Thursday, January 11, 2018

வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்

‘தீரர்’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேட நினைக்கும் வைரமுத்துகளுக்கு ஹெச்.ராஜா சர்மாக்களிடமிருந்து வசவுகள்தான் மிஞ்சும். என்னதான் வெள்ளை வெளேரென ‘ஆம்பளை’ சுடிதாரும், பக்தி இலக்கிய ஃபேர் அண்ட் லவ்லியும் போட்டு மேடையேறினாலும், பிறப்பிலேயே அமைந்த இயல்பான கறுப்பு நிறம்தான் அவாள்களின் கண்களுக்குத் தெரியும். எத்தனை யுகங்களானாலும் பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களைப் பார்க்கும் மைக்ராஸ்கோப் கண்கள் கொண்டவர்களாயிற்றே! 
ஆண்டாளையா தேவதாசி குலத்தில் பிறந்ததாகச் சொன்னாய் என கவிப்பேரரசு மீது பாய்ந்து பிறாண்டுகின்றன ஒரிஜினல் ஆன்மிக அரசியல் ஓநாய்கள். பேரரசின் பரம்பரைக்கே டி.என்.ஏ. டெஸ்ட் நடத்துகிறார்கள். எதிரில் நிற்கும் படைக்கு முன்னால், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போல ‘வெள்ளைக் கொடி’ உயர்த்துவது தவிர வேறு வழியில்லை கவிப்பேரரசுக்கு.
வின்னர் வடிவேலு பாணியில், ‘உன் தாய் பத்தினின்னு ஒத்துக்குறேன்’ என வருத்தம் தெரிவித்து, எவர் மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு புணுகு தடவத் தயார் எனச் சொல்லி, அடுத்தடுத்த விருதுகளுக்கு ஆபத்தில்லாதபடி காத்துக் கொண்டது கவிப்பேரரசின் சாமர்த்தியம். நம்மாளு ஒருத்தர் இத்தனை சாமர்த்தியத்துடன் இருக்கிறார். அத்துடன் எப்போதும் கலைஞரின் நண்பர் என்பதை உரக்க உரைக்கிறார் என்பதில் நமக்கும் பெருமகிழ்ச்சிதான்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் யாருக்குப் பிறந்தார் என்பது நமக்குப் பிரச்சினையல்ல. ஆண்டாளை தேவதாசி என்று யாரோ எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசிய கவிஞர் குற்றவாளி என்றால், தேவதாசி என்ற முறையை கோவில்களில் புகுத்தி, பெண்களை இழிவும் அடிமையும்படுத்தி, ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அதனைக் குலத்தொழிலாக மாற்றி வைத்த பெருங்குற்றவாளிகளை யார் அடையாளப்படுத்துவது? பேசியவரைத் தண்டிப்போம் என்பவர்கள், ஆயிரங்காலத்து அவமானத்திலிருந்து மீளமுடியாத சமூகங்களையும் பிறப்பின் அடிப்படையிலான பேதங்களையும் உருவாக்கியவர்களுக்கும் அதனைக் கட்டிக்காத்து அரசியல் செய்பவர்களுக்கும் என்ன தண்டனைத் தரப்போகிறார்கள்? ஆண்டாளை விட்டுவிடுவோம். அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆண்டுகொண்டிருப்போரை என்ன செய்யப்போகிறோம்?
வைரமுத்துவை நோக்கி ஹெச்.ராஜா வகையறாக்காளல் வீசப்பட்ட வார்த்தைகள் என்பவை சூத்திரனாக்கப்பட்ட-அதற்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் மீதும் காலங்காலமாக வீசப்படும் வார்த்தைகள். சூத்திரன் என்றால் வேசி மகன் என எழுதி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொன்ன பெரியாரும், இந்து என்றால் திருடன் என அகராதியில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டிய கலைஞரும் மதஉணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அவாள்களைவிட இவாள்கள் போடும் பெருங்கூச்சல்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
புண்படுத்தலாமா எனக் கேட்டபடி அவர்களுக்கு, நமது பின்புறத்தை வசதியாக காட்டிக் கொண்டே இருக்கும்வரை வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்.
தி.பி.2048 மார்கழி 26

No comments: