Tuesday, January 09, 2018

சீமானை விரட்டி அடிப்பது முக்கியமானது

யாருக்கு சாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றியும் எந்தக் கருத்தும் இல்லையோ, அவர்கள் மொழியையையும், இனத்தையும் வைத்து அந்த இடத்தை நிரப்புகின்றார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்தப் போக்கு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அனைத்து வகையிலும் தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தையும், அதன் பின்னணியில் இருந்தே அனைத்து வகையிலும் தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.
உண்மையில் சீமானுக்கு தமிழ்மக்களின் நலனில் அக்கறை இருக்குமானால், அவர் அனைவரையுமே தமிழர்கள் என்றே கருதுவாரேயானால், வீதிக்கு வந்து சாதிவெறியர்களுக்கு எதிராக களமாடட்டும்.
ஒரு வன்னிய தமிழனும், தேவர் தமிழனும், கவுண்டர் தமிழனும் பறையர் வீட்டிலும், பள்ளர் வீட்டிலும் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் கட்சிக்குள்ளேயாவது உத்தரவு போடட்டும், அதைக் கட்டாயமாக்கட்டும். இதை ஒன்றுமட்டும் செய்தார் என்றால் கூட அவரது நேர்மையை, தமிழர்கள் மீதான அவரது உண்மையான அன்பை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதைச் செய்யாமல் தமிழன், தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுவதும், சாதியை அடிப்படையாக வைத்து அனைவரையும் தமிழன் - தமிழன் அல்லாதவன் என மிரட்டுவதும் கீழ்த்தரமான பாசிச நடவடிக்கையாகும்.
ரஜினியை தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது சீமானை விரட்டி அடிப்பது. சாதியத்தை தாங்கி நிற்கும் பார்ப்பன இந்து மதத்தையும், அதனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் முதலாளித்துவத்தையும் வீழ்த்த வேண்டும் என்றால், அதனோடு தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் நாம் சமரசமற்று எதிர்த்தாக வேண்டும் - அது ரஜினியாக இருந்தாலும் சரி, இல்லை சீமானாக இருந்தாலும் சரி.

No comments: