Wednesday, September 04, 2019

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சாமிகளின் பிறப்பும் இறப்பும்
–ச.தமிழ்ச்செல்வன்

2011இல் வெளிவந்த குழந்தைகளுக்காக  எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.ஆனால் பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.பல ஊர்களில் பல அறிஞர்களுடன் கலந்துரையாடி அந்த ஊர்களிலுள்ள சாமிகள் வந்த கதையை எளிமையாக விவரிக்கிறார்.சாமிகளில் ஏழைச்சாமி பணக்காரச்சாமி,கீழ்சாதி சாமி,மேல் சாதி சாமி என்று இருப்பதை எளிமையாக விளக்குகிறார். ஏழைச் சாமிக்கு வெறும் மண்ணால் ஆன பீடம் மட்டுமே உண்டு. பணக்கார சாமிக்கு கோபுரங்கள் உண்டு. ஏழைச்சாமிக்கு என்று எந்த வேதப் புத்தகமும் கிடையாது. பணக்கார சாமிகளுக்கு பைபிள்,பகவத் கீதை,குரான் என பல மறை நூல்கள் உண்டு. இரண்டிற்கு படைக்கப்படும் உணவுகள் வேறு வேறு. ஏழைச்சாமியை வழிபட தனியான பூசாரி கிடையாது. அவர் வேறு தொழில் செய்துகொண்டிருப்பார்.பொங்கல் அன்று மட்டும்தான் பூசாரி வேலையை செய்வார்.பணக்கார சாமியை வழிபட ஒரு புரோகிதர்,பாதிரியார் அல்லது முல்லா இருப்பார்.இதைப்போல ஏழு வேறுபாடுகளை சுட்டிக் காட்டுகிறார்.

கடவுள் வழிபாடு தோன்றிய விதத்தை இப்படி விளக்குகிறார்.

மேலிருந்து வந்த மின்னலினால் காடு தீப்பற்றி எரிந்தது.மேலிருந்து வந்த மழையினால் அது அணைந்தது.சூரியனும் நிலவும் மேலேதான் இருக்கிறது. ஆகவே நல்லதும் கெட்டதும் எல்லாமே மேலே இருந்துதான் வருகிறது என்று அன்றைய மனிதன் நினைத்தான்.
தங்களிடமிருந்த ஆடு மாடுகளை தூக்கிப் போட்டு மிருகங்களை சமாதானப்படுத்தியதுபோல் மேலிருந்த அந்த சக்தியை சமாதானப்படுத்த ஆடு மாடுகளை நெருப்பில் போட்டு எரித்தார்கள். அந்தப் புகை மேலே போவதால் மேலே உள்ள சக்தி சமாதானமாகி நல்லது செய்யும் என்று நினைத்தார்கள்.

காலப்போக்கில் கோபுர சாமிகளை பெருந்தெய்வங்கள் என்றும் மக்கள் உண்டாக்கின சாமிகளை சிறு தெய்வங்கள் என்றும் சொல்லி சிறுமைப் படுத்தினார்கள்.உண்மையில் மக்கள் உண்டாகிய சாமிகள் சிறு தெய்வங்களா?இல்லை.அவைதான் முதலில் உண்டான சாமிகள்.நம் ஊர்களுக்கு முதலில் வந்த சாமிகள்.சீனியர் சாமிகள்.இந்த சிவபெருமான்,கிருஷ்ணர்,புத்தர்,மகாவீரர் எல்லோரும் ஜூனியர் சாமிகள்.பின்னால் வெளியிலிருந்து நம்ம ஊருக்குள் மன்னர்கள் உதவியோடு வந்து சேர்ந்தவர்கள்தான்.

இந்தப் பகுதிகள் எல்லாம் புத்தகத்தின் இறுதியில் வருகின்றன. அதுதான் சிறப்பு.அதாவது குறிப்பான விசயங்களை சொல்லிப் பின் அதிலிருந்து பொதுவான முடிவுகளுக்கு வருகிறார்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

மூதேவி என்று ஒரு பெண்சாமி உண்டு.திருப்பரங்குன்றத்திலும் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்கிற ஊரிலும் அந்த சாமிக்கு கோவில் உண்டு.வண்ணார் சமூகம் தவிர வேறு யாரும் அதை வணங்குவது இல்லை.

தமிழ்நாட்டில் முன்னர் ‘கொற்றவை’என்றொரு பெண் தெய்வம் இருந்தது.
ஊரெல்லாம் அதற்காகக் கோவில்கள் இருந்தன. ...இப்போது கொற்றவையை யாரும் கும்பிடுவதில்லை....சாமிகள் இருக்கும் இடம் ரெண்டுதானே.ஒன்று கோவில்.இன்னொன்று மனித மனம்.இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் போன சாமிகளைத்தான் நாம் ‘செத்துப்போன சாமி’கள் என்கிறோம்.

சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் உண்மையிலேயே பெரிய வீரன்.கள்ளர்களை அடக்கினான்.....அவன் மீது மதுரை மன்னரின் மகள் பொம்மி காதல் கொண்டாள்.....ஐ லவ் யூ சொன்னாள்......இரண்டுபேரும் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஒரு கீழ்சாதிக்காரன் போம்மியைக்கல்யானம செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்கு கோபம்.அவனைப் பிடித்துக் கொலை செய்துவிட்டார்கள்.மக்களால் மன்னனை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை.மதுரைவீரனை சாமியாக்கி கும்பிடத் தொடங்கினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முத்தாலம்மன்.ஐப்பசி மாதம்  முதல் நாள் போய் சிலை செய்து எடுத்து வரவேண்டும்.ஒரு நாள் பகல் முழுவதும் கோவிலில் வைத்து அவளைக் கும்பிடலாம்.அன்று இரவே அச்சிலையை எடுத்து வந்து குளத்தங்கரையில் வைத்து கட்டையால் அடித்து நொறுக்கிவிட வேண்டும்.

மாலையம்மன் என்கிற சாமி கொசப்பட்டியில் இருக்கிறது.அந்தப் பெண்ணின் கணவர் இறந்தபோது நெருப்பு கொடுக்காததால் அந்த ஊர் அழிந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.உண்மையில் மன்பானையைப் பயன்படுத்தும் பழக்கம் நாட்டில் குறைந்துவிட்டதால் மண்பானை செய்யும் தொழிலும் அழிந்துவிட்டது.அந்த ஊரை விட்டு மக்கள் வேறு தொழில் தேடி வேறு வேறு ஊர்களுக்கு போய்விட்டார்கள்.ஊர் அப்படியே சிதைந்து போயிருக்கும்.என்றாலும் மக்கள் மாலையம்மன் கதையோடு ஊர் அழிவை பின்னால் சேர்த்துவிட்டார்கள்.

மலட்டம்மா கோவில் விருதுநகர் மாவட்டம் கொம்புச் சித்தம்பட்டிக்கு வடக்கே பொம்மைக் கோட்டைக்கு தெற்கே அமைந்துள்ளது. குழந்தை இல்லாத ஒரு பெண் தன கணவர் இறந்ததற்கு கொள்ளிவைக்க தீ கேட்கிறாள்.அதை அந்த ஊர் மக்கள் தர மறுக்கிறார்கள்.வேறு ஊரில் போய் தீ வாங்கி கணவனுக்கு தீ மூட்டிவிட்டு தானும் இறந்து போகிறாள்.செய்த குற்றத்தின் சுமை மனதை அழுத்துகிறது.பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத ஏழை மக்கள் சாமியாக்கி கும்பிட்டு பாவத்தைக் கழுவிக்கொள்ள நினைக்கிறார்கள். அவள் பெயர் தெரியாததால் மலத்டம்மா என்று அழைத்து கும்பிடுகிறார்கள்.

...... கும்பிடாத சாமி என்றும் ஒருவகை உண்டு.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இப்படிச் சாமிகள் உண்டு.அது என்னவெனில் காட்டுக்குப் போகும்போது இடி விழுந்து(அதாவது மின்னல் வெட்டி)செத்தவர்களுக்கு அவர் செத்த இடத்திலேயே கல்நாட்டு ‘சாமி’ என்று வைத்து விடுவது.ஆனால் அதை யாரும் கும்பிடுவது கிடையாது.கேட்டால் அது ‘கும்பிடாத சாமி’ அல்லவா என்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் கிறித்துவ மதத்தில் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிள்ளைமார்களுக்கு தனித்தனி வாசல் கொண்ட சர்ச் தோற்றத்தில் டவுசர் போல் இருந்ததால்  ‘டவுசர் சர்ச்’ என்று அழைக்கப்பட்டதாம்.பின்னாளில் வந்த பாதிரியார் ஒருவர் எச்சாதியில் பிறந்தாலும் எல்லோரும் ஏசுவின் பிள்ளைகள்தான் .ஏசுவுக்கு சாதி கிடையாது என்று வாதிட்டுப் பார்த்தார். மூன்று வழிகள் உள்ள அந்த சர்ச்சை இடித்து கட்ட வேண்டும் என்றார்.எங்க ஊரில் சாதி உண்டப்பா என்று மேல்சாதியினர் அடம்பிடித்தனர். கோவிலை இடிக்கக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு போட்டனர்.அருட் தந்தை கவுசானல் வாதாடி வாதாடி சர்ச்சை இடிக்கவைத்து எல்லோருக்கும் பொதுவான சர்ச் கட்டப்பட்டது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது தாதக்கிணறு.அங்கு ஐஸ் காளியம்மன் கோவில் இருக்கிறது.(சுவாரசியமான கதை.புத்தகத்தில் படித்துப் பாருங்கள்.)

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் கதையின் முடிவில் இவ்வாறு சொல்கிறார்.
‘இந்துவானாலும் முஸ்லிம் ஆனாலும் உயிர்கள் மனித உயிர்கள் அல்லவா?மதம் ஒரு சட்டை போலத்தானே?’

இறுதிப் பகுதியில் பெரியாரையும் மார்க்சையும் மேற்கோள் காட்டி இவ்வாறு முடிக்கிறார்.

இந்த உலகம் ,நம் நாடு,நம் அரசு, நம் சக மனிதர்கள் இரக்கமுள்ளவர்களாக மாறிவிட்டால் கடவுளை மக்கள் தேட மாட்டார்கள்.நம்மிடமே கருணை பெருகிவிட்டால் கருணையின் வடிவத்தை சிலை வடிவில் ஏன் தேடப் போகிறோம்?ஏக்கப் பெருமூச்சு விடும்படியாக இருக்கும் இன்றைய ஏழைகளுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் ஒரு சமூகம் அமைந்துவிட்டால் கடவுள் தேவைப்பட மாட்டார்.

No comments: