Friday, April 20, 2018

கச்சத்தீவு கதையறிவோம்.

கச்சத்தீவு கதையறிவோம்.
யார் என்னனென்ன செய்தார்கள்?
கட்சியை உடைத்துக் கொண்டு தனியே கட்சி நடத்திக் கொண்டிருந்த
புரட்சி தலைவர் எம்ஜிஆர், "பாடும் போது நான் தென்றல் காற்று" என்று மஞ்சுளாவோடும் லதாவோடும் டூயட் பாடிக்கொண்டிருந்தார் என்பதை நம்
முதல்வர் அறிந்திருக்கவில்லை போலும்.
1974ல் பிரதமர் இந்திராகாந்தி முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் குறிப்பிட்டது யாதெனில், 'இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவுசெய்துவிட்டோம். உங்களுக்குக் கருத்து ஏதும் இருக்கிறதா?'
என்பதே கடிதத்தின் பொருள்.
வாயே திறவாதிருந்தனர் முன்னாள் முதல்வர்கள் காமராஜரும், பக்தவச்சலமும். இத்தனைக்கும் அன்று எதிர் கட்சி ஸ்தாபன காங்கிரஸ்.
அனைவருக்கும் தெரியும் அது இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் தளம். இந்த செய்தி அறியாதவரா பிரதமர்?
சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தனது நிலையை எடுத்து வைத்தார் முதல்வர்.
இருந்தும் பிரதமர் இந்திரா காந்திக்கு முறைப்படி கடிதம் எழுதினார் முதல்வர்.
உடனடியாக முதல்வர், அமைச்சர் செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்டார். கைவசம் பல கோப்புகளை எடுத்துச்சென்றார். அத்தனையும் ஆதாரங்கள். கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். இந்தியாவின் நிலப்பகுதி என்பதற்கான ஆதாரங்கள். முக்கியமாக, இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி.
ராமநாதபுர அரசர் அவருக்கு சொந்தமான தீவை குத்தகைக்கு விட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார். அனைத்து ஆதாரங்களையும் விளக்கினார், மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றி பேசினார். கச்சத்தீவு தாரை வார்க்கப்படக்கூடாது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது என கேட்டுக் கொண்டார் முதல்வர் கலைஞர்.
சந்திப்பு மட்டுமே பலன் தராது என்று நினைத்தார் கலைஞர். தமிழகம் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழக அரசின் கருத்தை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தார் கலைஞர்.
முதல் அம்சம், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.
இரண்டாவது அம்சம், கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியதுகூட இல்லை.
ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல‘ என்று நிரூபிக்க முடியும் என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதி முன்வைத்த வாதம்.
முதல்வர் கருணாநிதியிடமிருந்து வந்த கடிதத்தை சடங்குக்கு வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்கத்துவங்கினார் பிரதமர்.
26 ஜூன் 1974 அன்று இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் இந்திராவும், இலங்கை சார்பில் சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்து போட்டனர்.
ஆம். கச்சத்தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதையும் இதில் மாநில முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை, கருத்து சொல்வதைத் தவிர என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி.
பின்னர் மாவீரர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் இந்திய வரைபடத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இந்த செய்தி, நிகழ்வுகள் எதுவுமே தெரியாமல் கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டார் என்று புரளி பேசும் அனைவரும் அறிந்திடவே இப் பதிவு.
கலைஞர் எதிர்ப்பு நண்பர்களுக்கும் இந்த பதிவு ஒரு தெளிவுரையை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

No comments: