தேவதாசி குலம் குறித்து 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் - பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” என்கிறது.
தேவதாசிமுறை ஒழிப்பு தொடர்பான மசோதா, 1920களின் இறுதியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் கொண்டுவரப்படுகிறது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். புனிதத்தன்மை பெற்றவர்கள். இந்த மசோதா மூலமாக சமூக ஒழுங்கு கெடக்கூடும். சமூகத்துக்கு தாசிகள் தேவை. இவர்கள் இல்லாவிட்டால் சங்கீதம் மற்றும் பரதக்கலை அழிந்துவிடும்” என்றெல்லாம் எதிர்த்துப் பேசினார். முத்து லட்சுமி ரெட்டி கொடுத்த பதிலடி மிகவும் பிரபலம்.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் பரதநாட்டியம் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடந்தது. அப்போது பரதநாட்டிய மங்கையான சொர்ணமால்யா விழாவில் கலந்துக்கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். என் நினைவு சரியாக இருக்குமேயானால் “தாசிகள் என்போர் கடவுளர்களின் துணைவியர்” என்று சொல்லியிருந்தார். திராவிட இயக்கம் தேவையில்லாமல் அரசியல் செய்து அந்த புனித முறையை ஒழித்தது என்று பேசி, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தார்.
தினமணி விழாவில் கவிஞர் வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ‘Indian movement : some aspects of dissent, protest and reform' என்கிற நூலில், “Aandal was herself a devadasi" என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இப்போது வைரமுத்துவை யார் எதிர்க்கிறார்கள், எதற்கு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள மேற்கண்ட பத்திகள் உதவலாம்.
No comments:
Post a Comment