Friday, April 20, 2018

50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும்

50 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் கரண்ட் கிடையாது. டவுனுக்குப் போனால்தான் பல்பையே பார்க்க முடியும். இப்போது ஒவ்வொரு கிராமத்து வீட்டிலும் கேபிள் இணைப்புடன் நைட்டு 11 மணி வரை சீரியல் பார்க்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் இருட்டில் பாம்பு கடித்தால் கை வைத்தியமும் வேப்பிலை மந்திரமும்தான். விதி இருந்தால்தான் பிழைக்க முடியும். இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தக் கொடூர விஷக்கடிக்கும் மருந்து உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து வீடு தேடி வரும் லெட்டரைப் படித்துக் காட்டுவதும் போஸ்ட்மேனுக்கான வேலையாக இருந்தது.. பண்ணையார்கள் பலரே கைநாட்டுதான். இப்போது அவரவரும் வாட்சாப்பில் மெசேஜ் பார்த்து உலக செய்திகளை அலசுகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து தொழிலாளர்களை பண்ணை வீடுகளில் கட்டி வைத்து உதைப்பது எழுதப்படாத சட்டம். பெண்கள் மீதான பெரிய மனிதர்களின் ஆதிக்கம் சர்வசாதாரணம். இப்போது பண்ணை அடிமை முறை ஒழிந்து, கிராமத்து ஆணும் பெண்ணும் படித்து அவரவர் விரும்புகிற வேலைக்குச் செல்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன் நகரத்து வீடுகளிலேயே சைக்கிள்தான் பிரதான வாகனம். இப்போது கார்கூட சர்வசாதாரணம்.
50 ஆண்டுகளுக்கு முன் கோவிலில் தமிழ்ப்பண்டிதர்கள் கதாகலாட்சேபம் செய்தால் புளியோதரையும் தேங்காய் மூடியும்தான் மிஞ்சும். இப்போது டி.வி. பட்டிமன்றங்களில் தமிழ்ப் பேசத் தெரிந்தவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் காலரா போன்ற நோய்கள் வந்தால் ஊரே காலி. இப்போது எய்ட்ஸ்-கேன்சர் எது வந்தாலும் இயற்கை மற்றும் விஞ்ஞான மருத்துவம் சவால் விடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் அடுப்பங்கரையை சாணி போட்டுமெழுகி, ஈரவிறகில் நெருப்பு பற்ற வைத்து, ஊதாங்குழலால் ஊதி ஊதி பெண்கள் சமைத்து முடிக்க அரை நாளாகும். இப்போது அரைமணியில் அடுப்படி வேலையை முடித்துவிட்டு அவர்கள் விரும்பும் வேலையை செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் மோசடி சாமியார்கள் கமுக்கமாக காமலீலை செய்தார்கள். இப்போது வீடியோவில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ரயிலை வேடிக்கை பார்ப்பதும்-வழி தெரியாதது போல வந்து செல்லும் பஸ்ஸில் ஏறுவதுமே பெரும்பயணம்.. இப்போது ஃப்ளைட்டில் பறப்பதும் எளிதாகிவிட்டது.
50 ஆண்டுகளுக்கு முன் பல வீடுகளில் காலை டிபன் கிடையாது. ஹோட்டலில் இட்லி, தோசை, பூரி என்பது காஸ்ட்லி அயிட்டம். இப்போது இயற்கை உணவோ, பாஸ்ட் ஃபுட்டோ வீட்டிலும் தயாராகிறது. ஹோட்டலிலும் கிடைக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணை சீரழித்தவனைக் காட்டிக் கொடுக்கப் பயந்து அவனுக்கே இரண்டாம்தாரம்-மூன்றாம் தாரமாக கட்டி வைத்த கொடுமைகள் நடந்தன. இப்போது அப்படிப்பட்டவனை டி.வி. கேமராக்கள் முன் கட்டி வைத்து உதைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
50 ஆண்டுகளுக்கு முன் தெருவில் விற்றுவந்த நாலணா காய்கறியை பத்து பைசாவுக்கு பேரம் பேசும் பொருளாதார நிலை இருந்தது. இப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒட்டப்பட்டுள்ள விலைக்கு பொருளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை மலடி என்று ஊர் தூற்றியது. இப்போது நாலு தலைமுறை சித்த வைத்தியம் முதல் நவீன மருத்துவம் வரை பிள்ளைப் பேறுக்கு உத்தரவாதம் தருகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் நொண்டி-முடம்-குருடு என்று இழிவுபடுத்தப்பட்டவர்களை இப்போது மாற்றுத்திறனாளிகள் என்று மரியாதை கொடுக்கிறோம்.
50 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்கள் இப்போது நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் புயல்-வெள்ளம் என்றால் பேப்பரில் மட்டுமே படித்த வெளியூர் மக்கள் இப்போது நேரில் வந்து நிவாரண உதவி செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்தலில் ஓட்டுக்கு 10 ரூபாய் வாங்கி சத்தியம் செய்து கொடுத்த மக்கள், இப்போது இடைத்தேர்தலுக்கே 6000 ரூபாய் வாங்கியபிறகும் யாருக்கு வேண்டுனாலும் வாக்களிக்கும் தெளிவு பெற்றிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்றிருந்த சமுதாயம் இப்போது ஜல்லிக்கட்டு, காவிரி, நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எந்தப் பிரச்சினை என்றாலும் ஒன்றுதிரண்டு வீதிக்கு வந்து போராடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் மட்டுமே டெலிபோனை பார்த்தவர்கள் இப்போது ஆளுக்கு ஒரு செல்போனில், ’அந்தக் காலம் போல வருமா’ என்று மெசேஜ் அனுப்புகிறார்கள்.
காலத்திற்கேற்ற வசதிகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் இழந்துவிட்டதுபோல பேசுவது மட்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும் மாறவேயில்லை.
திருவள்ளுவர் ஆண்டு 2049 சித்திரை 6

No comments: