Wednesday, September 04, 2019

அதனால்தான் அவர் "தந்தை" பெரியார்! ❤

கேள்வி: "பெரியாரை ஏன் 'தந்தை' என்கிறோம்?"

பதில்:

எத்தனையோ காரணங்கள் உண்டு. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லி விளக்க முயலுகிறேன்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலத் தொடரில் ஒரு கறுப்பினத் தந்தை தனது மகளிடம், "You have to be twice as good as them, to get half of what they have" என்பார்.

'அவர்கள் பெறும் வெற்றியில் பாதியைப் பெறுவதற்கே, நீ அவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் உழைத்தாகவேண்டும்' என்பதுதான் அதன் பொருள்.

நம் சமூகத்தில் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகளுக்கு தலைமுறை தலைமுறையாகக் கிடைத்துவரும் கல்வி, வசதி வாய்ப்புகள், சிபாரிசுகள் ஆகியவற்றைக் கடந்துதான் நம் வீட்டுப் பிள்ளைகள் முன்னேறியாகவேண்டும் என்கிற நிலைதானே இன்னும் நீடிக்கிறது?

திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும் 'பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வி' என்பதைப் பொருத்தவரை எவ்வித சமரசமுமின்றி இவ்வளவு தீவிரமாக இயங்குவதற்குக் காரணம் அதுதான்!

இந்நிலையில் 1953ஆம் ஆண்டு 'புதியக் கல்வி திட்டம்' என்றப் போர்வையில் 'மாணவர்கள் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வந்து படித்தால் போதும், மீதியுள்ள அரைநாளில் அவரவர் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம்' என்று முதல்வர் ராஜாஜி தேன் தடவிய வார்த்தைகளில் நமக்கு நஞ்சைக் கொடுத்தப்போது, அதை 'குலக்கல்வித் திட்டம்' என்று அடையாளங்கண்டுக் கடுமையாக எதிர்த்தது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்தான் என்பது நாம் அறிந்த செய்தி.

'குலக்கல்வி திட்டம்' என்பது பார்ப்பனர்களின் வர்ணாசிரம சூழ்ச்சி என்பதற்காக மட்டும் அதை எதிர்த்திருந்தால் அவர் வெறும் 'தலைவர்' பெரியாராக மட்டும் இருந்திருப்பார்.  ஆனால் அவரிடம் இன்னொருக் காரணமும் இருந்தது.

"உங்கள் வீட்டுப் பார்ப்பன பிள்ளைகளுக்கு அரைநாள் விடுப்பு என்பது ஒரு பெரிய விசயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு அப்படியல்ல. அவர்கள் 2000ஆண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமையே மறுக்கப்பட்டவர்கள். அதை ஓரளவேனும் ஈடுசெய்யவேண்டுமானால் அவர்கள் நாள்தோறும் அல்லும் பகலும் சிரமப்பட்டுப் படித்தால்தான் முடியும்" என்று கர்ஜித்தவர் பெரியார்.

இப்போது அந்தக் கறுப்பினத் தந்தை தன் மகளுக்கு சொன்ன அறிவுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். அதே அறிவுரையைத்தான் பெரியார் நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் சொன்னார். அந்தப் பேரன்பும், அக்கறையும், 'நாம் இழந்தவை அனைத்தும் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடவேண்டும்' என்கிற பறிதவிப்பும் ஒரு தந்தைக்கே உரிய குணாதிசயங்கள்.

அதனால்தான் அவர் "தந்தை" பெரியார்! ❤

No comments: