Monday, January 08, 2018

இயற்கை விவசாயத்தின் உட்சிக்கல்கள் என்ன

இயற்கை விவசாயத்தின் உட்சிக்கல்கள் என்ன? அதன் யதார்த்த நிலை என்ன என்பது பற்றி விவசாயிகள் பலரும் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தாலும் வெளியில் பேச மறுக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக தனித்தனி அனுபவங்களை பல நண்பர்கள் பகிர்ந்து கொண்டபோதும், இன்னும் இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை வெகுவாக விவசாயிகள் மத்தியிலேயே பேசப்படவில்லை. இந்த நிலை நீடிப்பது, இயற்கை விவசாய போதகர்கள், பிரச்சாரகர்கள், பிரசங்கிகள், வழிபாட்டாளர்கள், வியாபாரிகளுக்கும் எதிராகவே முடியும். எனது தனிப்பட்ட அனுபவங்கள் சற்றே கசப்பானவை. அதே சமயம் என் அனுபவத்தை மட்டுமே வைத்து இந்த பூமியை அளக்க விரும்பவில்லை. பலரும் தங்களது அனுபவங்களை பகிரும்போதும், அதிலிருந்து மீள என்ன வழி என்று யோசித்தால் தான் பிழைத்திருக்க முடியும்.
அவ்வாறில்லாமல், எல்லாம் சொர்க்கமாக இருக்கிறது நம்பும் ஆசாமியாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்களை நம்பி ஏமாறுவோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓரளவு சுயமாக சிந்திக்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த பதிவு, அதிகாலை பஜனை பாடல்கள் இங்கே ஒலிபரப்பப்படுவதில்லை. அடுத்தவனை சுரண்டி அல்வா தின்பவர்களும் இங்கே கோஷமிட வேண்டாம். புதிதாக களம்புக விரும்பும் ஐ.டி நண்பர்களே உங்களை கிடா வெட்டி விருந்து வைக்கும் முன்பு யோசித்து செயல்படுங்கள்

பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் நம் நண்பர் அருள்... போதுமான இலாபம் கிடைப்பதில்லை, ஒருங்கிணைப்பு இல்லை, சிறிய அளவில் செய்தால் தப்பிக்கலாம், இதிலும் போட்டி & விளம்பரமெல்லாம் வந்து விட்டதாகச் சொல்கிறார். 

+நவீன நாடகக் குழுக்களைப் போல இன்னும் இயற்கை விவசாயம் வெகுமக்களுக்கு வெளியேதான் இருக்கிறது.

இன்னிக்கு வரைக்கும் தானியங்களைத்தவிர எதையும் விற்க முடியலை.
நொந்ததுதான் மிச்சம் தோழர்.
வியாபாரம்தான் பெரிய சிக்கல்.

+4 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்யும் சிலரின் ஆலோசனையின் பெயரில் நெல் பயிர் செய்கிறேன். ஒரு ஏக்கர் 8 முதல் 10 மூட்டைகள்தான் கிடைக்கிறது. 4 லட்சம் கடன்தான் மிச்சம்.

+வாங்கின நிலத்தை தண்ணி இல்லாம சும்மா போட்டு வெச்சது தான் மிச்சம்.

+விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான்.
வணிகம்தாங்க சிக்கல்.
அழுகக்கூடிய பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்தால் விற்கவே முடியாது.

தக்காளி நட்டால் அன்றே விற்க வேண்டும்.
கீரை மணிக்கணக்குதான்.
கத்தரி இரண்டு நாளுக்குள்.
இந்த ஆர்கானிக் வணிகர்கள் நடச்சொல்லி நச்சரிக்கிறார்கள்.
விளைந்தபிறகு எடுக்கச்சொன்னால் எனக்கு நாலு பாக்ஸ் போதுமென்பார்கள்.
நாற்பது பாக்ஸ் வந்திருக்கும்.
அடுத்து மார்க்கெட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின்றி, ரசாயனமின்றி விளைந்தவற்றின் உருவம், அளவு, நிறம் ஆகியவை கவர்ச்சியாக இருப்பதில்லை.
நீங்கள் ரசாயனமல்லாத முறையில் விளைவித்ததற்கு தண்டனையாக10%விலைகுறைப்பு கிடைக்கும்.
விளைச்சலும் சற்று குறைந்திருக்கும்.
உழைப்பு கூடுதல். ஆள்கூலியெனில் கூடுதல் செலவு.
உள்ளூர் கட்டில்கடை வணிகத்துக்கு மட்டும்தான் சரிவரும்.
பழைய கட்டில்கடை வியாபாரம்.
பெண்களுக்கான சிறுவாடு.
பெரிய அளவு உற்பத்தி இந்த இயற்கை வணிகர்களை நம்பி செய்வது முட்டாள்தனம்.
திருப்திக்காக என்கிறார்கள்.
திருப்திக்காக வேறு வருவாய் உள்ளவர்கள் செய்யலாம்.
விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள் என்ன செய்ய?

+இயற்கை விவசாயம் , விளைச்சல் குறைவாகவே இருக்கும் . -
-அதிக விளைச்சல் ,லாபம் என்பதெல்லாம் பேச்சளவில்தான். - நடைமுறையில் பல சிக்கல்கள் அனுபவித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். 

+இயற்கை விவசாயம் என்பதை நான் எனது தேவைக்கு மட்டும் என்று சுருக்கி ( விற்க வக்கில்லாதவன் என்ற பெயர் எடுத்துவிட்டேன் ) கொண்டு விட்டேன். வந்து நேரில் சந்தித்து பணம் கொடுத்து பொருள் வேண்டும் என்று சொன்னால் மட்டும் பயிர் செய்வது என்று முடிவுடன்.( வர போவது இல்லை )

இன்று கை கொடுப்பது என்னவோ நான்கு ஜெர்சி கலப்பின மாடும் , இரண்டு HF கலப்பின மாடுகள் , சில ஆடுகளும் தான் . 

விவசாய போராளி வாழ்க்கை முடிந்து ,உதவும் நிலையும் முடிந்து இன்று எந்த இயற்கை விவசாய போதகர்கள், பிரச்சாரகர்கள், பிரசங்கிகள், வழிபாட்டாளர்கள், வியாபாரிகளுக்கும் சிக்காமல் ஓடி ஓரமாய் உள்ளேன். களநிலவரம் வேறு ,கணிபொறி நிலவரம் வேறு , இரண்டையும் கலந்து கொஞ்சம் பிழைக்கலாம்.

களத்தில் உற்பத்தி செய்து , கணிப்பொறியில் ( முகபுத்தகம் வழியாக ) அளவாய் விற்று பிழைக்க முடிகிறது. அழுகும் பொருளுக்கு இதுவும் சாத்தியம் இல்லை .

No comments: