Friday, January 12, 2018

ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் குடிப்பது

தனிமனித சுதந்திர அடிப்படையில் குடிப்பது பெரிய தவறாகாது.
கொஞ்சம் மதுவை எடுத்து உடம்பை புத்துணர்ச்சி அடைய வைப்பதில் பெரிய பிரச்சனையில்லைதான். ஆனால் ஆணாதிக்கம் மிகுந்த இந்தியாவில் அதற்கான அர்த்தம் வேறாக இருக்கிறது.
ஆண்களின் குடி பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.
இந்தப் பார்வையைத்தான் இளைஞர்களிடம் திரும்ப திரும்ப சொல்லி ஏற்படுத்த வேண்டும்.
ஒருவருடம் முன்பு கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அச்சமயத்தில் என்னை இரண்டு நாட்களாக தூங்கவிடாமல் செய்தது.
ஒரு அப்பா தன் ஏழுவயது மகனுடன் சிறுநகர பேருந்தில் இன்னொரு பெருநகரத்துக்கு பயணம் செய்வதற்காக ஏறியிருக்கிறார்.
அவர் குடித்துப் பழகியவர். பொதுவாக குடித்து ரசித்தவர்கள் இரவு பஸ் பிரயாணத்தில் குடித்து விட்டு தூங்க விரும்புவார்கள். இந்த அப்பாவும் அதை விரும்பியிருக்கிறார். மகனை எப்படி மதுக்கடைக்கு அழைத்துச் செல்வது. முடியாது.
“நீ இதோ இங்க இருந்துக்க. அப்பாவோட சீட்ட யாருக்கும் கொடுத்திராத கேட்டியா. அப்பா இதோ ஒண்ணுக்கிருந்துட்டு வந்திர்றேன் என்ன?” என்று சொல்லிவிட்டு மதுவாங்கி அருந்த போயிருக்கிறார்.
பையன் சரி என்றிருக்கிறான். அப்பாவின் பையை இருக்கையில் பிடித்துக் கொள்கிறான்.
இறங்கி அப்பா கண் மறைவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். உருவம் மறைந்ததும் பயம் வருகிறது. அப்பா இங்கேதானே போயிருக்கிறார்
வந்துவிடுவார்.
இங்கே பார்க்கிறான் அங்கே பார்க்கிறான். அப்பா அருகே இருக்கும் போது சாதரணமாக தெரிந்த மனிதர்கள் அனைவரும் அப்பா அருகில் இல்லாமல் இருக்கும் போது பெரிய பெரிய உருவங்களாகவும், பயமுறுத்துபவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் தெரிகிறார்கள்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறான். அப்பா வரவில்லை. தன் கால்களுக்கு கீழே இருக்கும் கடலைத் தொலிகளை, பஸ் சீட் கிழிசலை, பஸ் கம்பியின் துருவை, அத்துருவில் இருந்து கிளம்பும் உலோக வாடையை, சீட் ரிவெட்டுகளை, கண்ணாடிகளை கவனிக்கிறான். ஜன்னல் வழியே பார்க்கிறான். அப்பா வரவில்லை.
வெளியே பழவண்டி, எச்சித்துப்பல்,காய்ந்த சிறுநீர் குட்டைத்தடங்கள், உணவங்கள், டீக்கடை, டீக்கடையில் கத்தி பேசும் கண்டக்டர் டிரைவர்கள் என்று பார்த்து விட்டு அப்பாவைப் பார்க்கிறான். அப்பா வரவில்லை.
அப்பா எப்படி வராமல் போவார். வந்துவிடுவாராய் இருக்கும். இதோ இந்த கூட்டத்தில் அப்பா அப்படி தோன்றுவார். இதோ எதுவுமில்லாமல் இருக்கிறது. அதில் அப்பா அப்படி அப்படித்தான் சட்டென்று சிரித்தபடி வந்துவிடுவார். அப்படி நினைக்கிறான் அவன்.
எல்லா பொருட்களும் மனிதர்களும் அவன் கண்களில் இருந்து மறைந்துவிட்டன. இனிமேல் ரசிப்பதற்கு எதுவுமில்லை என்று அவன் மூளை அப்பதட்டத்தில் நினைத்துவிட்டது. அங்கே ஒரு வெட்ட வெளி மட்டும்தான் இருக்கிறது. வெட்டவெளியில் அப்பா தோன்றுகிறாரா இல்லையா என்பது மட்டும்தான் அவன் கவலையாகிவிட்டது. ஒரு சுற்றும் உலகத்தில் அவனிருந்தான்.
“என்ன தம்பி டேய் ரொம்ப நேரமா இங்க இருக்க. உன் கூட யாரு வந்தா. தனியா இருக்கியேன்னு கேட்டேன்”
என்கிறார் பக்கத்தில் உள்ள சீட்காரர்.
“அப்பா அப்பா வருவாங்க”
“அப்ப எங்குன போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
அவர் அமைதியாகிவிட்டார். ஏழு வயது பையனுக்கு இப்போது கண்கலங்க ஆரம்பித்துவிட்டது. மெல்ல முனகிக் கொண்டு அழக் காத்திருக்கிறான். பஸ்ஸில் கண்டக்டர் ஏறிவிட்டார். இவனைப் பார்க்க ஏதோ வித்தியாசம் தெரிய, அருகில் வந்ததும் பையன் அழ ஆரம்பித்துவிட்டான். மற்றவர்கள் எழுந்து என்ன என்று பார்த்ததும் விசாரித்ததும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.
“அப்பாவ காணோம். அப்பா வரல”
“எங்க போயிருக்காரு”
“பாத்ரூமுக்கு”
“யூரின் போக இவ்வளவு நேரமாகாதே. போன் நம்பர்
தெரியுமா”
“.. தெரியும்”
“சொல்லு”
“84.................”
போன் அடித்தால் நாட் ரீச்சபிள் வருகிறது. இன்னும் பலரும் போன் அடிக்க அப்போதும் நாட் ரீச்சபிள் வருகிறது.
பையன் இன்னும் அழ ஆரம்பித்துவிட்டான்.
“தம்பி வேற யாராவது நம்பர் தெரியுமா”
“சித்தப்பா நம்பர் ஞாபகமிருக்கு கொஞ்சம்”
“அவுங்க எங்க இருக்காங்க”
“இங்கதான் அவுங்க வீட்டுக்குதான் வந்தோம்”
“சரி சொல்லு”
“...84.........”
போன் செய்கிறார்கள்.
“நீங்க பையனோட சித்தப்பாவா. இங்கே இப்படி விஷயம்”
“பையன அப்படியே வெச்சிருங்க சார். நான் இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவேன்”
“சீக்கிரம் வாங்க சார். பஸ்ல இருந்து இறக்கியும் விட மனசில்ல. பையன் ரொம்ப அழறான். நீங்க வந்துட்டா நாங்க நிம்மதியாயிருவோம்”
“இதோ பைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன் சார். பத்து நிமிசம்தான்”
பையன் அழுது கொண்டே இருக்கிறான்.
“அழாதப்பா சித்தப்பா வந்திருவாராம்”
“அப்பா எங்க”
“சித்தப்பாவ வந்துட்கிட்டே இருக்காரு”
“அப்பா எங்க ”
“வருவாரு அப்பா. சித்தப்பாவும் வந்துகிட்டே இருக்காரு”
சித்தப்பா ஒடிவந்து பஸ்ஸுக்குள் ஏறுகிறார். போய் பையனை அணைத்துக் கொள்கிறார்.
சித்தபாவைப் பார்த்ததும் பையன் ஒவென்று அழுகிறான்.
அவன் முகத்தின் சதையெல்லாம் திமிருகிறது. அந்தத் சதையைத் தாங்கும் எலும்புக் கூட திமிருகிறது. கண்கள் சுருங்கி அந்த பயந்த முகத்தில் காணாமல் போகிறது. எங்கிருந்தோ கண்ணீர் வருவது மாதிரி இருக்கிறது. பையனை இறக்கி கீழே இறங்க பையை எடுக்கும் போது அப்பா அங்கிருந்து ஒடிவருகிறார்.
அசடு வழிந்தபடி ஒடிவருகிறார். அவர் எங்கு போய்விட்டு வருகிறார் என்று அனைவருக்கும் தெரியும். பஸ்ஸில் உள்ளவர்கள் அனைவரும் கண்டபடி திட்டுகிறார்கள்.
தம்பிக்கு அண்ணனைத் திட்ட வருகிறது. ஆனால் சுற்றி உள்ளவர்கள் திட்டும் போது வேறு வழியில்லாமல் அண்ணனைக் காப்பாற்றி விடுகிறார். பஸ் எடுக்கும் நேரம் வந்தாயிற்று. அப்பா பையன் அருகே அமர்ந்து கொள்கிறார்.
பையனிடம் எதுவும் பேசவில்லை.
பையன் அப்பா தோளில் சாய்ந்து கொள்கிறான். பையன் தோளில் அப்பாவின் கைகள் விழுந்திருக்கின்றன. கூட்டம் அவரவர் இருக்கையில் அமர்ந்து பேருந்து ஒட்டத்தை ஆரம்பிக்கும் போது “நாதான் வந்திருவேன்னு சொன்னேன்லால. பிறகு எதுக்கு அழுது இவ்வளவு கூட்டத்த கூட்டினா நீ ..பொட்டப்பயல. பொம்பளையால நீ. இப்படியால அழுவ. பொட்டப்பயல” என்று சொல்லி அவன் தலையில் தன் கைமுட்டியை மடக்கி இரண்டு கொட்டு கொட்டி விட்டிருக்கிறார்.
அப்பா காணாமல் போன துன்பத்தை விட அந்த வலி கொடுக்கும் துன்பம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால் அந்த மனஇறுக்கமும், பதட்டமும் அவனுக்குள் படிந்து விட்டிருக்கலாம்.
தன் பையனின் பர்சனாலிட்டி வளர்ச்சியில் எவ்வளவு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறோம் என்று தெரியாமல் அந்த குடிக்கார அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார்.
நெடுநாள்வரைக்கும் அப்பா வீட்டுக்குள் வரும் போது ஒருவிதமான நடுக்கம் பையனுக்கு ஏற்பட்டு பின் சரியானது என்று கேள்விப்பட்டேன்.
இளைஞர்களே குடித்துப் பழகாதீர்கள். எதற்காகவும் எப்போதும்
ஏதாவது ஒரு இடத்தில் அது துன்பம் தராமல் போகவே போகாது.

No comments: