Monday, January 08, 2018

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன?

இயற்கை விவசாயத்தின் யதார்த்த நிலை என்ன? என்கிற கேள்விக்கு நிறைய அனுபவ பகிர்வுகள் வந்து சேர்ந்தன. கூடவே யோசனைகளும், அறிவுரைகளும், ஏளனங்களுமாக. ஏளனங்களுக்கு பதிலளித்து, அவர்களது மகிழ்ச்சியை குலைக்க விரும்பவில்லை.
சில யோசனைகளை பரிசீலிப்பது அவசியம் என்று பட்டது. அதன் குறை நிறைகளை விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றியது. சில விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அவற்றை பரவலாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
விமர்சனம்
கார், பங்களா வாங்க வேண்டும் என்று நினைப்போர் இயற்கை விவசாயத்திற்குள் இறங்காதீர்கள். இது ஒரு தவம், அனுபவம், வாழ்வியல் etc etc.
தவம் என்று நம்புவோர் மேலும் தவம் செய்து முக்தி அடைய வாழ்த்துக்கள். என்னுடைய(மற்றும் பலருடைய) எதிர்பார்ப்புகள் கார், பங்களா வாங்குவது பற்றியல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாளுக்கு உங்களால் துணிமணி இயற்கை விவசாயத்தில் சம்பாதித்த பணத்தில் வாங்கித்தர இயலுமா? உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு தங்குதல், உணவு, போக்குவரத்து செலவுக்கு உங்ககளால் இயற்கை விவசாய லாபத்திலிருந்து ஆதரவளிக்க இயலுமா என்பது பற்றியே. கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டுவது பற்றி பிறகு கவலை படலாம், வட்டியே இல்லாமல் கடன் கொடுத்தால் கடனை அடைக்க முடியுமா என்பது பற்றியே இந்த விவாதம்.
யோசனைகள்
1) பல பயிர் சாகுபடி: ஒரே பயிரை பயிரிடாமல், பல பயிர்களை பயிரிட்டால் ஒவ்வொன்றிலும் குறைவான உற்பத்தி மற்றதை சமன் செய்யும். அதை சந்தையில் எளிதாக விற்க முடியும்.
2)விவசாயியே விற்பனையாளர்: ஒவ்வொரு உழவனும் விற்பனையாளாக மாற வேண்டும். முகநூல் வாட்ஸாப் போன்ற தொடர்பு ஊடகங்கள் வழியாக தங்கள் விற்பனையை மேம்படுத்தி கொள்ள இயலும். லாபமும் சம்பாதிக்கலாம்.
3) ஒருங்கிணைந்த பண்ணையம்: வெறும் பயிரையே நம்பி இருக்காமல், ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் விவசாயி மீண்டு வரமுடியும்.
மேற்படி யோசனைகளின் குறை நிறைகளை நண்பர்கள் தங்கள் அனுபவத்தை வைத்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் தங்களது கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.

No comments: