Wednesday, September 04, 2019

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும் மதத்தையும் தொடர்ந்து  விமர்சிக்க வேண்டும் அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ?

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் சிலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பக்தியை லாபமாக, வாக்காக, அதிகாரமாக  மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கடவுளை பக்தியை வழிபாடுகளை,
உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ, உங்களை சங்கடபடுத்தி அதன்வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ இல்லை. பகுத்தறிவின் அடிப்படையே மானுட நலனும் சமத்துவமும்தான்.

உங்கள் பக்தி எல்லோருக்குமானதாகவும்  அன்பை, சமத்துவத்தை பரப்புவதாகவும் இருக்குமானால் அது குறித்து கவலையில்லை. ஆனால் மதங்கள் அப்படித்தான் இருக்கின்றனவா?

* பெரும்பாலான ஆண்களும், ஒட்டுமொத்த பெண்களும் கடவுள் இருக்கும் கருவறைக்கு போக தகுதியில்லாததாக உங்களை ஒரு மதம் சொல்லுமானால், அதை ஏனென்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* உலகின் சரிபாதி இருக்கும் பெண்களை ஆலய குருக்களாகவோ, ஒரு பெண்ணை போப்பாண்டவராகவோ தேர்ந்தெடுக்க பெண்களுக்கு தகுதியில்லை என்று ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏனென்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* ஒற்றை வார்த்தையில் திருமணத்தை முறிக்க கூடிய அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கும் பாகுபாடு, பெண்களை தங்களின் விருப்ப வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை தராத ஒரு கட்டமைப்பு, கடவுளை தொழும் மசூதிகள், தர்காக்களில் எல்லாம் பெண்களை அனுமதிக்க முடியாது, நீங்கள் தனியே தொழுது கொள்ளுங்கள என்றெல்லாம் ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏன் என்று கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

அன்பையும்  சமத்துவத்தையும்தான் மதங்கள் போதிக்கிறதென்றால், வரலாற்றின் சிலுவைப்போர்கள் தொடங்கி, இஸ்லாமிய அடிப்படைவாத தற்போதைய வன்முறைகள், இந்தியாவில் நடைபெற்று வரும்
இந்து – இஸ்லாம், இந்து - கிறிஸ்தவ வன்முறைகள் வரை தொடர்வதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா காரணம்?

மூடநம்பிக்கைகளில் சிக்க வைத்து மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும் கருவி - மதம் தவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?

மதம், பக்தி, நம்பிக்கை இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்குமானால், அது நான்கு சுவர்களுக்குள் இருக்குமானால் அதில் தலையிட நிச்சயம் யாருக்கும் உரிமையில்லை.ஆனால் பிரம்மாண்ட மேடைகள் போட்டு  முடமான கால்களை கடவுள் நடக்க வைக்கிறார் என பிரசங்கம் என்றபெயரில் மூளைச் சலவை  செய்வதும், கடவுளின் சிலைகளை ஊர் முழுக்க சுற்றிசுற்றி வலம் வருவதன் வாயிலாக பெருமைப்படுவதும், மார்க்க விளக்க கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்துவதும்,
பள்ளி, கல்லூரி ஒன்று விடாமல் எல்லா கடவுளர்களுக்கும் வாழ்த்து பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும்,

அடிப்படைவசதிகளான கழிப்பிடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள்  எல்லாவற்றையும் விட வழிபாட்டுதலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்குமானால் அது தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. ஏனெனில் இதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் இல்லை; நாம் வாழும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

"இல்லை இல்லை இவையெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் பின்பற்றியே தீருவோம் என்று சொன்னால், தவறுகளை உங்கள் நலனுக்காக சுட்டிக் காட்டுவதும் உரிமையென்றே சொல்ல வேண்டி வரும்”

"இல்லை இல்லை மதம் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்கள் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வீர்களானால்,
வன்முறைகளில் ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்திய -ஏந்தும் மதவாதிகளுக்கு, கருத்து சொன்னதற்காக உயிர் பறிக்கும் அடிப்படைவாதிகளுக்கு முதலில் ஒழுங்காக மதத்தைப் பற்றி  புரியவையுங்கள். அதற்குப் பிறகு கடவுள் மறுப்பாளர்கள் பற்றி கேள்வி எழுப்பலாம்.

ஒரே ஒரு கேள்வி மீதமிருக்கிறது.

சகமனிதனைக் கொன்று தீர்ப்பதன் மூலமும் அவனுடைய அன்றாட வாழ்வை சிதைப்பதன் மூலமும்தான் உங்கள் கடவுள்களை மகிழ்விக்க முடியும் என்றால் அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா ?