வழிபாட்டு முறை , தமிழன் என்னும் அடையாளத்தை முன்னிறுத்தி இந்திரன் என்னும் ஆரிய கடவுளை தெய்வமாக்கி கொண்டாட தயாராகுவது தமிழர்களுக்கு இவர்கள் இழைக்கும் துரோகம் ஆகாதா?
அதேபோல இவர்களையும் இயக்கத்தை நம்பி தமிழர் என்று இணைந்த கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இது பச்சை துரோகம் ஆகாதா?
இன்று அர்ஜுன் சம்பத் தமிழகம் நாயன்மார்களின் பூமி ஆழ்வார்களின் பூமி என்பதற்கும் இந்த தமிழ் தேசியவாதிகள் ஐந்திணை தெய்வ வழிபாடு என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளது. இவர்கள் தமிழர்களை கண்டறிய வைக்கும் இனத் தூய்மைவாதம் dna test முறை ஏன் தமிழக பார்ப்பனர்களுக்கு செல்லுபடியாவல்லை அவர்களை தமிழர்கள் என்று எந்த அடிப்படையில் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்?

கரிய நிறத்தில் சிக்ஸ்பேக்குடன் காட்சியளிக்கும் இவர்களின் முருகனுக்கு பின்னால் அவர் பயணிக்க வாகனமாக மயிலை நிறுத்தும் லாஜிக்கே இல்லாத காட்டுமிராண்டித்தனத்தை மீண்டும் இங்கு நிறுவுவதுதான் தமிழர்களை முன்னேற்றுவதா. புலிகேசி படத்தில் வடிவேலு சொல்வார் உள்ளே உங்கள் ஆங்கில பூர்வீகமே இருக்கலாம் ஆனால் பெயர்கள் தமிழில்தான் வைப்போம் என்பது போல , உள்ளே உங்கள் சமஸ்கிரித வர்ணாஸ்ரம பூர்வீகமே இருந்தாலும் தமிழில் சொன்னால் ஏற்றுக் கொள்வோம் என்பது தான் இவர்களது லாஜிக்.
ஆனால் மேடைகளில் தமிழ் தமிழ் என உருகிய திராவிடர் அண்ணா கம்பராமாயணத்தையும் ,பெரியபுராணத்தையும் பெரியார் எரிக்க வேண்டும் என்று சொன்னவுடன் தலைமேல் வைத்து அதை ஏற்றுக்கொண்டார் காரணம் தமிழ் என்ற மொழியின் மூலமாக பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயத்தை எங்கள் தலையில் திணித்து உங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அது நடவாது , எங்களுக்கு தமிழ் எந்த அளவு முக்கியமோ அதே அளவு தான் ஆதிக்க எதிர்ப்பு முக்கியம். இதுதான் தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்திற்குமான வேறுபாடு.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னது மொழியில் இடைப்பட்ட காலத்தில் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனங்களை, ஆரிய மாயையை விலக்கி விஞ்ஞான மொழியாக்க வேண்டும் என்பதற்குத்தான். அதே பெரியார்தான் திருக்குறளை நமக்கான நூல் என அறிவித்தார் அதிலும் அவரது விமர்சனம் இருக்கவே செய்தது. பெரியார் தமிழர்களை கண்டித்தது மொழி மீது உள்ள பாசத்தால் பிற்போக்குத்தனத்தில் நாங்கள் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதற்கு அண்ணா கொடுத்த விளக்கம் என்றும் பொருந்தக்கூடியது அவர் சொன்னார்
" புலி தன் இரையைக் கவ்வுவதற்கும் தன் குட்டியை கவ்வுவதற்கும் வித்தியாசம் உண்டு" அதைத் தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.
ஆதிக்கம் என்றுமே மக்களின் உணர்வுடன் தொடர்புடைய விஷயத்தை மிகைப்படுத்தி அதன் மீது கேள்வி கேட்க முடியாத நம்பிக்கையை வைக்கச் சொல்லி பகுத்தறிவை மழுங்கடித்து அடிமைப்படுத்தும். வடக்கில் மதத்தின் மூலமாக வெற்றி பெற்ற ஆதிக்க வர்க்கம் இங்கு திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் அதனை செய்ய முடியவில்லை . எனவே இவ்வியக்கத்தின் வீரியத்தை பிளவின் மூலம் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் சனாதனத்தின் மாற்று உருவே அன்றி வேறில்லை. என்ன அவர்களை எதிர்த்தால் anti-indian என்பார்கள், இவர்களை எதிர்த்தால் வந்தேறி என்பார்கள். அவர்கள் ராமனையும் கிருஷ்ணனையும் வரலாறாக்க முயல்கிறார்கள், இவர்கள் மாயோனை அப்படி வரலாறாக்க முயல்கிறார்கள் அவ்வளவுதான்.
ஆனால் ,
திராவிடம் எனும் தத்துவம் மத, சமய, ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் குறியீடாகும், விடுதலைக்கான போர் கருவியாகும். பழம் பெருமைகளை பேசுவதற்கானதள்ள திராவிடம் சமூக நகர்வை, மேம்பாட்டை உறுதி செய்வது. சமூக படிநிலைகளை தகர்த்து சமத்துவத்திற்கு வழிவகுப்பது. திராவிடம் என்றால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம்.
எனவே திராவிடம்
வெல்லும்,
வென்றாக வேண்டும்,
வென்றே தீரவேண்டும்.
என்று சொல்லி முடித்தேன் நண்பர் அவரது கவனத்தை கலைப்பதாக தெரியவில்லை. ஐயா ஒரு டீ குடிப்போம் என்று வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன்.

No comments: